பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98 / அயோத்திதாசர் சிந்தனைகள்

23. பள்ளத்தூரிற் பணஞ் சேர்க்கும் சுவாமி விவரம்

இவ்வருடம் ஜூன்மீ 10உ வெளிவந்த ஓர் திராவிடப் பத்திரிகையில் (உண்மை விளம்பி) எனக் கையொப்பம் இட்டு பள்ளத்தூரில் ஸ்ரீசிங்கேரிஸ்சுவாமிகள் வந்தபோது புதுவூர் பழயவூர் இரண்டிலும் இருந்து குடிகள் சுவாமிகளுக்கு தட்சணைக் கொடுத்த ரூபாய் 22000 என்றும், கானாடு காத்தானென்னும் ஊரில் குடிகளால் சுவாமிகளுக்குக் கொடுத்த ரூ.16000 என்றும் அவர் பாதத்தைக் கழுவிய தண்ணீரில் தட்சணையாகப்போட்ட ரூபாய் 300 என்றும் குறித்திருக்கின்றார். சுவாமி என்னும் பெயர் கொண்டவருக்கு இத்தனை ரூபாய்கள் ஏன் கொடுத்தார்களோ விளங்கவில்லை. அத்தொகையைக் கொண்டு ஓர்கைத்தொழிற்சாலை ஏற்படுத்தி இருப்பார் களாயின் அக்குடிகளின் பின் சந்ததியார் சுகமடைவார் அன்றோ . பணவாசைக் கொண்ட சுவாமி பீடமும், பிணவாசைக் கொண்ட பூமி கூடமும் நாற்றமெடுக் கும் என்னும் பழமொழிக்கிணங்க சுவாமிகள் மற்ற எந்த ஆசையை விட்டிருப்பார் என்பதை அக்குடிகளே அறிந்துக்கொள்ள வேண்டியதுதான்.

சகலருக்கும் கல்வி கொடுத்தாளும் இங்கிலீஷ் துரைத்தனத்திலும் ஏமாளிகள் இருப்பார்களாயின் இவர்களுக்கு கல்வி விருத்தி செய்யாதிருந்த வேஷபிராமணர்கள் துரைத்தனத்தில் எவ்வளவு தெளிவில் இருந்திருப்பார்கள் என்பதை ஒவ்வொரு விவேகிகளும் தெரிந்துக்கொள்ள வேண்டியதேயாம்.

இத்தகைய தந்திரசாமிகளின் செய்கைகளை மந்திரசாமிகளாம் பௌத்தர்கள் விளக்கிக்கொண்டுவந்தபடியால் அவர்களைப் பலவகையாலும் கொல்லவும் பறையர்கள் என்று சொல்லவும் நேர்ந்துவிட்டது.

இதன்பகரமாய் பௌத்ததன்மம் இத்தேச முழுதும் நிறைந்திருந்த காலத்தில் சில வேஷ பிராமணர் கூடி ஓர் பேதை அரசனை அணுகி அரசே நாங்கள் விசேஷ யாகம் செய்யப்போகின்றோம் அதில் தங்களிடம் உள்ள பொன்னாபரணம் யாவையும் அணிந்துக்கொண்டு நாங்கள் பூசிக்கும் யாக குண்டத்தில் குதிப்பீரானால் அணைந்துள்ள ஆடையாபாரணங்களுடன் தெய்வலோகஞ் சென்று அரம்பாஸ்திரீகள் போகம் அநுபவிப்பீர் என்றார்கள்.

அதைக்கேட்ட அரசன் அவர்கள் வாக்கை தெய்வவாக்கு என நம்பி தன்னிடமுள்ள பொன்னாபரணம் இரத்தினாபரணம் யாவையும் அணைந்து கொண்டு யாக குண்டத்தில் அருகில் வந்து சேர்ந்தான்.

அதேகாலத்தில் ஓர் பௌத்தகுருவும் அவ்வழியே வந்து யாககுண்டம் எரிவதையும் அரசன் அருகினில் நிற்பதையுங்கண்டு அரசே யாது செய்கிறீரென்றார். பௌத்த குருவே, நான் யாககுண் டத்தில் குதித்து தெய்வ லோகத்திற்குப் போகின்றேன் என்றான். அதைக்கேட்ட புத்தகுரு அரசே தெய்வலோகத்திற்குப்போகும் வழிகள் யாவும் உமக்கு நன்றாய்த் தெரியுமா என்றார்.

பௌத்தகுருவே, நான் கண்டதில்லை என்றான்.

அரசே, உம்மை தெய்வலோகம் போவதற்கு யாக குண்டத்தில் குதிக்கச் சொன்னவர்கள் யாரென்றார்.

பௌத்தகுருவே, இதோ எதிரில் மந்திரஞ் செய்துகொண்டிருக்கும் பிராமணர்களே சொன்னார்கள் என்றான்.

அரசே, அப்படியானால் அந்தபிராமணர்களை முந்தி யாக குண்டத்தில் குதிக்கச்செய்து நீர் பின்பு குதிப்பீரானால் அவர்கள் முன்பு தெய்வலோகத்தின் வழியைக் காட்டிக்கொண்டே சென்று உம்மை அவ்விடம் விட்டு அவர்கள் இவ்விடம் வந்துசேர்ந்துவிடுவார்கள் நீங்களுஞ்சுக போகத்தில் இருக்கலாம் என்றார்.

அதைக்கேட்ட அரசன் நமக்குந்தெய்வலோகத்து வழிதெரியாது பிராமணர்கள் முன்பு வழிகாட்டிக்கொண்டு நடப்பது நன்றென்று பிராமணர்களை அழைத்து சுவாமிகளே தாங்கள் முன்பு யாக குண்டத்தில் குதிப்பீரானால் நானும் கூடவே குதிக்கின்றேன் என்னை நீங்கள் கூட்டிக் கொண்டு தெய்வலோகத்தைக் காட்டிவிட்டு இவ்விடம் வந்துவிடலாம் என்றான்.