பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அதே தாயுமானவர் மற்றோரிடத்து “எனதென்பதும் பொய் யானெனல் பொய் யெல்லாமிறந்தவிடங்காட்டும், நினதென்பதும் பொய் நீயெனல் பொய்,' என்றுங் கூறியுள்ளக் கருத்துகளைக்கொண்டு அவனென்னு மொழி முன்னிலைச் சுட்டாம். ஓர் மனிதனையே குறிப்பிட்டுக் கூறியமொழியாகும். அம்மொழியே, அவனவனென்னும் மீமிசையுற்று வருமாயின் அவனவன் செய்கைகளென்பது அங்ஙனே விளங்கும். அவனென்று தனிமெய்ப்பெற கூறியதனால் மொழிமயங்கி சகலசீவர்களின் குற்றங்களுக்கும் ஒருவன் காரணமென உருகெட்டுநின்றது.

அவன் செய்த குற்றங்களை அவனே அநுபவிக்கவேண்டும். தான்செய்த குற்றங்களை தானே அநுபவிக்கவேண்டுமேயன்றி ஏனையோர்களால் ஓரணுகும் அசைக்கலாகாதென்பது கருத்து.

அவனன்றி எனுமொழியை அவனவனன்றி யென வேற்றவிடத்து தெள்ளற விளங்கும்.

மூவர் தமிழ் நாலடி நானூறு

நன்னிலைக்கட்டன்னை நிறுப்பானுந்தன்னை / நிலைகலக்கிக் கீழிடு வானு - நிலையினு
மேன்மே லுயர்த்து நிறுப்பானுந் தன்னை / தலையாகச் செய்வானுந்தான்.

அறநெறிச்சாரம்

தன்னிற் பிறிதில்லை தெய்வநெறி நிற்பில் / ஒன்றானுந் தானெறி நில்லானேல் - தன்னை
இறைவனாய்ச்செய்வானுந் தானேதான் தன்னை / சிறைவனாய்ச் செய்வானுந்தான். தானே தனக்குப் பகைவனு நட்டானும் / தானே தனக்கு மறுமெயு மிம்மெயும் தானேதான் செய்த வினைப்பயன் றுய்த்தலால் / தானே தனக்குக் கரி.

சொரூபசாரம்

என்னையே யல்லாமல் யான்பெற்ற தேது மிலை
யென்னையான் பெற்றிருந்ததெப்போது - மென்னையன்றி
பந்தமிலை வீடு மிலை பார்க்கிலிவை யாராயுஞ்
சிந்தனையு மில்லாததே.

கடவுளந்தாதி

சாதகமென்னுஞ்சிவஞான பூரணந் தன்னிடத்திற்
பூதமாக வருளிருக்கப் பொருள் வேறெனவே
பேதகமாகத் திரிந்து ழன் றெங்கும் பிதற்றும் பொய்யிற்
றோதகமொன்று மறியாமன் மாய்கின்ற தொல்பவரே.

- 3:27; டிசம்பர் 15, 1909 –

40. இந்தியதன்மத்தினின்று புத்த தன்மம் தோன்றியதா அன்றேல் புத்ததன்மமே இந்திரர்தன்மமா

புத்ததன்மமாம் சத்தியதன்மமே இந்திரர் தன்மமென வழங்கலாயிற்று.

சித்தார்த்தியாம் சக்கிரவர்த்தித் திருமகன் புத்தநிலையடைந்து சத்தியதன்ம வரத்தை சகல சீவர்களுக்கும் ஊட்டியது கொண்டு அவரை வரதரென்றும், பரதரென்றுங் கொண்டாடிவந்தார்கள்.

மக்களுக்கும், சீவராசிகளுக்கும் இத்தேசமெங்கும் வேண்டிய சீர்திருத்தங்களை செய்து ரட்சித்த ஆதிபகவனாதலின் அவருக் களித்திருந்த பரதன், வரதன் என்னும் பெயரைக்கொண்டே சிலநாள் வடநாட்டை வடபரதகண்டமென்றும், தென்னாட்டை தென்பரதகண்டமென்றும் வழங்கிவந்தார்கள்.

சூளாமணி

தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபி / னாரணி யறக்கதி ராழிநாதனாம்
பாரணி பெரும்புகழ் பரத வென்றனன் / சீரணிதிருமொழித் தெய்வத் தேவனே.

வீரசோழியம்

தோடாரிலங்கு மலர்கோதிவண்டு வரிபாடு நீடு துணர்சேர்
வாடாதபோதி நெறிநீழன்மேய வரதன் பயந்த வறநூல்
கோடாதசீல விதமேவி வாய்மெய் குணனாக நாளுமுயல்வார்
லீடாதவின்ப நெறிசேர்வர் துன்ப வினைசேர்த நாளுமிலரே.

சூளாமணி

மாற்றவர் மண்டில மதனுளுழியா / லேற்றுழி புடையன விரண்டு கண்டமாந்
தேற்றிய விரண்டினுந் தென் முகத்தது / பாற்றரும் புகழினாய் பரதகண்டமே.