பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 113

பாசபந்தக்கட்டானது இவனைவிட்டு நீங்கவில்லையென சகலரும் அறிந்து சீர்பெறுவதற்கேயாம்.

இதனை உணர்ந்தே தாயுமானவரும் “நிகள பந்தக் கட்டவிழ்ப்பாரே" யென்றுங் கூறியுள்ளார்.

ஒவ்வோர் மக்களின் உச்சியில் தேயு ஒளியாம் சோதியுண்டு. அஃது அறிவின் விருத்திக்குத் தக்கவாறு விருத்தியும் பிரகாசமுமாகும்.

அதுவே சாந்தம் அமைந்தபோது சுயம்பிரகாச தெய்வமென்றும், காம வெகுளி மயக்கத்தில் அமைந்தபோது தேயு தீயால் நைந்து பிணமென்றுங் கூறப்படும். இத்தகைய ராகத்து வேஷமோக மிகுதியால் அறிவுகுன்றி அச்சோதி அடங்கியதை உணர்ந்த பெரியோர் பிணத்தின் சிரசினருகே மற்றோர் தீபத்தை ஏற்றிவைத்து தீபமுள்ளோரை தெரிசித்து தங்களுக்குள்ள தீபம் அழியா வழியில் ஒழுகச் செய்திருக்கின்றார்கள்.

ஞானக்கும்மி

உச்சிக்குநேரே வுண்ணாவுக்குமேல் நிதம் / வைத்த விளக்கே யெறியுதடி
அச்சுள்ள விளக்கே வாலையடி / அவியாம லெறியுது ஞானப்பெண்ணே.

கடவுளந்தாதி

மெய்ப்பொரு ளுச்சிக்கு / ளுச்சிதமாக விருக்குமப்பா
வைப்பினின் மாணிக்கப் / பொக்குஷமேமணி மா மகுடச்
செப்புக்குள் ளேற்றுந் / திருவிளக்குள்ளொளி - தீபமது
கைப்பொரு டன்னினு / மெய்ப்பொருளா மது கண்டவர்க்கே.

சிலநூற்றாண்டுகளுக்கு முன்பு புத்ததன்மத்தைச்சார்ந்த உபாசகர்களையும், அறஹத்துக்களையும் தகனஞ்செய்வதே வழக்கமாயிருந்தது. அதன்பின்பு தோன்றிய அசத்தியமார்க்கத்தோர்களால் ஞானசாதனங்கள் மாறுபட்டு அடயோக சாதனமென்னும் பிராணாயாம பொருள் தெரியாது பெருநாவை சிறுநாவாம் உண்ணாவிலடைத்து உந்திகமலம் வரை பூரித்து அகராட்சரத்தை கண்டத்தில் அமைக்குமிடந் தெரியாதமைத்து பெருநித்திறை யடைவதுபோல் மூச்சுப்பேச்சற்று அடங்கிவிடுவார்கள். அச்செய்கை இறந்தவனுக்குங் கூட்டில்லை, உயிருடன் உலாவும் அஞ்ஞானிக்குங் கூட்டில்லை. இத்தகைய சாதனமுள்ளவர்களை இறப்போர்கள் எடுத்து தகனஞ்செய்யுங்கால் சுரணைதெரிந்தெழுந்த சிலரைக் கண்டப்பின் மூச்சுசாதனமுள்ளோர்களை அரைவீடுகட்டி அடக்கஞ்செய்வதும், ஞானசாதகர்களில் குண்டலியோகி களையும் அவ்வகை அடக்கஞ்செய்வதும், மற்றுமுள்ள சகலர்களையுந் தகனஞ்செய்வது வழக்கமாகும்.

அத்தகைய தகனத்திற்கும் அரைக்கட்டுவதற்கும் குறித்தயிடங் கிடையாது. அவரவர்களுடைய தோப்புகளும், காலிபூமிகளும் எங்கெங்கிருக்குமோ அங்கங்கு அடக்கமும், தகனமுஞ் செய்துவந்தார்கள்.

இவ்வகையாய பழக்கத்தால் பிறேதமெடுத்துப்போம்போது பின்வருவோர் அத்தகனவிடந்தெரிந்து வருவதற்காக பதிவிரதாகுணமறியப் பொரித்த நெற்பொரியையும், வெற்றிலையையுங் கவர்ந்து இறைத்துக்கொண்டே போவார்களாயின் பின் செல்லுவோர் அவ்வழி தெரிந்தே சுடுமிடத்திற்குப் போவது வழக்கமாகும்.

நெருப்புச்சட்டிக் கொண்டுபோகுங் காரணம் யாதெனில், முற்காலத்தில் மாச்சிஸ்பெட்டிகளேனும், மற்றவகைத் தீக்குச்சுகளேனும் இல்லாததினால் வீட்டிலிருந்து போகும்போதே நெருப்பைக் கனையவைத்துக் கொண்டுபோய் புறதேகமாம் பிறேதத்தின்மீதுக் கட்டைகளை அடுக்கி சகலவரசர்களுங் கூடி தகனித்த புத்தபிரான் தேகத்தை மற்றவர்கள் யாவரும் நெருங்கி கொள்ளிமீட்டாது தனது யேகபுத்திரர் இராகுலரைக்கொண்டு கொள்ளிமீட்டியதுபோல் இறந்துள் ளோர் மைந்தனைக்கொண்டு கொள்ளிமீட்டி தகனித்த தேகத்தின்மீது நீரைதெளிக்காது பாலை தெளித்தும், போதாதாயின் இளநீரைத் தெளித்தும் அவித்து அவ்வஸ்தியை கங்கையிலேனும், சமுத்திரத்திலேனும் விடுவது இறந் துள்ளோர் மீதுள்ள அன்பின் செயல்களாகும்.