பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

392 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ராஜாங்கத்தோரைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென ஓர் பிரோசீடிங் முடித்திருப்பதாக விளங்குகின்றது.

இக்காங்கிரஸ் கமிட்டியில் சேர்ந்துள்ள கனவான்கள் யாவரும் மிக்க வாசித்தவர்களும், விவேகமிகுத்த மேலோர்களுமாயிருந்தும் இராஜ துரோகிகளை தண்டிக்க வேண்டுமென்று ஏற்படுத்தியுள்ள சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென முயல்வது யாதுக்கோ விளங்கவில்லை.

இவர்களுக்கே ஓர் இராஜாங்கம் உண்டாகி இவர்களுக்குள்ளோர் இராஜதுரோகிகள் தோன்றுவார்களாயின், அவர்களை தண்டிக்காமல் விட்டுவிடுவார்களோ, அவர்களை தண்டித்து சீர்திருத்தத்தக்க சட்டங்களை வகுக்கமாட்டார்களோ. அவற்றை இவர்களே ஆலோசிக்காது பிரிட்டிஷ் ஆட்சியார் வகுத்துள்ள இராஜத்துரோகிகளைத் தண்டிக்கும் சட்டத்தை எடுத்துவிடவேண்டுமென முயல்வது வீணேயாம். இராஜதுரோகிகளை தண்டிப்பார்களன்றி இராஜ விசுவாசிகளைத் தண்டிக்க மாட்டார்கள். கள்ளனுக்கு சிறைச்சாலையுங் கொலைஞனுக்குத் தூக்கும் நிறைவேற்ற வேண்டுமென சட்டம் வகுத்திருக்கின்றார்கள்.

தேசத்திற் கொலைஞர்களுமில்லை, கள்ளர்களுமில்லை சட்டத்தை எடுத்துவிடவேண்டுமென்றால் எடுக்கலாமோ. அவ்வகை எடுக்கவேண்டுமென்று கூறுவதும் நியாயமோ, இத்தகைய ராஜாங்க சீர்திருத்தத்தில் கண்ணோக்கம் வைத்துழைக்கும் காங்கிரஸ் கமிட்டியார், தாழ்ந்த சாதியோனைத் தொழுவில் மாட்டி வதைக்க வேண்டும், உயர்ந்தசாதியோனை சத்திரத்தில் உழ்க்காரவைக்க வேண்டுமென்னுங் கிராமாதிகாரிகளின் சட்டத்தை உய்த்து நோக்கநேரமில்லை போலும். மனுமக்களுள் மனு மக்களை சுத்தநீரை மொண்டு குடிக்கவிடாமல் அசுத்த நீரை மொண்டுகுடித்து அவதிக்குள்ளாக்கி வைப்போரின் அநீதிச் செயலை அறிந்தும் அறியாதவர்கள் போல் சுயப் பிரயோசனத்தை நாடுவதழகாமோ. உள்சீர்திருத்தத்தில் உழைப்பாளிகளை உறுதிபெறச் செய்யாது ஊரைவிட்டோட்டியும் உள்ளவர்களைத் தாழ்ந்த சாதியென வகுத்தும் பாழடையச் செய்வது நியாயமாமோ.

உலகத்தில் எத்திக்கிலும் இல்லா சாதிக்கட்டுப்பாட்டை மெய்யென்று எண்ணியிருக்கின்றார்களோ அன்றேல் பொய்யென்று எண்ணியிருக்கின்றார்களோ விளங்கவில்லை. அக்கட்டுப்பாட்டைப் பொய்யென கற்றறிந்திருப்பரேல் இத்தேசத்து மக்களுள் ஆறுகோடி மக்களைத் தாழ்ந்த சாதி எனக் கூறி அல்லடையச்செய்யும் அவதிகளை அகற்றல்வேண்டும்.

அங்ஙனமின்றி சாதிக் கட்டுப்பாட்டை மெய்யென்றும் அதை அனுஷ்டிக்க வேண்டுமென்று எண்ணியுள்ளாராயின், இவர்கள் எடுத்துள்ள முயற்சிகள் யாவும் விழலுக்கிரைத்த நீர்போலும் உமிகுத்திகை சலிப்பது போலுமே முடியும். தேசமக்களின் சீர்கேட்டையும் அவர்களது குறைவையும் உய்த்து நோக்காது இராஜாங்க சீர்திருத்தக்காரர்களெனக் கூட்டங்கூடுவதும் பெரும் பெருங் காரியங்களைப் பேசுவதும் வீணேயாம்.

சாதி பேதமென்னும் பொய் மூட்டையை இத்தேசத்தோர் சுமந்துள்ள வரையில் தேச சீர்திருத்தக் காரியம் ஒன்றேனும் சீர்பெறாதென்பது சத்தியமேயாம். சிலர் ஐரோப்பியரிடத்தும் சாதிபேதமுண்டு அவர்களும் சகலருடன் கலந்து சாப்பிடுகிறதில்லை என்று கூறுவதுமுண்டு, அக்கூற்று அந்தஸ்து பேதமேயன்றி சாதிபேதமாகாவாம். அதாவது ஓர் கர்னல் உத்தியோகத்திலிருப்பவர் ஒரு சோல்ஜருடன் கலந்து உட்கார்ந்து புசிப்பெடுக்கமாட்டார். ஆனால் அதேசோல்ஜர் சமைத்து கர்னலுக்கும் போடுவாராயின் அதை பேதமின்றி புசிப்பார். அத்தகைய சுத்த குணம் இத்தேசத்தோருக்குண்டோ கனவிலுங்கிடையாவாம். அந்தஸ்து பேதத்திற்கும், சாதிபேதத்திற்கும் அனந்த வித்தியாசமுண்டு. அதை நமது காங்கிரஸ் கமிட்டியார் கவனித்து தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களை நாடி ஏற்படுத்திக்