பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் /7


அதைக்கேட்ட அரசன் இராணியைப்போய் பார்க்காமல் வித்துவான்களிடம் சென்று நின்றவுடன் சகல வித்வான்களும் எழுந்து தாங்கள் இராணியை போய்ப் பாருங்கள் என்றார்கள்.

அரசன் வித்துவான்களை நோக்கி பாடல்களால் சங்கதிகளை விளக்கவேண்டும் என்று நீங்களே கற்பித்து தற்காலம் வசனமாகச் சொன்னக் காரணம் என்ன என்றான். இராணியின் ஆபத்தே காரணம் என்றார்கள்.

ஆபத்துக்கில்லா வித்துவான்கள் சுகத்துக்கிருப்பதில் பயன் யாது என்றான்.

பாட்டின் சுகத்தைக் கேட்டிருப்பதே பயன் என்றார்கள்.

முதல்வந்த தோழி வெண்பாவை சங்கரா பரண இராகத்தில் பாடவேண்டியிருக்க, தோடி இராகத்திற் பாடினாளே இதுதானோ பயன் என்றான்.

பகல் நாழிகை இருபதாகையால் தோடிக்கு காலமென்று பாடினாளாக்கும். தாங்கள் இராணியைப் பாருங்கோள் என்று அவசரப் படுத்தினார்கள். அரசன் சென்று இராணியைப் பார்க்குங்கால் ஐயமேற்கொண்டு பிரசவம் தடையுற்றது. தாமத மருத்துவத்தால் சிசுவும் நசிந்து தாயும் சுகயீனமுற்றாள்.

- 1:10; ஆகஸ்டு 21, 1907 -

துன்பங்களைக் கண்ட அரசன் (வரிகள் தெளிவில்லை)

என்று முடிக்குமுன் அரசன் வேவுகனைநோக்கி உன் பாடலின் பல்லவம் அனுபல்லவத்தை தாவியதோவென்றான்.

இல்லை என்று சொல்லிக்கொண்டு குதிரையை எட்டிப்பார்த்தபோது முற்றிலும் எறிந்து கீழேவிழக்கண்ட வேவுகன்,

முற்று மெறிந்துபோச்சு குதிரையாங்கு
முற்று மெறிந்து போச்சு.

என்று சொல்லுமுன் அரசன் வேவுகனை அதட்டி நீர் முந்தி சொன்ன காம்போதி முடிந்து போச்சா என்றான்.

அரசே, என் காம்போதி முடிவதற்குமுன் குதிரை முடிந்துவிட்டதென்றான். குதிரையை முடிப்பதற்கா இந்தப்பாடல் கற்றுக்கொண்டீர்கள் என்றான். அரசே, பாடல்களை நன்றாய்க் கற்றிருப்பவர்களைத்தான் அரண்மனை உத்தியோகத்திலும் ஆஸ்தான உத்தியோகத்திலும் வைக்கவேண்டும் என்று தாங்கள் ஆக்கியாபித்திருப்பதினால் பாட்டைக்கற்பதே பெரிதென்று எண்ணி செய்கைகளை மறந்து இராணியும் சுகயீனமானார்கள். மகவும் மடிந்து பட்டத்துக் குதிரையும் மாய்ந்ததே என்றான். வேவுகனே, இது என்னுடைய கருத்தல்ல, அப்பையர் போதனை என்றான். அப்பையர் வயிறுபிழைக்க அவர் வித்தையைத் தேடிக்கொண்டார். தாங்கள் நஷ்டமடைந்தீர், அப்பையர் நஷ்டமடைந்தாரா என்றான்.

அரசன் கொட்டாரத்தருகிற் போய் குதிரை வெந்து மடிந்திருப்பதைக் கண்டு அப்பையனை அழைத்து வாருங்கோள் என்றான். அரணியின் சுகயீனமும் மகவை மடிவும் குதிரை மாய்வுங்கண்ட அப்பையன் அரசனைக்கண்டால் அவதி நேரிடும் என்று அப்புறமே ஓடிவிட்டான். அதையறிந்த அரசன் மந்திரிகளை வரவழைத்து இனிப் பாடல்களால் சொல்லும் சங்கதியை நிறுத்தி வழக்கம்போல் அவரவர்கள் அலுவல்களை நடத்திவரும்படி உத்திரவளித்தான்.

அதுமுதல் அரசகாரியாதிகளும் குடிகளின் விசாரிணையும் முன்போல் நடந்து சகலரும் சுகமடைந்தார்கள்.

ஒருவன் வயிறுபிழைக்க அரசரையும் குடிகளையும் கெடுத்துப் பாழக்குவதும் உண்டு. அவ்வகை மிலேச்சர்களை எவ்வரசாட்சியில் கண்டாலும் அவர்களை அங்கு தங்கவிடாமல் துரத்துவதுடன் அவ்வகையார் வித்துக்களுக்கும் ஆஸ்தான உத்தியோகங்கள் கொடாமல் தடுப்பதே அரசாட்சிக்கு நிலையாம். இத்தகையோர் குணாகுணங்களை ஆராய்ச்சிச்செய்யாமல், ஐயா மெத்தப்படித்தவர் சகலகுணம் உடைத்தவர் என்று சேர்த்துக்கொள்ளுவார்களானால்.

- 1:14; செப்டம்பர் 13, 1907 -