பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 91


20. கோயிலும் ஆலயமும்

வினா : அடியிற் குறித்துள்ள வாசகங்களின் அந்தரார்த்தங்களை விளக்கும்படிக் கோறுகிறேன்.

ஆலயந்தொழுவது சாலவுநன்று. / கோவிலில்லாவூரில் குடியிருக்க வேண்டாம்.

விடை : விசாரிணைப்புருஷர்கள் ஒவ்வொருவரும் இத்தகைய சங்கைகளைக் கேட்டுத் தெளிவதே விவேக விருத்தியாம். அங்ஙனமின்றி சொன்னதைச்சொல்லுங் கிளிபோல் சொல்லித் திரிவது (ஹாமில்டன்) வாரவீதியை (அம்மட்டன்) வாரவீதி என்று வார்த்தை கெட்டதுமன்றி பொருளுங்கெட்டு நிற்பதுபோலாகும். ஆதலின் தாமுசாவியுள்ள வாசகங்களின் பொருளும் அவ்வாறே கெட்டு வழங்கிவருகின்றது.

வாசகங்களின் பொருளறிய வேண்டியவர்கள் முன் வாசகச் சீரின் அந்தரார்த்தம் உணர்ந்து பின் வாசகச் சீரின் பொருளுரைத்தல் வேண்டும்.

அதாவது அன்னையும் பிதாவு முன்னறி தெய்வம் - தாய் தந்தையர்களே முன்கண்ட தெய்வங்களாவர். அவர்களைத் தொழுவோர்,

ஆலயந் தொழுவது சாலவு நன்று

தாய்தந்தையரை திரிகரணங்களும் ஒடுங்கி வணங்குதல் எக்காலுஞ் சுகத்தைத் தரும் என்பதாம். ஆ என்னும் நெடிலுயிரின் பொருள் பாலிபாஷையில் மனோவாக்கு, காயமென்று கூறப்பட்டிருக்கின்றது. இத்தகைய மனோவாக்குக் காயங்கள் என்னும் திரிகரணம் ஒடுங்கத் தொழுதலே முழு கும்பிடாகும். அதன் பலனே சாலவு நன்றாம்.

மைந்தன் தாய்தந்தையரைத் திரிகரண லயமுறச் சதா வணங்கி வருவானாயின், அத்தொழுகையைக் கண்டுவரும் இவன் மைந்தன் இவனை சதா வணங்கி சுகத்தில் வைப்பான். இவ்வகை ஆசாரங்களே குலத்தில் பெருகி குலமுஞ் சீர்பெறும். இதன் அந்தரார்த்தங்கொண்டே நமது அம்மை சாலவு நன்றென வைப்புறுத்திக் கூறியிருக்கின்றாள்.

கொற்றவனோடு எதிர்மாறு பேசவேண்டாம். இதன் பொருள் அரசனுடைய வார்த்தைக்கு எதிர்மொழிக் கூறவேண்டாம் என்பதாம்.

கோயிலில்லாவூரில் குடியிருக்கவேண்டாம். இதன் பொருள் அரசன் மனையில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதாம். அதாவது ஓர் அரசனில்லாத ஊரில் குடியிருப்பதினால் சத்துருக்களின் துன்பமும் கள்ளர்களின் பயமும் மிகுந்து விசாரிணையின்றி பாழுறும். ஆதலின் சத்துருக்களின் துன்பமும் கள்ளர்களின் பயமும் இல்லாமல் சுகமாக வாழவேண்டியவர்கள் அரசனிருக்கும் ஊரில் குடியிருக்க வேண்டும் என்பது கருத்து.

இதன் பொருளறியாதோர் இத்தேசத்துள் நூதனமானக் கல்லைநட்டு விளக்கெண்ணெய் வார்த்துத் தொழுமிடங்களுக்குக் கோவிலென்றும், ஆலயம் என்றும் பெயரிட்டுக் கொண்டார்கள். அதற்கு அர்ச்சகர்களாக இருப்பவர்கள் வேஷபிராமணர்கள் ஆகையால் அவர்கள் வார்த்தை ஐயர், பெரியவர் வார்த்தையென்று எண்ணி சகலரும் ஆமோதித்துச் சரிசரி என்று சொல்லி வருகின்றார்கள்.

இத்தகைய சொற்களின் சுயப்பொருட்கள் யாவும் புத்த சங்கத்தோர் உரைக்கல்லில் விளங்குமேயன்றி வேஷபிராமணர்கள் வெறும்பொய்யால் விளங்கும் என்பது வெட்டவெளியேயாம்.

கோத்திரம் அறிந்து பெண்கொடு, பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பது பௌத்தர்கள் முதுமொழியாம். (இதன்பொருள்) அரசன் வல்லமெய் அறிந்து பெண் கொடு, புத்தசங்கத்தோருக்கு விமலர் தந்த ஓடு தெரிந்து பிச்சையிடு என்பதேயாம்.

- 1:47; மே 6, 1908 -