பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கொடையென்றும் துக்க மாற்றுந் துரையென்றும், இருளை அகற்றும் ஒளி என்றும் காக்கும் இறை என்றும் கொண்டாடுவார்கள்.

இவ்வகை ஆறங்கங்களும் இருபத்தைந்து அறச் செயல்களும் அமைந்த ஆளுகை உலகத்தில் எங்கு நடந்திருக்கும் என்றும் எங்கு நடைபெற்று வருகின்றது என்றும் ஆராயுங்கால் இத்தகைய நீதிநூற்களை தமிழ்பாஷையில் வரைந்துள்ளவர்களாகும் சாக்கையர்களின் வம்மிசவரிசையில் நடைபெற்றிருந்து மிலேச்சர்களென்னும் ஆரியர்களால் நிலைகுலைந்துவிட்ட போதிலும் தற்காலம் நமது தேசத்தை ஆண்டுவரும் ஆங்கிலேயரிடத்தும் ஜப்பானியரிடத்தும் அமெரிக்கர்களிடத்தும் இன்னிதிகள் நிறைவேறி வருகின்றது.

- 1:6; சூலை 24, 1907 -

ஆனால் நம்முடைய தேசத்தில் பௌத்தர்கள் அரசாங்கத்திற்குப் பின்பும், மகமதியர் அரசாங்கத்திற்கு முன்பும் ஓர்த் தமிழ் அரசாங்கம் இருந்ததாக வழங்குகின்றது.

அவ்வரசனுடைய ஆளுகையில் தன்னுடைய சபாகண்டத்தில் எப்போதும் தமிழ் வித்துவான்கள் சூழ்ந்திருக்கவேண்டுமென்றும் மந்திரி முதல் காவற்காரன் உட்பட ஒவ்வொருவனும் தமிழ் செவ்வனே கற்று வித்துவான்களாய் அரசனிடஞ்சென்று பேசவேண்டிய சங்கதிகள் யாவும் வெண்பா, விருத்தம், கலித்துறை, பல்லவச்சீர் முதலியப் பாடல்களால் தெரிவிக்கவேண்டியதென்றும் அங்ஙனம் வாசிக்காதவர்களை அரண்மனை உத்தியோகத்தில் வைக்ககூடாதென்னும் ஆக்கியாபனை வெளியிட்டிருந்தபடியால் ஒவ்வோர் உத்தியோகஸ்தர்களும் தங்கடங்கள் சங்கதிகளைத் தெரிவிக்க வேண்டுமாயின் பாடல்களால் தெரிவிப்பது வழக்கமாயிருந்தது.

இவ்வகை நிகழ்ந்துவரும் ஓர் நாள் இராணிக்கு கருப்பை வேதனைத் தோன்றியுள்ளதை அரசனுக்குத் தெரிவிக்குமாறு தோழிப்பெண் சென்று முன்னின்று சங்கதியை வெண்பாவிற் சொல்லலாமா, கலித்துறையில் சொல்லலாமாவென்று எண்ணிக்கொண்டு அரசன் முகத்தைத் தோழி பார்த்துக்கொண்டும், தோழியின் முகத்தை அரசன் பார்த்துக்கொண்டும் காலம் போக்கி “கண்ணுக்கினியகடையாட்டி, கருப்பை நோய், மண்ணிற்கிடந்து மடிகின்றாள்" என்றவுடன் அரசன் கோபித்து நீ சொல்வது வெண்பாவா, கலிப்பாவா என்றான். அரசே, வெண்பா என்றாள். வெண்பாசீர் சிதைந்த காரணம் என்ன என்றான், அரசே, அவசரம் என்றாள். அவசர வெண்பா உனக்குக் கற்பித்தவன் யார் என்றான். அப்பையரென்றாள். அரசன் வேவுகனை அழைத்து,

வேவுகனே வெகுவிரவிற்சென்று கூடம் / வித்துவான் அப்பையன்றனையழைத்து
மேவுமென் முன்னிலையில் கொண்டுவந்தால் / வேணவிசாரிணையுண்டு விவரமாக.

என்று சொல்லிப் பேசாமலிருந்தான். அதை உணர்ந்த வேவுகன் அரசனை நோக்கி விருத்தத்திற்கு இன்னும் இரண்டு சீர் குறைகிறதே என்றான். அரசன் இஃது அவசர விருத்தம் நீர் உடனே செல்லுமென்றான். தங்கள் சபையிலுள்ள வித்துவான்கள் ஆசிரியவிருத்தம் கலிவிருத்தம், மட்டுவிருத்தம் கற்பித்தார்களன்றி எனக்கு அவசர விருத்தம் கற்பிக்கவில்லையே என்றான். இவ்வகைக் காலப்போக்கில் இரண்டுநாழிகை கழிந்து இராணிக்கு அதிக நோய்க்கண்டு இன்னொரு தோழி ஓடிவந்தாள். அவள் வந்து நின்று,

அதிநோய்க்கண்டு அவ மடைகின்றாள் / பதியதையறியா பான்மயதென்னை
துதியதி நின்றோந் துரிதமாய்வந்து / சதிபடு நோய்க்குத் தகுமருத்துவமே.

என்றாள். அதைக்கேட்ட அரசன் தகுமருத்துவமே என்று முடித்தால் நான் மருத்துவஞ் செய்கிறதா, மருத்துவன் மருந்தளிப்பதா யாதும் விளங்காமல் முடிப்பாவின் எழுவாய்ப் பயநிலைக் கெட்ட காரணம் யாது என்றான்.

இவ்வீண் காலத்தால் அரணிக்கு மார்படைத்து சோர்ந்துவிட்டவுடன் தோழிகள் யாவரும் அரசனிடம் ஓடிவந்து பாக்களொன்றும் கூறாது இராணிக்கு மாரடைத்துக்கொண்டன் என்றார்கள்.