பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

512 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அதற்குப் பணஞ் சேர்க்க வேண்டிய ஏதுக்களையுஞ் செய்து அவர்களுக்குள் விவேக விருத்தி பெறும் வழிவகைகளைத் தேடி வருகின்றார்கள். அத்தகைய நல்லெண்ண மிகுத்தோரை இவர்கள் கூட்டி வீண்வார்த்தைகளைப் பேசிவருவதுடன் மகமதியர்களும் சுயராட்சியம் விரும்புகிறார்கள் என்னும் பிரளியை உண்டு செய்வதுடன் தங்கள் பத்திரிகைகளிலும் வரைந்து அவர்களுக்கும் தூண்டுதலை உண்டு செய்து வருகின்றார்கள்.

இத்தகையாயக் கூட்டம் நடைபெறவும் மற்றய மநுக்கள் பார்த்திருக்கவுமாயின் இப்போது முன்னேறி சுகச்சீர் பெற்று வரும் மக்கள் யாவரும் சீர்குலைந்தே போகுங்காலம் வந்துபோம். ஆதலின் தேசவாசிகள் கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியார் இதுகாரும் செய்துவரும் பேருபகாரங்களுக்குப் பிரிதியுபகாரஞ்செய்யாவிடினும் அவர்களுக்கு நன்றியறிதலாய இராஜ விசுவாசத்தில் நிலைப்போமாயின் இன்னும் சகல குடிகளும் சுகச் சீர் பெற்று முன்னேறுவோம். அங்ஙனமின்றி தங்கள் தங்கள் சுயகாரியங்களை நாடி நிற்குங் கூட்டத்தோர்களுடன் சேருவதாயினும் கூடுவதாயினுமுளதேல் தேசஞ் சீர்கெடுவதுடன் தேசமக்களுஞ் சீரழிவது நிட்சயமாம். இராஜாங்க சட்டங்களை நோக்கி நிற்கும் கூட்டங்களை வெறுத்து தேச சீர்திருத்தப் பொதுநலக் கூட்டங்களை நாடி நிற்கவேண்டுகிறோம்.

- 7:33: ஜனவரி 21, 1914 -


317. அரசாங்கத்தோரால் குடி விருத்தியடைகின்றதா அன்றேல் இத்தேச நூதன மதத்தோர்களால் குடி விருத்தியடைகின்றதா

இந்திய தேசத்தில் இந்திரர் தன்மமாம் புத்ததன்மம் பரவியிருந்தவரையில் சமணமுநிவர்களால் குடிகள் யாவருக்கும் மது மாமிஷங்களை அகற்றி சீலத்தில் நிலைக்குமாறு போதித்து அவைகளையே ஓர் விரதமாகக் கொண்டொழுகும் வகையில் விடுத்திருந்தார்கள். அதனால் மனுமக்கள் யாவரும் சுத்த சீலக்கியான விருத்தியினின்று வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் பெருகி, குரு விசுவாசம் இராஜ விசுவாசத்தில் நிலைத்து அவரவர்கள் அறிவின் விருத்தியை கல்வியிலும் கைத்தொழிலிலும் விவசாயத்திலும் வளர்த்து சருவ சீவர்களையும் தங்களைப்போல் கார்க்குங் சீவகாருண்யமும் சுயக்கியானம் உண்டாகி தேசத்தைச் சிறப்புறச் செய்து வந்ததுமன்றி மக்களும் ஒற்றுமெயுள்ள வாழ்க்கையால் சுகசீவிகளாக வாழ்ந்து வந்தார்கள்.

அத்தகையாய சுகவாழ்க்கை காலத்தில் சில நூதன சாதியோர் யாசக சீவனமாகவே இத்தேசத்தில் வந்து குடியேறி தங்களது மித்திரபேத உபாயங்களினால் கல்வியற்றவர்களும் விவேகமற்றவர்களுமாயப் பெருங் குடிகளையும் காமியமுற்ற சிற்றரசர்களையும் தங்கள் வயப்படுத்திக் கொண்டு நூதன சாதிகளையும் நூதன மதங்களையும் உண்டு செய்துக்கொண்டு கொலையையும் புலையையும் கட்குடியையும் அகற்றி வாழ்ந்திருந்த பௌத்தர்கள் முன்னிலையில் மாமிஷம் புசிப்பதற்கும் மயக்க பானங்களைக் குடிப்பதற்கும் பயந்து தங்கள் நூதன மதசார்பாகவே தங்கள் தேவனுக்குக் கொழுத்தப் பசுக்களும் கொழுத்த குதிரைகளும் கொழுத்த மனிதர்களுமே மிக்க பிரியம், அவைகளை நெருப்பிலிட்டுச் சுட்டுப் புகையை ஆகாயம் அளாவச் செய்தால் தேவனுக்கு ஆனந்தமுண்டாகி கால மழை பெய்யவும் குடிகள் கோறிய வரத்தையும் கொடுப்பாரென்னும் பொய்யுரைகளைப் பரவச்செய்து பேதை மநுக்களை வஞ்சித்து பொருள் பரித்து சுராபானமென்னும் கஞ்சாயிலை மயக்க நீரைக் குடித்து கொழுத்தப் பசுக்களையும் குதிரைகளையும் மனுக்களையும் பதபதைக்க நெருப்பிலிட்டுச் சுட்டு தின்ன ஆரம்பித்தார்கள். இவர்களே இத்தேசத்தில் மயக்க வஸ்துவைக் குடிப்பதற்கும் மாமிஷங்களைத் தின்பதற்கும் முதலாக வழி திறந்தவர்களாவர். அவ்வகைத் தின்பதற்கும் எவ்வகையானப் பெயர்களை உண்டு செய்துக் கொண்டார்களென்னில் பௌத்த மடங்களாம் இந்திரவியாரங்களில் சமண முநிவர்களால் மநுக்களுக்கு உபகாரமாக அக்கினி குண்டம் வளர்த்தி ஓமயாகம்