பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/675

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 627

வினவியபோது மடாதிபர்கள் சந்தோஷமடைந்து இராஜேந்திரா, மற்றுமுள்ள தேசத்தரசர்களும் இத்தகைய விசாரிணைப்புரிந்திருப்பார்களாயின் புருசீகர்களின் பிராமணவேஷம் சகலக் குடிகளுக்குத் தெள்ளற விளங்கி விடுவதுமன்றி இம்மிலேச்சர்களுந் தங்கள் சுயதேசம் போய்ச் சேர்ந்திருப்பார்கள். அத்தகைய விசாரிணையின்றி அவர்களது ஆரியக் கூத்திற்கு மெச்சி அவர்கள் போதனைக்கு உட்பட்டபடியால், வேஷப்பிராமணம் அதிகரித்து யதார்த்தபிராமணம் ஒடுங்கிக்கொண்டே வருகின்றது. ஆதலின் தாங்கள் கிருபைகூர்ந்து பெரும் சபைக்கூட்டி இவ்வாரியக்கூத்தர்களையும் மடாதிபர்களாம் சமண முநிவர்களையுந் தருவித்து விசாரிணைப்புரிந்து யதார்த்த பிராமணத்தை நிலைநாட்ட வேண்டுமென்றார்கள். அவ்வாக்கை ஆனந்தமாகக்கொண்டவரசன் பௌத்த சங்காதிபர்களையும் புருசீகர்களையும் சபாமண்டபத்திற்கு வந்துசேரவேண்டுமென ஆக்கியாபித்தான்.

நந்தனென்னும் அரசன் உத்திரவின்படி வாதவூர் கொலுமண்டபத்திற்கு சங்காதிபர்களும், புருசீகர்களும் வந்து கூடினார்கள். அரசனும் விசாரிணைபுருஷ சபாபதியாக வீற்றிருந்தான். அக்கால் பேதவாக்கியங்களை கண்டுணர்ந்த சாம்பவனார் என்னும் பெரியவர் ஒருவரையுங் கூட்டிவந்து சபையில் நிறுத்தினார்கள். அப்பெரியோனைக் கண்டப் புருசீகர்கள் யாவரும் கோபித்தெழுந்து நந்தனைநோக்கி அரசே, இச்சபையில் இதோ வந்திருப்பவர்கள் பறையர்கள். சுடுகாட்டிற் குடியிருந்துக்கொண்டு பிணங்களுக்குக் குழிகள் வெட்டி சீவனஞ் செய்துவருவதுமல்லாமல் செத்த மாடுகளையும் எடுத்துப்போய் புசிப்பவர்கள். இவர்களை சபையில் சேர்க்கவுங்கூடாது தீண்டவுமாகாதெனப் புருசீகர்கள் யாவருங் கூச்சலிட்டபோது அரசன் கையமர்த்தி புருசீகர்களை நோக்கி இத்தேசத்துப் பூர்வ மடாதிபர்களும் கொல்லா விரதம் சிரம்பூண்டவர்களுமாகிய பெரியோர்களை நீங்கள் யாவரும் ஒன்றுகூடி கேவலமாகப் பேசுவதை நோக்கில் சிலர் சடை முடி வளர்த்தும், சிலர் மொட்டையடித்துக் கருத்த தேகிகளாய் சாதனத்தால் சாம்பல் பூர்த்துள்ளபடியால் அவர்களை இழிவாகப் பேசித் தூற்றுவதுடன் செத்தமாட்டைப் புசிப்பவர்களென்றுங் கூறும் உங்கள் மொழிகளைக் கொண்டே நீங்கள் உயிருள்ளமாடுகளை வதைத்துத் தின்பவர்களாக விளங்குகின்றது.

இத்தகைய விஷயங்களைப்பற்றி எமக்கோர் சங்கையுங் கிடையாது. குழிவெட்டுவோனாயிருப்பினும், அரசனாயிருப்பினும், ஏழையாயிருப்பினும், கனவானாயிருப்பினும் பேதமின்றி சமரசமாக இச்சபையில் வீற்று எமக்குள்ள சங்கையை நிவர்த்தித்தல் வேண்டும்.

அவை யாதெனில், பெண்சாதிப் பிள்ளைகளுடன் பெருங்கூட்டத் தோராகிய நீங்கள் யாவரும் பிராமணர்களா, பெண்சாதிபிள்ளைகளுடன் சுகபோகங்களை அநுபவித்துக்கொண்டு பொருளிச்சையில் மிகுத்தவர்களை பிராமணர்கள் என்று கூறப்போமோ. உலக பாசபந்தத்தில் அழுந்தியுள்ளவர்களுக்கும் பிராமணர்களென்போருக்கும் உள்ள பேதமென்னை, எச்செயலால் நீங்கள் உயர்ந்தவர்களானீர்கள். இவற்றை தெளிவாக விளக்கவேண்டுமென்று கூறினான். அவற்றை வினவியப் புருசீகருள் சேஷனென்பவன் எழுந்து சாம்பவனாரை நோக்கி, நீவிரெந்தவூர் எக்குலத்தாரென்றான். அதற்கு சாம்பவனார் மாறுத்திரமாக வந்தவூர் கருவூர், சொந்த குலம் சுக்கிலமென்றார். இதனந்தரார்த்தம் வேஷப்பிராமண சேஷனென்பவனுக்கு விளங்காமல் கடலையில் குழிவெட்டித் தொழிலும், சாங்கையன் குலமுமல்லவா என்றான். அதற்கு சாம்பவனார் நான் குழி வெட்டியானல்ல ஞானவெட்டியான். சாங்கைய குலத்தானல்ல சாக்கையகுலத்தானென்றார். சாக்கையர் குலத்தாரென்றால் அவர்களுற்பத்தி எவ்வகையென்றான்.

கலிவாகு சக்கிரவர்த்தியால் ஒலிவடிவாக வகுத்துள்ள கணிதங்களை ஆதிபகவனருளால் வரிவடிமாக இயற்றி வருங்காலம் போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய சோதிடர்களை வள்ளுவரென்றும், சாக்கையரென்றும்,