பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நீதிநெறியின்பேரில் ஆசையுள்ளவர்களா, உலகப் பொருளின்பேரில் ஆசை உள்ளவர்களா என்று ஆராய்ந்து உலகப் பொருட்களின் பேரில் உள்ளாசைக் கொண்ட உலோபிகளாயின் அவர்களைத் தங்கள் அரண்மனைக் காவல் அடியேவலுக்கேனும் வைக்காமல் அகற்றல் வேண்டும்.

பின்வருங் காரியங்களை முன் எண்ணிப்பாராமல் தங்கள் கண்களுக்கு அழகும் வாட்டசாட்டமும் கலை நூற்கற்று தேர்ந்தவர்போல் பேசும் வார்த்தையும் தங்களுக்கு மெத்த உபகாரிபோல் நடிக்கும் நடிப்பும் உரவினனைப்போல் படிக்கும் படிப்புங் கண்டு அமைச்சருள் ஒருவனாகச் சேர்த்துக் கொண்டு அவனுக்குள்ள உலோப குணத்தையுந் தீயச்செயல்களையும் பின்பறிந்து நீக்குவதாயின் வேற்றரசருடன் கலந்து, இருந்த அரசுக்குத் தீங்கு கொண்டுவந்துவிடுவான். ஆதலின் அமைச்சநிலைக்கு பொருளாசையற்று அறநெறி வாய்மெய் நிறைந்தவர்களையே அமைத்தல் வேண்டும். அவர்களே அமைச்சர் எனப்படுவர்.

- 1:37; பிப்ரவரி 26, 1908 -

ஒவ்வோர் அரசனருகிலிருந்து ஆலோசனையூட்டும் அமைச்சர்களென்னும் மந்திரிகள் யாவரும் கலை நூற்களைக் கற்று கவிவாணரா யிருப்பினும் பொருளாசையற்ற புண்ணியவான்களாயிருத்தல் வேண்டும். அஃதேனென்பீரேல், பொருளாசை கொண்ட லோபியர்பால் மந்திராலோசனை நிலைக்காது. பொய்யும் பொருளாசையும் நிலைத்து குடிகளுக்கும் அரசனுக்கும் தீங்கை வளர்த்துவிடுவார்கள். அதினால் அரசனுக்கே இராட்சியபாரம் அதிகரித்து தாங்கமுடியாது தவிக்கும்படி நேரிடும். ஆதலின் அரசனருகில் வாழும் மந்திரவாதிகள் யாவரும் பொருளாசையற்று விவேகவிருத்திப்பெற்று தன்வலி பிறர்வலி அறிந்தூட்டும் மதி யூகிகளாய் இருத்தல் வேண்டும்.

அம்மதியூகத்தால் அரசனுக்குண்டாய கால வலியை கணிதத்தால் அறியும் வல்லபமும் அரசன் வல்லபமும் தங்கட் துணைவர்கள் வல்லபமும் முன்னாராய்ந்து பின்பு தங்களுக்கு எதிரியாகத் தோன்றும் வேற்றரசனுக்குடைய வல்லபங்களையும் நன்காராய்ந்து அரசனுக்கு ஊட்டி படைமுடக்கிற்கும் படை எடுப்பிற்கும் உறுதி கூறுவான். காலக்கேடுகளையும் காலசுகங்களையும் எதிரி வல்லபங்களையும் தன் வல்லபங்களையும் அறிந்தோதும் அமைச்சன் அரசனருகில் இருப்பானாயின் அரசன் எடுக்கும் முயற்சிகள் எவைக்குந் தடைகளில்லை என்பதாம்.

தன் வலி பிறர் வலி தன் காலம் பிறர்காலமறிவதற்கு அறிவிலிகளாகும் பொருளாசை மிகுத்தப் பேயர்களை அமைச்சர்களாக அமைத்து கொண்ட அரசர்கள் எத்தனையோ பெயர்கள் தங்கள் அரசாங்கங்களை இழந்து எழிய நிலை பெற்றார்கள். தன்னை மேலோனென்றும் மிக்க விவேகிகள் என்றுஞ் சொல்லிப் பொருளை சம்பாதித்து கொண்டு சீவிக்குங் காலவலி தன்வலி அறியா அமைச்சனால் அரசன் கெடுவான்.

மயிலிறகானது எளிய பாரம் உடையதாயினும் வண்டியின் இருசுக்குத் தக்கவாறு அதனை ஏற்றுவாராயின் பாரந் தாங்கும். அங்ஙனமின்றி இருசுக்கு மேற்பட்ட பாரத்தை ஏற்றுவதாயின் தாங்காது முறிந்துவீழ்வதுபோல் தன்வலி எதிரிவலி அறிந்தோதும் அமைச்சர்கள் அருகில் இல்லாமல் போவார்களாயின் அரசு கெடும் என்பதாம்.

ஓர் மரத்திலேறுகிறவன் தன் பளுவைத்தாங்குங் கிளைவரையிலும் ஏறல்வேண்டும். அங்ஙனமின்றி தன்னைத் தாங்காது முறிந்துவிடும் நிலைக்கு ஏறுவானாயின் கிளையும் முறிந்து தானும் விழுந்து மடிவதுபோல் தன்னினும் விவேகம் குறைந்த அமைச்சர்கள் வார்த்தையை நம்பும் தேசமாளும் மன்னவன் தானே கெடுவான் என்பதாம்.

தன்னிடத்துள்ள பொருள் ஆய்ந்து செய்யும் தருமமும் அவரவர்கள் விவேகங்களை ஆய்ந்து அமைக்கும் அமைச்கம் ஆறுதலுற்ற குடியும் அமைதியுற்ற படையும் அரசனது க்ஷாத்திரிய புஜபலத்தின் வலிதென்னப்படும்.

- 1:38; மார்ச் 4, 1908 -