பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 107


இத்தேசத்தோர் அருகரென்று எவ்வகையால் கொண்டாடி வந்தார்கள் என்பீரேல், சாந்தமும், அன்பும் நிறைந்த அருமெயானவர் ஆதலின் அருகரென்று கொண்டாடியதுமன்றி சகலரும் மறவாதிருப்பதற்காய் புத்தபிரான் பரிநிருவாண மடைந்தபின் அவரது தேகத்தை தகனஞ்செய்து அவ்வஸ்திகளை ஏழரசர்கள் எடுத்துபோய் பூமியில் அடக்கஞ்செய்து கட்டிடங்கள் கட்டியபோது அஸ்தியை வைத்துள்ள இடம் விளங்குவதற்காய் குழவிக்கல்லுகளைப்போல் உயர்ந்த பச்சைகளினாலும், வைரத்தினாலும் செய்து, அவ்விடம் ஊன்றிவைத்திருந்தார்கள்.

ஒவ்வோர் பௌத்தர்களும் தங்கள் தங்கள் இல்லங்களில் நிறைவேறும் சுபாசுப காலங்களில் பசுவின் சாணத்தால் மேற்சொன்னபடி குழவிபோல் சிறியதாகப்பிடித்து அதன்பேரில் அருகன் புல்லைக் கிள்ளிவந்தூன்றி அருகனைப் புல்லுங்கள், அருகனை சிந்தியுங்கோளென்று கற்றவர்களுங் கல்லாதவர்களும் அருகம்புல்லை வழங்கும் வழக்கத்தை அநுசரித்து அருகனை மறவாதிருக்கும் ஓர் வழிபடு தெய்வவணக்கமுஞ் செய்து வைத்திருந்தார்கள்.

அதை அநுசரித்தே நாளதுவரையில் நாட்டுகளில் பசுவின் சாணத்தால் குழவிபோல் பிடித்து அருகம்புல்லை ஊன்றி, அருகக்கடவுளாம் புத்தபிரானை சிந்தித்து வருகின்றார்கள்.

பகவனால் போதித்துள்ள தன்மமானது சருவசீவர்களுக்கும் பொதுவாயதாதலின் அதனை புத்தன்மமென்றும், அருகதன்மமென்றுங் கூற வேண்டுமேயன்றி புத்தமதமென்றும், அருகமதமென்றம் கூறுவது பிசகேயாம்.

பத்துபெயர்கூடி, அவரவர்கள் மனோசம்மதப்படி ஏற்படுத்திக் கொள்ளுவது மதமென்றும் ஒவ்வோர் முக்கிய மக்கள் காலத்திற்குக் காலம் தன்மங்களை மாறுபடுத்தல் சமயமென்றும் ஒவ்வொருவர் சென்றவழியே செல்லுதலும், போதித்தவழியே நடத்தலும் மார்க்கமென்றுங் கூறப்படும்.

இவற்றுள் பகவனால் போதித்த சத்தியபோதம் புழுப்பூச்சுகள் முதல் தேவர்கள் எனத் தேர்ந்த மக்கள் வரையிலும் மலமெடுக்குந் தோட்டிகள் முதல் தொண்டர் மகான்கள் வரையிலும், ஏழைகள் முதல் கனவான்கள் வரையிலும்,. கற்றவர்கள் முதல் கல்லாதோர் வரையிலும், பிணியாளிகள் முதல் சுகதேகிகள் வரையிலும் சுதந்திரமாக அனுபவக்கக்கூடிய சத்தியமும் நடுநிலையுமாய தன்மமாதலின் இவற்றை புத்த தன்மமென்றும், பகவத்தன்ம மென்றும், இந்திரர் தன்மமென்றும், அருகர் தன்மமென்றும், அவலோகிதர் தன்மமென்றும், ஐயனார் தன்மமென்றும், மன்னர் சுவாமி தன்மமென்றும், தருமராசன் தன்மமென்றுமே கூறல் வேண்டும். இவைகளே சத்திய மொழிகளாம்.

- 3:7; சூலை 28, 1909 –


33. புத்தரென்னும் மெய் காட்சியோடு அபுத்தரென்னும் பொய்காட்சியைக் கலப்பதென்னோ

உலகெங்கும் புகழ்பெற்ற உத்தமராம் புத்தபிரான் மகதநாட்டுச் சக்கிரவர்த்தித் திருமகனாகப்பிறந்து வளர்ந்து சதா துக்கத்திற்கு எதிரிடையாகும் சதா சுகமிருக்கவேண்டுமென்னும் ஆராய்ச்சியின் மிகுதியால் சகல சிற்சுகபோகங்களையும் விடுத்து சாந்தம், அன்பு, ஈகை என்னும் பற்றினைப்பற்றி இராகத்துவேஷமோகம் என்னும் பற்றுக்களை அறுத்து நிருவாணம் பெற்று தானடைந்த சுகப்பேற்றை உலகெங்குமுள்ள மக்களுக்கூட்டி கியான சங்கங்களை நாட்டி பரிநிருவாணமுற்றபோது அவரது தேகத்தை பௌத்த அரசர்களால் தகனஞ்செய்து அஸ்தியையுஞ் சாம்பலையும் ஏழரசர்கள் எடுத்துப்போய் புத்தபிரான் கியாபகச் சின்னங்களைக் கட்டியதில் அடக்கஞ்செய்த அஸ்திகளையும் கட்டிடங்களையும் அசோக அரசன் சீர்திருத்திவைத்த நெடுங்காலங்களுக்குப்பின் கானிஷ்காவென்னும் அரசனால் அவற்றை சீர்திருத்தி நிலையாகக் கட்டிவைத்தும் சீன யாத்திரைக்காரர் அக்கட்டிடத்தைக் கண்டுகளித்தும் தனது சிலாசாசனத்தில் வரைந்தும் வைத்திருக்கின்றார்.