பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xlviii / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஆராய்ச்சிகளின் போக்கில் தோன்றிவரும் இம்மாறுதல், சமூகத்தில் வளர்ந்துவரும் முரண்பாடுகளின் அல்லது சிக்கல்களின் நிர்ப்பந்தத்தினால்தான் என்பது தெளிவு, ஓர்முக, ஒருதலைப்பட்சமான வரலாற்றின் அடிப்படையில் எழுப்பப்பட்ட அரசியல் பிரச்சினைகளும் அவைகளின் தீர்ப்புகளும், சிந்தாந்தங்களும் அவற்றின் குழறுபாடுகளும், வளர்ச்சித்திட்டங்களும் அவைகளின் ஏலாமையும் சமூகத்தைத் திரும்பமுடியாதவொரு சங்கடத்தை நோக்கி இழுத்துச் செல்வது ஓர் காரணம். மற்றுமொன்று சட்ட அளவில், காலகட்டத்தின் நிர்ப்பந்தத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நவீன இந்தியாவின் சமத்துவக் கொள்கையைப் பயன்படுத்தி இதுகாறும் சமூக இருட்டடிப்பில் இருந்து வந்த பெரும்பான்மை மக்களின் வெளியேற்றவெழுச்சி. இவ்விரண்டு காரணங்களாலும் வரலாற்றை மறுபரிசீலனை அல்லது மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. வரலாற்றின் இருண்ட கிடங்குகளுக்குள் இதுவரை தேவையற்றவை, மீந்தவை, பயனற்றவை ஆகவே இல்லாதவை என்று விடப்பட்ட எண்ணக் குவியல்களையும் பல்வேறு சமூக சக்திகளைப் பிரதிபலிக்கும் இயக்கங்களையும் அவற்றின் தலைமைகளையும் தேடிப்பிடித்து, தட்டி எடுத்து, மாசு - தூசி துடைத்து உருவாகி வரும் புதிய வரலாற்றில் அவையவைகளுக்கான நியாய நிலையில் நிறுத்துவதும் சமூக மாற்ற முயற்சிகளின் ஓர் அங்கமே. இவ் விதமாகப் புதியதோர் வரலாறு, அறிவார்ந்த - நெறியமைந்த சமூகம் படைக்கும் துணைக்கண்டத்தளவிலான முயற்சிகளுக்கு ஓர் சிறிய தூண்டுகோலே இந்த அயோத்திதாசர் சிந்தனைகள்.

நவீன இந்தியாவின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவர் பண்டிதர் அயோத்திதாசர் காலனியாதிக்கத்தின் இக்கட்டான காலகட்டமாகிய பிந்திய பத்தொன்பதாம், முந்திய இருபதாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இவர் பண்டைய இலக்கிய - சமூக - சமய - வரலாற்று ஆய்வுகளின் அடிப்படையில் புதிய சமுதாயம் நிர்மாணிக்கும் மகத்தான பணியில் ஈடுபட்டிருந்தார். நவீன இந்தியாவில் பரவலாக எழுந்த சமத்துவம், பகுத்தறிவு, நவீனத்துவம் முதலாய கொள்கைப்போக்குகளில் தமிழக அளவில் தந்தை பெரியாருக்கும், இந்திய அளவில் அண்ணல் அம்பேத்காருக்கும் முன்னோடியாக விளங்கினார்.

சமயம், சமூகம், வரலாறு, இலக்கியம், அரசியல் பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகள் ஒரு தனி மனிதனின் கருத்துகளாக மட்டும் அமையாமல் அகன்ற சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியையும் எழுச்சியையும் ஏற்படுத்தும் சித்தாந்தங்களாகச் சிறந்தன. எனினும் தமிழக - இந்திய வரலாற்று ஆய்வேடுகளில் அயோத்திதாசரைக் காண்பது அரிது. இவ்வுண்மை சமூகத்தில் அறிவும் அதிகாரமும் என்றும் இயைந்தே செயல்படுகின்றன என்பதற்கு ஆதாரம்.

அயோத்திதாசரின் சிந்தனைகள் அவரால் 1907 முதல் 1914 வரை ஏழாண்டுகள் நடத்தப்பட்ட தமிழன் என்னும் வார இதழில் எழுத்து வடிவம் பெற்றன. இத் தமிழன் இதழ்கள் முறையாக நூலகங்களிலோ, ஆவணகங்களிலோ பாதுகாக்கப்பெறாமல் பண்டிதரின் கருத்து வாரிசுகளிடம் சிதறிக்கிடக்கின்றன. ஏறக்குறைய நூற்றாண்டைக் காணவிருக்கும் இவ்விதழ்களின் நிலையைப்பற்றிக் கூறவேண்டிய தேவையில்லை. இந்நிலை தொடருமாயின் இன்னும் பத்தாண்டுகளில் அவை இல்லாமல் அழிந்து போய்விடுமென்பது நிச்சயம். இவற்றைத் தேடிக் கண்டுபிடித்து, கோவைப்படுத்தி அதில் அயோத்திதாசரால் எழுதப்பட்ட கட்டுரை, தொடர் கட்டுரை, சங்கைத் தெளிவு முதலியவைகளை காலக்கிரமத்தின்படி, இதழாதாரத்துடன், அரசியல், சமூகம், சமயம், இலக்கியம் என்று பாகுபடுத்தி இரு தொகுப்புகளாக இங்கே வெளியிடப்படுகிறது. தொகுப்பாளரின் முயற்சியால் ஏழாண்டுகளுக்குரிய அனைத்து இதழ்களும் ஏறக்குறைய கோவையாய் கிடைத்துவிட்டது தமிழகம் செய்த பெரும்பேறு என்றே கருதவேண்டும். நான்கு பாகுபாடு வாசிப்போர் வசதிக்காக ஏற்பத்திக்கொண்டயுக்தி என்று மட்டுமே கொள்ளல் வேண்டும். இதழ்களில் சில சிதைந்த நிலையிலேயே கிடைத்தபடியால் கட்டுரைகள் பலமுறை மூலப்பிரதிகளோடு ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டு எங்கெங்கு விடப்பட்டுள்ளனவோ