பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/749

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /701

விருத்தி செய்துக்கொண்டு ஈகையாம் தன்ம சிந்தையுடையவர்களாகி, சன்மார்க்கத்தைப் பின்பற்றுவார்களாயின் அத்தேசத்தோர் குருவிசுவாசமும், இராஜவிசுவாசமும் பெருகி சதா சுகமும் ஆறுதலும் பெற்று ஆனந்தத்தில் லயிப்பார்கள். ஆனந்தத்தில் லயிப்பார்கள்.

- 6:13; செப்டம்பர் 4, 1912 -


41. முற்கால யுத்தமும் தற்கால யுத்தமும்

முற்கால யுத்தங்களை யதார்த்த சரித்திரங்களைக்கொண்டு ஆராயுங்கால் வில்லினால் யுத்தமும், வாகுனால் யுத்தமும், தடியினால் யுத்தமும், கத்தியினால் யுத்தமும், கேடயத்தால் யுத்தமும், கையினால் யுத்தமும், மல்யுத்தமும் செய்துவந்தார்கள் என்று விளங்குகிறதேயன்றி வேறில்லை. அத்தகைய யுத்தங்களும் ஓர் இடத்தைக் குறிப்பிட்டு அங்கு செய்து வந்தார்களன்றி குடிகள் இடங்களில் செய்துவந்தது கிடையாது. அதுகொண்டே யுத்தபூமியென வழங்கும் மொழி நாளதுவரையில் வழங்கியும் வருகின்றது. அவ்வகையான யுத்தங்களில் அதிக சேனைகள் மடிந்தது என்றாயினும் குடிகள் அழிந்தது என்றாயினும் வரைந்துள்ளது கிடையாது. கிருத யூகம், துவரயூகம், திரிதயூகம், சதுர்யூகம், பஞ்சயூகம், சட்டயூகம், சப்தயூகம், அட்டயூகம், நவயூகம், தசயூகமென்னும் அணிகளை வகுத்து அவரவர்களுக்குரிய போர் புரிந்து ஜெய அபஜெயத்திற்குத் தக்கவாறு பூமிகளை யடைவதும், மாடுபிடி அடைவதும் தேசத்தை அடைவதும் அரசை அடைவதுமாய யுத்தங்களை செய்து வந்தார்கள்.

மிக்கப் பேரரசர்களோ தங்கள் தங்கள் ஆளுகைகளில் சாம தான பேத தண்டமென்னும் சதுர்வித உபாயங்களைக் கையாடி வந்ததாகவும் விளங்குகின்றது. அதாவது அரசர்கள் ஒவ்வொருவருக்கும் யுத்தா யுத்தம் நேருமாயின் வேவுகர்களைக்கொண்டு தன்பலத்தையும் எதிரியின் பலத்தையும் ஆய்ந்து எதிரியின் பலம் பெருகக்காணில் உடனே சமாதானத்தைக் கோறி வேணதை அளித்து விடுவார்கள். இரண்டாவது உபயோகமுறும் பூமிகளேனும், நதிகளேனும் இருக்குமாயின் அவற்றை தானமாகப் பெற்று தனது தேசத்தை சீர்திருத்திக்கொள்ளுவார்கள். மூன்றாவது அன்னியவரசனிடமிருந்து தான் இச்சித்தப்பொருள் ஏதேனுங் கிட்டாவிடில் படையெடுப்பதுபோல் பேதித்தும் பயமுறுத்தியும் தனக்கு வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளுவதுடன் அன்னியர்களுக்குத் தனது பொருள் வேண்டியிருக்கினும் அவனை பேதித்து பயமுறுத்துவதுமாகிய உபாயத்தைச் செய்து குடிகளுக்கும் படைகளுக்குந் துன்பம் வராதுகாத்துக்கொள்ளுவார்கள். நான்காவது தங்களால் கூடிய சாம முயற்சியும், தான முயற்சியும், பேத முயற்சியுஞ் செய்துப் பயன்படாவிடின் தண்டமுயற்சியாகிய யுத்தத்திற்கே முயன்று தங்கள் கோபாவேஷத்தை அதிகரிக்கவிடாமலும் குடிகளுக்கும் படைகளுக்கும் அதிக துன்பம் அணுகாமலும் யுக்த்தியின் விருத்தியைக்கொண்டே ஜெயம் பெற்று தன் படைகளைப்போலவே எதிரியின் படைகளையுங் காத்து ரட்சிப்பார்கள். இதுவே முற்கால யுத்த இயலாகும்.

ஆனால் மலைபோல மூக்குகளும், அலைபோல் நாக்குகளும் உள்ள ராட்சசர்கள் இருந்தார்களென்றும், ஒரு அம்பை விட்டால் ஆயிரம் அம்புகள் புறப்படுகிறதென்றும், குதிரைகளைச் சுட்டுத் தின்பதற்குக் கோடி பேரைக் கொன்றார்களென்றும், பகக்களைச் சுட்டுத் தின்பதற்கு பதினாயிரம் பேரைக் கொன்றார்களென்றும் ஒரு எதிரியின் உயிர் வயிற்றுள் இருந்ததென்றும், ஒரு எதிரியின் உயிர் துடையுள்ளிருந்ததென்றும், கருப்பையுள் கட்டுப்பட்டிருந்தக் குழவி கதைக்கேட்டுக்கொண்டிருந்ததென்றும், இயல்புக்கு விரோதமாகியக் கட்டுக்கதைகளை ஏற்படுத்திவிட்டு இதையும் முற்கால யுத்தங்களென்று கூறுவாறுமுண்டு. அவைகள் யாவும் பொய்க்கதைகளேயாம்.

இந்திரர்தேய முழுவதும் புத்ததன்மம் நிறைந்திருந்த காலத்தில் பெருத்த யுத்தங்கள் நடந்ததுங்கிடையாது குடிபடைகள் மிக்க அழிந்ததுங்கிடையாது. அரசர்கள் முதற் குடிகள் யாவரும் அன்பையுங் கருணையுமே பெருக்கி