பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 97

அப்படியே வந்து திதிகளை வாங்குகிறதென்றும் பொய் சொல்லி பொருள் பறிப்பது வேஷபிராமணர்கள் இயல்பாம்.

இதற்கு ஓர் கதையும் உண்டு. ஓர் வேஷபிராமணத்திக்கு ஓர் வேஷபிராமண புருஷனிருந்தும் மற்றோர் சூத்திரனையும் வைத்துக் கொண்டு ஓர் புத்திரனைப் பெற்றவுடன் இரண்டு புருஷர்களும் இறந்துவிட்டார்களாம். பிள்ளை வளர்ந்து திதி கொடுக்க ஆரம்பித்தானாம். அப்போது ஓர் சூத்திரனும் வந்து கைநீட்டினான். ஓர் பிராமணனும் வந்து கைநீட்டினானாம். இவ்விரு வரையும் கண்ட மைந்தன் தாயாரிடஞ் சென்று ஓர் சூத்திரனும் பிராமணனும் வந்து திதி கேட்கின்றார்களே நான் யாருக்குக் கொடுப்பதென்று கேட்டான். அப்பா நீ சூத்திரனுக்குப் பிறந்தவனாதலின் சூத்திரனுக்கே கொடுமென்றாளாம். இவ் வகையாக இறந்தபின் சுட்டெரித்த சூத்திரதேகமும் பிராமணதேகமும் உருவாக வந்து திதி வாங்குவதாய்க்கூறி அதினால் அரிசி பருப்பைச் சேர்த்துக் கொள்ளும் ஐயமார் பொய்போதனைப் பிறவிகளைக் கண்டிப்பதற்கு பௌத்தர்களால் ஏற்படுத்தியுள்ளப் பாடல்களில் ஞானவெட்டியில் பொய்க் குருக்கள் போதிக்கும் பிறவிகளைக் கண்டித்திருப்பதுபோல் சிவவாக்கியரும் பொய்க்குருக்கள் போதித்துள்ள பிறவிகளைக் கண்டித்திருக்கின்றார். ஆனால் செய்யுட்கள் பலவாறு மாறுபட்டிருப்பதினால் கருத்துக்களையும் மாறுபடச் செய்து விட்டார்கள்.

ஞானவெட்டி - பொய்க்குருக்கள் பிறவியைக் கண்டித்தல்

இருவினையுந்தனையுரைத்து உலகத்தாசான்
இறந்தவுடல்விழுந்தாவி பிரிந்தபின்பு
வருஜெனன மாகிவந் துடலெடுத்து
வாழ்புவியில்வருவமென் றுருதிச்சொல்வார்
குருவறிந்து புவியில்வந்து வயது நூறு
குறிப்பாகப் பிறந்திறந்தால் குழவியாமோ
அருமெயுட னற்பிறவிபிறப்பாரென்று
அதீதவெகுபொருளெல்லாம் பறிப்பாரையே

ஞானவெட்டி - மெய்க்குருக்கள்

பிறவி விவரம் தீராப்பிறவி கடலையறுத்து / செஞ்ஞானஞ்சொற்
கூரான வம்பிகை பொற்பாதமேவி / கொடியு மன்னை
நேரான திங்கள் பத்ததுஞ் சென்று / நிறைந்ததென்று
பாராதனஞ்சய னோர் பாதந் தூக்கி / படவுதைத்தே.

இதைப்போலவே சிவவாக்கியரும் பொய்க்குருக்கள் போதனைகளை விளக்கியவற்றைக் கண்டிக்கின்றார்.

கறந்தபால் முலைபுகா / கடைந்தவெண்ணை மோர்புகா
வுறத்தசங்கி னோசையும் / உடல்களும் உயிர்புகா
வறைந்தவே ரடியினி / லுதிர்ந்த பூமரம்புகா
திறந்து போன மானிட / ரினிபிறப்பதில்லை.

தகப்பன் இறந்தவுடன் மறுபடியும் தேகமெடுத்துவந்து திதி வாங்குவதாகக் கூறும் வேஷபிராமணர்கள் பொய்களை விளக்கி கண்டித்துள்ள பாடல்களாகும்.

உடம்புயிரெடுத்ததோ / உயிருடம்பெடுத்ததோ
உடம்புயி ரெடுத்தபோது / உருவமேது செப்பிடும்.

என்று கண்டித்துள்ள பாடல்களேயன்றி பௌத்தமார்க்கத்தோர் கூறியுள்ள பிறவியைக் கண்டித்தப் பாடல்களன்று. அதே சிவவாக்கியர் 81-பாடலில் பிறவியை அறுக்க வேண்டிய விதிகளை விவரித்திருப்பதைக் காண்க.

வல்லவாச லொன்பது / மறுத்தடைத்த வாசலும்
செல்லும்வாச லோரைந்தும் / சொல்லவிம்மி னின்றதும்
நல்லவாசலைத்திறந்து / ஞானவாச லூடு போய்
எல்லைவாசல் கண்டபின் / இனி பிறப்பதில்லையே.

என்னும் பிறவியின் ரகசிய போதனைகளும் அதை உணர்ந்தொழுகும் சாதனங்களும் புத்த சங்கத்தோர்க்கு விளங்குமேயன்றி ஏனைய மதஸ்தர்களுக்கு விளங்காவாம். ஒரு மனிதன் தனது அவாவின் மிகுதியால் நாளொன்றுக்கு எத்தனை பிறவிக்கு வித்தாகின்றானென்பது சங்கசாதனர்க்கே விளங்கும்.

- 1:50; மே 27, 1908 -