பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/758

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

710 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வருகின்றபடியால் அத்தேசமும் தேசமக்களும் நாளுக்குநாள் சீருஞ் சிறப்பும் பெற்று கூடகோபுரங்களும் மாட மாளிகைகளும் உயர்ந்து சகலமக்களும் சுகபுசிப்பு, சுகவாடை, சுக ஆபரணமுடைய சுகவாழ்க்கையிலிருக்கின்றார்கள்.

இந்திய தேசமோ பெளத்தர்கள் நிறைந்து வித்தையிலும், புத்தியிலும், ஈகையிலும், சன்மார்க்கத்திலும் நிறைந்திருந்த வரையில் வித்தியா விருத்தியும், விவசாய விருத்தியும், வியாபார விருத்தியும் பெருகிநிற்பதைக் கண்டவர்களும் கேட்டவர்களுமாகிய அன்னியதேசத்தோர் இந்தியதேசம் வந்து அரிய வித்தைகளையும் அனந்த ஞானங்களையுங் கற்றுச் சென்றார்கள் என்பதை பூர்வ சரித்திரங்களாலும் பூர்வ சித்திரங்களாலுமே கண்டறியலாம்.

அத்தகைய சிறப்புற்றிருந்த வித்தேசத்தில் கருணை என்பது கனவிலும் இல்லா சில வகுப்போர் குடியேறி தங்கள் தங்கள் சுயபிரயோசனங்களுக்காக ஒற்றுமெய்க்கேடாய சாதிப்பிரிவினைகளையும் விவேகவிருத்திக்குக் கேடாய அஞ்ஞான சமயங்களையும் உண்டு செய்து சாதிக்குத்தக்கப் பொய்சாஸ்திரங்களையும் சமயத்திற்குத் தக்கப் பொய் வேதங்களையும், பொய்ப் புராணங்களையும் வரைந்துவைத்துக்கொண்டு தங்கள் வஞ்சினத்தாலும், பொறாமேயாலும் குடிகெடுப்பாலும் மித்திரபேதத்தாலும் பேதைமக்களை வயப்படுத்திக் கொண்டதுடன் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் நிறைந்திருந்த குடிகள் இவர்களது பொய்சாதி வேஷங்களையும், பொய்வேதங்களையும், பொய்ப் புராணங்களையும் கண்டித்துத் துரத்திக்கொண்டே வந்தபடியால் தங்கள் பொய் வேஷங்களும் பொய்ப்புராணங்களும் நிலைபெற்று தங்கள் காரியங்கைகூடும் வரையிற் கார்த்து நடந்து தங்கள் வாக்கு செல்லுங்காலமாம் செல்வாக்கு உண்டாயவுடன் தங்கள் பொய் கோட்பாட்டிற்கு எதிரிகளாயிருந்த விவேகிகள் யாவரையும் அவர்களைச் சார்ந்திருந்தக் குடிகள் யாவரையுந் தாழ்ந்த சாதியோர்களென்றும், தீண்டப்படாதவர்கள் என்றுந் தாங்கள் புறக்கணித்து இழிவுகூறி அவர்களைத் தலையெடுக்கவிடாமல் பலவகையாலும் நசித்துவந்ததன்றி தங்கள் போதனைகளையே மெய்யென்று நம்பி மோசம் போயுள்ளக் குடிகளாலுந் தாழ்த்தும்படி செய்துவிட்டபடியால் வித்தையிலும் விவசாயத்திலும் விருத்திப்பெற்றிருந்த விவேகிகள் யாவரும் நசிந்து நிலைகுலைந்து விட்டபடியால் இந்திய தேசத்தின்வித்தையும் விவசாயமும் நசிந்தே போய்விட்டது.

அத்தகை நசிவை கண்ணுற்ற கருணை தங்கிய ராஜாங்கத்தோர் அவைகளை சீர்திருத்தி முன்னேறச்செய்யும் வழிவகைகளுக்கு வேண பொருள் உதவியும், வேண போதனா உதவியுஞ் செய்துவந்தபோதிலும் அவ்வித்தைகளுக்கும் விவசாயத்திற்கும் உரியவர்கள் அதனிற் பெரும்பாலும் இல்லாதால் அவர்களது நோக்கம் சரிவராமலே நிற்கின்றது. இத்தேசத்தில் நூதனமாகத் தோன்றியுள்ள சாதிவேஷ நாற்றங்களும் சமயபேத அஞ்ஞானங்களும் அகலுமாயின் அன்றே இந்தியதேசம் முன்போன்ற சீரையுஞ் சிறப்பையும் பெறும். அகலாவிடின் சீர்கேடு அடையும் என்பதே திண்ணம்.

- 6:50: மே 21, 1913 -


47. மனிதனென்போன் எவற்றிற் பழகவேண்டும்

வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்திற் பழக வேண்டும். மக்களென்று வழங்கும் வகுப்பினர் மநுடரென்றும், மானிடர் என்றும், மனிதர் என்றும் வழங்கும் காரணம் யாதெனில்:- மற்றுமுள்ள ஐவகை சீவராசிகளைப்போல் நிருமானமாக நாணமற்று உலாவாது மானியாக உலாவுவோர் ஆதலின் மானிடர் என்றும், மனிதர் என்றும் அழைக்கப்பெற்றார்கள். அவ்வகை அழைக்கப் பெற்றோருள் மானியானவன் நிருமானியாகாது வித்தையில் முதலாவது பழகல் வேண்டும், அவ்வித்தையில் கல்வி வித்தையென்றும் கைத்தொழில் வித்தை என்றும், இரு வகையுண்டு. இவற்றுள் கல்வி வித்தையைக் கற்பதில் தனதறிவை வளர்க்கும் கலை நூற்களையே கற்றல் வேண்டும். கலை நூற்கள் எவை எனில் நிகண்டு, திவாகரம், திரிக்குறள் நாலடி, பஞ்சலட்சணம் முதலியவையாம். அவைகளுக்குக்