பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114 / அயோத்திதாசர் சிந்தனைகள்

காசிக்கலம்பகம்

கேயூரமூரக் கிளர்தோளகிலேசர் / மாயூர மூறு மொருமைந்தற்குத்-தீயூறு
மவ்வேலையீய்ந்தாரடித்தொழும்பு செய்தொழுகு / மிவ்வேலையீய்ந்தா ரெமக்கு.
இடமருங்கின் மருங்கிலாதவள் / குடியிருக்கவு முடியில்வே
றிவளொருத்தியை யிருத்திவைத்து நதி / பாகமோகினி ரூபமாய்
நடமிடுங்கிவண் மேலும்வைத்துள / நயந்தோர் பிள்ளை பயந்த நீர்
நங்குலத்திருவை மருவினின்று பிறர் / நாவளைக்க விடமாகுமோ
குடமுடைந்தவென வானினங்கண் மடி / மடைதிறந்து பொழி பாலோடுங்
கொழுமடற்பொதியவிழ்ந்து கைதைசொரி / சோறு மிட்டணி திருக்கையாற்
கடல் வயிற்றினை நிறப்புகின்ற சுர / கங்கை குண்டகழியா நெடுங்
சுகநநீள் குடு மிமதில்கள் மூன்றுடைய / காசிமேவு மகிலேசரே.

புத்தபிரான் தேகத்தை தகனங்செய்த சாம்பரின்மீது பாலைக்கொண்டு போய் தெளிக்க ஆரம்பித்தபோது பாற்குடந் தவரிவிழுந்துடையவும் வந்திருந்த மேலோர் மற்றும் பாலும், இளநீரும் விட்டவித்து அங்குவந்துள்ள ஏழைகளுக்கும் சோறு கொடுத்து பசியாற்றினார்கள்.

அதை அநுசரித்தே சாக்கியவம்மிஷ வரிசையோர்களாகிய சாதிபேதமற்ற திராவிடர்கள் பால் கொண்டுபோய் தணலை அவிக்குமுன் பிண்டப் பிரசாத மென்னும் அன்னமிட்டு குடமுடைப்பதும் பாலும் இளநீரும் விட்டவிப்பதும் பூர்வ வழக்கமாகும்.

தற்காலமோ மகமதியர் சேர்க்கையாலும், கிறிஸ்தவர்கள் சேர்க்கையாலும் தகனத்தை மறந்து பிரேதத்தை புதைக்க ஆரம்பித்துக்கொண்டபோதிலும் பூர்வ புத்ததன்மச்செயல் மாறாது நெருப்புச்சட்டிக் கொண்டுபோவதும் பால்கொண்டு போவதும், குடமுடைப்பதும், பிண்டப்பிரசாதம் ஈவதுமாகிய வழக்கங்களை விடாது செய்துவருகின்றார்கள்.

இத்தியாதி தன்கன்மச் செயல்கள் யாவும் பூர்வ புத்ததன்ம அநுபவங்கள் என்றே தெரிந்துக்கொள்ளுவீராக.

- 3:23; நவம்பர் 24, 1909 –


38. பௌத்தர்களுக்குள்ளும் தெய்வதூஷணமுண்டோ

ஒருக்காலும் இராதென்பது திண்ணம் எங்ஙனம் என்பீரேல், தற்காலந் தோன்றியுள்ள கிறிஸ்து மதத்தோரைப் பாருங்கள். தங்கள் மதத்தை சிறப்பித்துக் கொண்டு பௌத்தரை தூஷித்து புத்தகமெழுதியிருப்பார்கள். சிவமதத்தோரைப் பாருங்கள் தங்கள் மதத்தை சிறப்பித்துக் கொண்டு பௌத்தரை தூஷித்து புத்தகம் எழுதியிருப்பார்கள். விஷ்ணுமதத்தோரைப் பாருங்கள் தங்கள் மதத்தை சிறப்பித்துக் கொண்டு பௌத்தரை தூஷித்து புத்தகம் எழுதியிருப்பார்கள்.

நாளது வரையில் அப்புத்தகங்களைக் காணலாம். ஆனால், பௌத்தர் களோ கிறிஸ்து மதத்தையேனும், சிவ மதத்தையேனும், விஷ்ணு மதத்தையேனும் தூஷித்து புத்தகங்கள் எழுதியதுங் கிடையாது, தூஷிப்பதுந் தமிழ் பாஷையிற் கிடையாது.

காரணம், தெய்வமென்றும், கடவுளென்றும், சாமியென்றுந் தோன்றி யுள்ளப் பெயர்கள் யாவும் பௌத்தர்களால் ஏற்படுத்தியுள்ளவைகளேயாம். அவ்வகை ஏற்படுத்தியுள்ளவர்களுக்கு அப்பெயர்களின் மூலகாரணங் களுஞ் செயல்களுந் தெரிந்துள்ளபடியால் தெய்வ தூஷணம் மறந்துஞ் செய்யமாட்டார்கள்.

வானரரினின்று நரரும், நரரினின்று மக்களும், மக்களினின்று மனுக்களும், மனுக்களினின்று தேவரும் உயர்ந்துகொண்டே வருவது அவரவர்களின் அதி தீவிரமும், விடாமுயற்சியும், நற்சாதனமும், சற்சாவகாசமுமேயாம்.

இத்தகைய சிறந்த முயற்சியால் தேவரென்னும் பெயர் பெற்றுவருவதை சத்தியதன்ம விசாரிணையாலும், அநுபவத்தினாலும் நாளுக்குநாள் முதிர்ந்துவரும் பௌத்தர்கள் தெய்வதூஷணஞ் செய்கின்றார்களென்று தூற்றித்திரிவது அவரவர் களுக்குள்ள தூஷணச் செயல்களையுந் தாங்களே வெளியிட்டு மற்றும் அன்பர்களையும் விரோதிக்கத்தக்க வழிதேடுகின்றார்கள்.