பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்/545


“சாதி குலம் பிறப்பிறப்பு பந்தமுத்தி யருவுருவத் தன்மெய் நாமம்” ஆம், துவிதமற்ற அத்துவித விசாரிணைப் புருஷரை நாடுங்கள். விவேகிகளால் ஓதியுள்ளக் கலைநூல்களைத் தேடுங்கள். சகலசீவர்களும் விருத்திபெறக்கூடிய நீதிபோதங்களைப் பாடுங்கள்.

ஏனென்பீரேல், உலகத்தில் தோன்றியுள்ள மக்களுள் ஒரு விவேகமிகுத்தோன் தோன்றுவானாயின் உலகம் சீர்பெறுவதுமன்றி மக்களும் அசத்திய தன்மங்களை விலக்கி சத்திய தன்மத்தைக் கைக்கொள்ளுவார்கள். சத்தியதன்மத்தைக் கைக்கொள்ளுவதால் சகல சுகமும் வாய்க்கும் என்பதே.

- 2:11; ஆகஸ்டு 26, 1908 -


10. யதார்த்தபிராமண வேதாந்த விவரம்

வேதமென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், சுருதியென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், மறையென்னும் வார்த்தையின் உற்பவத்தையும், அதனதன் பொருட்களையும், அவைகளின் உற்பவத்திற்குக் காரணம் யாவரென்பதையும் முன்பு விசாரித்து பின்பு பிரம்மோற்பவத்தையும், பிராமணோற்பவத்தையும் விசாரிப்போமாக.

வேதம் என்னும் மொழி பேத மென்னும் மொழியினின்று மாறியது.

அதாவது பாலிபாஷையில் பரதனென்பது வரதனென்றும், பைராக்கி என்பது வைராக்கி என்றும், பாண்டி என்பது வண்டி என்றும், பாலவயதென்பது வாலவயதென்றும் வழங்குதல்போல் பேதவாக்கியங்கள் என்பதை வேத வாக்கியங்கள் என்றும் வழங்கிவருகின்றார்கள்.

அத்தகைய பேதவாக்கியங்கள் யாதென்பீரேல்: ஜெகந்நாதனென்றும், ஜெகத்திரட்சகனென்றும், ஜெகத்குரு என்றும் வழங்கும் புத்தபிரானால் ஓதிய முப்பிடகம் என்னும் திரிபீட வாக்கியங்களே திரிபேத வாக்கியங்கள் என வழங்கலாயிற்று. அப் பேதவாக்கியங்கள் யாதெனில்:-

சௌபபாபஸ்ஸ அகரணம்
குஸலஸ உபுசம்பந்தா
சசித்த பரியோபனம்
ஏதங் புத்தானுபாஸாஸனம்

அதாவது:- பாபஞ் செய்யாதிருங்கள், நன்மெய்க் கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்திசெய்யுங்கோளென்னும் மூன்று வாக்கியங்களும் மூன்று பேதமாய் இருந்தபடியால் திரிபேத வாக்கியங்கள் என்றும், பகவன் மூன்று வேதவாக்கியங்களை ஓதுங்கால் அட்சரங்கள் உடைத்தாய வரிவடிவில்லாமல் ஒலிவடிவாம் மகடபாஷையாகும் பாலிபாஷை வழங்கிவந்தபடியால் மேற்கூறியுள்ள மூன்று பேதவாக்கியங்களையும் ஒருவர் நாவினால் ஒதவும், மற்றோர் செவியினால் கேட்கவும் இருந்தது கொண்டு அவற்றை சுருதி வாக்கியங்கள் என வழங்கிவந்தார்கள்.

கரோத்திராதித்தே சுருதி. வரிவடிவாம் அட்சரபாஷையிராது ஒலிவடிவில் இருந்ததால் சுருதி வாக்கியங்களின் அந்தரார்த்தம் விளங்காது மறைந்திருந்தது கொண்டு மறை என்றும் வழங்கிவந்தார்கள்.

இம்மூன்று பேதவாக்கியங்களின் உட்பொருளாம் பாபஞ்செய்யாமல் இருங்கோளென்பதை கர்ம்மபாகை என்றும், நன்மெய்க் கடைபிடியுங்கள் என்பதை அர்த்தபாகை என்றும், இதயத்தை சுத்தி செய்யுங்கோளென்பதை ஞானபாகை என்றும் வழங்கிவந்தார்கள்.

இம்முப்பாகையும் தன்தேகத்துள் நிகழ்வனவாதலின் இவற்றை அறம், பொருள், இன்பம் என்னும் மெய்யறம், மெய்ப்பொருள், மெய்யின்பம் என்றும் வழங்கி வந்தார்கள்,

சீவகசிந்தாமணி

ஆதிவேதம் பயந்தோய் நீ / யலர்பெய்மாரி யமர்ந்தோய் நீ
நீதிநெறியை யுணர்ந்தோய் நீ / நிகரில் காட்சிக்கிறையோய் நீ
நாதனென்னப்படுவோய் நீ / நவைசெய் பிறவிக்கடலகத்துன்
பாதகமலத் தொழிவெங்கள் / பசையாப்பவிழப் பணியாயே.