பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/627

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 579


அருங்கலைச்செப்பு - தசநாதப்பத்து

விழிப்பின் விழிப்பால் வளர்நாதந் தோன்றி / சுழித்திக் கெடுமென்றறி.
சுழித்திக் கெடுதல் சுத்தஞானத்தில் / விழித்தப் பலனென்றறி.

சுத்தஞானத்தாற் றோன்றிய நாதம் / முத்தியின் வாயன் முனை.

மச்சமுனியார்

விழித்து மிக பார்த்திடவே பொறிதான்வீசும் / முச்சந்தி வீதியிலே தீபந்தோன்றும்
சுழித்தியிலே போகாமல் ஒருமனதாய் நின்றால் / சத்தமென்ற நாதவொலி காதிற்கேட்கும்.

மனிதன் உலக இச்சையை அகற்றி ஞான இச்சையைப் பெருக்கி தானடையும் பலனுக்கு இதைதான் கடைநாளென்று கூறப்படும்.

இதை அனுசரித்தே கிறீஸ்துவானரும் தனது மாணாக்கர்களுக்கு ஞானசாதகக் கடைசிநாளில் எக்காளந் தொனிக்கும் என்று கூறியிருக்கின்றார்.

அஃது மனிதனின் ஞானத்தெளிவாம் கடைசி நாளாதலின் புலன்களும் தசவாயுக்களும் ஒடுங்கி தசநாதங்களாம் எக்காளமென்னும் நாதவொலிகள் எழும்புகின்றது. இதையே அப்போஸ்தலர்கள் சுரமண்டல் தொனிகளென்று வரைந்திருக்கின்றார்கள்.

அக்காலத்தில் தேகங்கூர்ச்சி, உரோமஞ் சிலிர்த்து, இதயம் படபடத்து, இரத்த வியர்வை பொழிவதாகும்.

கிறீஸ்துவுக்கு பாடுநேருஞ்சமயத்தில் கெத்திசேமென்னுந் தோட்டத்தில் மேற்கூறிய குறிகள் நேர்ந்தது.

இத்தகைய சாதனத்தையே தாயுமானவரும் தெள்ளற விளக்கி இருக்கின்றார்.

உடல்குழைய என்பெலா நெக்குருகவிழிநீர்களூற்றென வெதும்பியூற்ற
ஊசிகாந்தத்தினை கண்டணுகல்போலவே ஒருரவும் உன்னி வுன்னி

படபடென நெஞ்சம் பதைத்துள் நடுக்குரப்பாடி யாடிக் குதித்து

இத்தகைய மோனசாதனம் முதிர்ந்து செல்கால சங்கதிகளையும், நிகழ்கால சங்கதிகளையும், வருங்கால சங்கதிகளையும் நித்திரையை செபித்து சதா விழிப்பினின்று சொல்லுவான்.

ஒளவையார் ஞானக்குறள்

செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ் / சொல்லு மவுனத் தொழில்.

இவ்வகையாகவே கிறீஸ்துவும் நித்திரையை செயிக்கவேண்டும் என்றும், விழித்திருக்கவேண்டும் என்றும் கூறி மறுரூபமடைந்தும் காண்பித்திருப்பதுமன்றி செல்லல், நிகழல், வருங்கால மூன்றினையுஞ் சொல்லுந் தீர்க்கதரிசியாகவும் இருந்தபடியால் தன்னை சுட்டியும், சுதேசத்தை சுட்டியும் சில உவமைகளை வெளியிட்டும் இருக்கின்றார்.

அவற்றை அனுசரித்தே கொரிந்தியரும் தனது நிருபத்தில் நித்திறையை அடையக்கூடாத விஷயங்களையும், எக்காள தொனியின் விஷயங்களையும், மறுரூபம் அடையும் விஷயங்களையும் விளக்கியிருக்கின்றார்.

இத்தகைய ஞானநிலையைக் கண்டடைந்தவர்களையே ஞானத்தானம் பெற்றவர்கள் என்று கூறப்படும். அந்த ஞானத்தானத்தை விசுவாசத்துடன் பெறுவார்களாயின் பலபாஷைகளைப் பேசுவார்கள் என்றும், அவர்கள் கைபட்டவுடன் மற்றவர்களின் வியாதி விலகுமென்றும், விஷத்திற்கொப்பான அவுடதங்களைப் புசித்தாலும் சாகமாட்டார்கள் என்றும், பாம்புகளைக் கையில் பிடித்துக் கொள்ளுவார்கள் என்றும் மார்க்கு சுவிசேஷத்தில் கூறியுள்ளவற்றிற்குப் பகரமாய் கொருந்தியரும் விசுவாசத்தினின்று பலபாஷைகள் பேசவேண்டிய விஷயங்களையும், தீர்க்கத்தரிசன விஷயங்களையும் தெள்ளற விளக்கியிருக்கின்றார்.

- 2:34; பிப்ரவரி 3, 1909 -

இன்னிலையடைந்தோனை உபநயனமாம் முக்கண்ணன் என்றும், ஆரூடனென்றும், ஞானக்கண்ணினாலறிந்து சொல்லுபனென்றும், தீர்க்கதரிசியென்றும் கூறுவர்.

உலகத்தோருக்கு நேரிடும் சுகதுக்கங்களையும் விளக்கி துக்கநிவர்த்தியாம் வழிகளையும் போதிப்பார்கள்.