பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 111

விடை: ஐயா, தாம் வினாவியுள்ள வினாக்களை நமது தமிழ் சாஸ்திரங்களைக் கொண்டே எளிதில் அறிந்துக்கொள்ளலாம். ஆயினும் மதவைராக்கியம், மதகர்வம் முதலியவைகளால் கண்ணை மறைத்துக்கொண்டு சத்தியதன்மத்தைக் காண வேண்டுமாயின் கிஞ்சித்தும் விளங்காது.

தன்மதம் பிறமதமென்னும் போர்வையை அகற்றி மதகர்வத்தை நசித்து பொய்யைப்போக்கி மெய்யை விசாரிப்போமானால் பொய் நீங்கிய இடத்திலேயே மெய் விளங்கும்.

புத்தபிரானுக்கு அன்பர்களால் அளித்துள்ள ஆயிர நாமங்களில், தொளாயிரத்து தொண்ணூற்றொன்பது நாமங்களை இத்தேசத்து நூதனமதஸ்தர்கள் எடுத்துக் கொண்டு புத்தரென்னும் ஒரு பெயரை மட்டும் நீக்கி விட்டார்கள். சிவனென்னும் பெயரும் புத்தருக்குரிய ஆயிர நாமங்களில் ஒன்று .

அறநெறிச்சாரம்

அவன்கொ லிவன்கொலென் றையப்படாதே
சிவன்கண்ணே செய்மின்கள் சிந்தை சிவன்றானும்
நின்றுகால்சீக்கு நிகறிகழும் பிண்டிக்கீழ்
வென்றிச்சீர் முக்குடையான் வேந்து.

சிலப்பதிகாரம்

சினவரன் தேவன் சிவகதி நாயகன்

அருங்கலைச்செப்பு - அன்புநிலைப்பத்து

சிவமே சிவமே யென்றேத்தித் திருவாயுள் / ளவமேய வன்பில்லாதென்.
அன்பே சிவமா யமர்ந்தா ரருளடியார் / முன்பே முநிவேந்தனார்.

முநிவேந்தரென்றும், வேந்தனென்றும் அரசரது மரபு கொண்டே வரைந்துள்ளார்கள்.

புத்தராக விளங்கியவர் அரசபுத்திரனே என்பதை அடியிற்குறித்துள்ள நூற்களால் அறிந்துக்கொள்ளலாம்.

நெஞ்சறி விளக்கம்

அரியதோ ரரசன் மைந்தன் / அவனியிற் பிறந்து முன்னாள்
பெரியபே ரின்ப ஞானம் / பெருவதே பெரிதென்றெண்ணி
உரியவேதாந்த உண்மெ / யுரைத் தகண்டத்துச் சென்ற
தெரியொணா நாகைநாதர் / சீர்பதம் போற்று நெஞ்சே.

ஞானக்கும்மி

அரசகுலத்தி லுருவாகி / யம்பர மான வெளிதனிலே
பொரசமரத்தி லமர்ந்திருந்தா - னவன் / பொருளைப்பாட்டி ஞானப்பெண்ணே.

மணிமேகலை

சாக்கையராளுந் தலைத்தார் வேந்தன் / ஆக்கையுற்றுதித்தனன் ஆங்கவன்றானென.

அவர் அரசபுத்திரரிலும் சக்கிரவர்த்தி திருமகனாகத் தோன்றியது கொண்டே நாயனார் தானியற்றியுள்ள திரிக்குறள் கடவுள் வாழ்த்துப் பாவில் இறைவனென்றே அவரை சிந்தித்துள்ளார்.

திரிக்குறள்

இருள்சே ரிருவினையுஞ் சேரவிறைவன் / பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பிறவிபெருங் கடனீந் துவர் நீந்தா / ரிறைவனடி சேராதார்.

இத்தகையச் சக்கிரவர்த்தித் திருமகனாகப் பிறந்து அறியென்றும், சிவனென்றும், பிரமனென்றும் பெயர்பெற்ற புத்தபிரான் சென்று நிலைத்த ஓர் மரத்திற்கு அரசபுத்திரன் மரத்தடியில் வீற்றிருக்கின்றார் அரசபுத்திரன் மரத்தடியில் வீற்றிருக்கின்றார் என்னுங் காரணங்கொண்டு அம்மரத்திற்கே அரசன் மரமென்னு பெயருண்டாயிற்று. அம்மரத்தடியில் உட்கார்ந்து சோகமாம் காம மயக்கத்தை வென்றபடியால் அம்மரத்திற்கு அசோக மரமென்றும், அம்மரத்தின் கோல் காய்ந்த உலக்கையாயிருந்தும் ஓர் கால் துளிரிட்டு தழைத்தபடியால் பிண்டியென்றும் மராஷ்டகம், கன்னட முதலிய பாஷைகளில் வழங்கிவந்ததுமன்றி திராவிட பாஷையில் கருங்கல் நிறங் கண்டதுகொண்டு கல்லாலமென்றும், ஆலமரமென்றும், கல்லாத்தியென்றும்,