பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/651

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 603

வடமொழியில் வைசியரென்பராதலின் பசுவின் பலனை யீவோர் கௌ வைசியரென்றும், பூமியின் பலனை யீவோர் பூவைசியரென்றும் நாணயப் பொருட்களாம் தனத்தைக்கொடுத்து முன்னிருபொருள் கொண்டு விற்போர் தனவைசியரென்றும் வடமொழியில் அழைக்கப்பெற்றார்கள்.

இவர்களுள் எண்ணெய், வெண்ணெய், பசுநெய் விற்போர் எண்ணெய் வாணிகரென்றும், கோலமாம் தானியங்களைவிற்போர் கோலவாணியரென்றும், சீலைகளாம் வஸ்திரங்களை விற்போர் சீலைவாணியரென்றும், நகரமாம் கோட்டைக்குள் பலசரக்குகளைக் கொண்டுவந்து மிக்க செட்டாக விற்பனைச் செய்வோர் நாட்டுக்கோட்டை செட்டிகளென்றும், தேசத்தின் ஆயத்துறையில் உட்கார்ந்து செட்டாக சுங்கம் வசூல் செய்வோர் தேச ஆயச்செட்டிகளென்றும் தென்மொழியில் அழைக்கப்பெற்றார்கள்.

தேசத்துக் குடிகளுக்கோர் இடுக்கம் வாராமலும், ஆடுமாடுகளாம் சீவராசிகளுக்கோர் துன்பம் வாராமலும் சத்துருக்களாகத் தோன்றும் மிருகாதிகளையும், எதிரி மக்களையும் வெல்லும்படியான வல்லபமும், புஜபல பராக்கிரமமுமாகிய ஷாத்திரிய மிகுத்தோனை வடமொழியில் க்ஷத்திரியனென்றும், எதிரிகளாம் துஷ்டர்களையும் துஷ்ட மிருகங்களையும் சம்மாரஞ் செய்யக்கூடிய வல்லபனை தென்மொழியில் அரன் அரயன் அரசனென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

மகடபாஷையாகும் பாலியில் சமணர்களென்றும், சகடபாஷையாம் சமஸ்கிருதத்தில் சிரமணரென்றும் அழைக்கப்பெற்று புத்த சங்கங்களாம் சாது சங்கங்களிலுள்ளவர்கள் தங்கள் இடைவிடா சாதன முயற்சியால் சித்திப்பெற்று காலமென்னும் மரண உபாதையை ஜெயித்து யமகாதகரானபோது வடமொழியில் பிராமணன் என்றழைக்கப்பெற்றார்கள். சகட பாஷையில் சிரமணநிலை கடந்தவர்களை பிராமணர்களென்றும், மகடபாஷையில் சமணநிலை கடந்தவர்களையே அறஹத்துக்களென்றுங் கூறப்படும். சாதுசங்கத்திலிருந்து சாதன முதிர்ந்து தண்மெயாம் சாந்தம் நிறைந்து சருவவுயிர்களையுந் தன்னுயிர்போற் கார்த்து சீவகாருண்ய அன்பில் நிலைத்தவர்களை திராவிட பாஷையாகும் தமிழ்மொழியில் அந்தணர்களென்று அழைக்கப்பெற்றார்கள்.

ஈதன்றி புத்தசங்கங்களாம் சாதுசங்கங்களில் சேர்ந்துள்ளவர் தங்கடங்கள் ஞானசாதன மிகுதியால் கட்புலனும் அதனிலையும், செவிபுலனும் அதனிலையும், நாவின்புலனும் அதனிலையும், நாசியின் புலனும் அதனிலையும், உடற்புலனும் அதனிலையுமாகும் புலன் தென்பட்டோர்களை திராவிடமாம் தமிழ்மொழியில் தென்புலத்தோரென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

முன் கூறியுள்ள மூன்றுவகை வைசியருள் பூவைசியருக்கு மறுபெயர் உழவர், மேழியர், உழவாளர், வேளாளரென்றும்; கோ வைசியருக்கு மறுபெயர் கோவலர், கோவர்த்தனர், இப்பரென்றும்; தன வைசியருக்கு மறுபெயர் வணிகர், நாய்க்கர், பரதரென்றும்; உப்பு விற்போருக்குப் பெயர் உவணரென்றும்; கல்வியில் தேறினோர்க்குப் பெயர் கலைஞர், கலைவல்லோரென்றும்; சகல கலை தெரிந்து ஓதவல்லோர்க்குப் பெயர் மூத்தோர், மேதையர், கற்றவர், அவை விற்பன்னர், பண்டிதர், கவிஞர், அறிஞரென்றும்; தேகலட்சணமறிந்து வியாதிகளை நீக்குவோர்க்குப் பெயர் மருத்துவர், வைத்தியர், பிடகர், ஆயுள்வேதியர் மாமாத்திரரென்றும்; மண்ணினாற் பாத்திரம் வனைவோர்க்குப் பெயர் குலாலர், குயவர், கும்பக்காரர், வேட்கோவர், சக்கிரி, மடப்பகைவரென்றும்; கரும் பொன்னாகும் இரும்பை யாள்வோருக்குப் பெயர் கன்னாளர், கருமார், கொல்லர், மருவரென்றும்; மரங்களை யறுத்து வேலை செய்வோருக்குப் பெயர், மரவினையாளர், மயன், தபதி, தச்சரென்றும்; பொன்வேலை செய்வோர்க்குப் பெயர் பொற் கொல்லர், தட்டார், சொர்னவாளர் அக்கரசாலையரென்றும்; கல்லினும் மண்ணினும் மனை யுண்டுசெய்வோர்க்குப் பெயர் மண்ணீட்டாளர், சிற்பாசாரியரென்றும், வஸ்திரங்களை வண்ணமாக்குவோர் அதாவது தூசி நீக்கி தோய்த்துக் கொடுப்போர்க்குப் பெயர் தூசர்,