பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 119

கேட்பார்களாயின் கன்னியின்மீது கல்லெரிந்தவன் கொலைக்குற்றத்தில் நியமித்து பகவனை வேண்டி தப்பித்துக்கொண்டபடியால் நாமும் அனந்த பதிவிரதைகளை பலவந்தஞ்செய்தும், கன்னிகைகளைக் கெடுத்தும் பகவனை வேண்டிக்கொண்டால் நம்மெய்க் காப்பாற்றிவிடுவாரென்னும் பயமற்றச் செயலால் நீதிமார்க்கமற்று அனந்தங் குடிகளைக்கெடுத்து அல்லலடையச் செய்து விடுவார்கள்.

இவைகள் யாவையும் நமதன்பர்கள் நன்காராய்ந்து குலயீடேற்றத்தைக் கருதி ஆடம்பரங்களை ஒழித்து சிறுவர்கள் கல்வியிலும், கைத்தொழிலிலும், வியாபாரத்திலும் விருத்திபெறும் வழிகளையும் அவற்றிற்கு வேண்டிய சிலவுகளைச் செய்து சிறப்படையப் பார்ப்பார்களென்று நம்புகிறோம்.

பரிமாணத்திற்கு மீறி பெரிதாயிருக்குந் தாதையென்னும் ஊதுகுழலை பேதாதை என்றும், பரிமாணத்திற்கு மீறி பெரிதாயிருக்கும் தாளத்தை பேதாளம் என்றும் வழங்கிவந்ததுண்டு. அக்கருவியின் தோற்றமும் அதன் பருமனுஞ் செயலும் அறியா தோர் வேதாளமென்னும் ஓர் சீவனுள்ளதென்றும், அஃது பயிறுகளை எல்லாம் மேய்ந்துவிட்டதென்றும், அதனை நாயனார் மந்திரத்தால் ஓட்டிவிட்டாரென்றும் வேதாளக் கட்டுக்கதையை வரைந்திருக்கின்றார்கள். அத்தகைய வேதாளந் தற்காலப் பயிறுகளை ஏதேனும் மேய்ந்துவருகின்றதா, யாவரேனும் அவற்றைக் கண்டதுண்டா. இத்தகைய பேதாளக் கட்டுக் கதையினும் பூத கட்டுக்கதை மிக்க மேலாயதேயாம்.

கட்டுக்கதைகளைக்கொண்டு விருத்தி பெறும் மக்களை வீணே கெடுக்காது நந்தேசத்தை ஆண்டு வருகிறவர்களும், நமது இடுக்கங்களையுங் கேடுகளையும் அகற்றி இரட்சித்தவர்களும் இன்னும் இரட்சித்து வருகிறவர்களுமாகிய ஐரோப்பியர் களின் செயலையும் அவர்களது வித்தியா விருத்திகளையும் பின்பற்றுங்கள்.

அவர்களையும், அவர்களது விருத்திச்செயலையும் பின்பற்றுவோமாயின் அவர்களைப்போல் வித்தையும் புத்தியும் பெருகி நிறைந்த செல்வத்தைப் பெறுவதுடன் செல்வ நிறைவால் வஞ்சினம், சூது, பொறாமெய், குடிகெடுப்பு முதலிய துற்கிரித்தியங் களற்று அறிவுவிருத்தி பெற்று ஆனந்த யோகபாக்கியமாம் முத்தி பேறென்னும் நிருவாண சுகமும் பெறலாம்.

அங்ஙனமின்றி நங்குலத்தோரை மீண்டுங் குடிகெடுக்குஞ் சத்துருக்களின் செயலை பின்பற்றுதல் இன்னும் பாழுக்கடிப்படை போடுவது போலாம்.

தற்காலம் ஆடியகூத்திற்குப் பணவுதவியாய செயல் ஐரோப்பியர் செயலா அன்றேல் நங்குலத்தோரை தாழ்த்தி தலையெடுக்கவிடாமற் செய்த சத்துருக்களின் செயலா தாங்களே கண்டறிந்துக்கொள்ளுங்கள்.

- 3:29; டிசம்பர் 29, 1909 –

42. சங்கறாந்தி புண்ணியகால விவரம்

சங்கமித்தர். - சங்க தருமர் - சங்க அறர்

என்றழைக்கும் புத்தபிரான் சங்கங்களுக்கு நாயகராக விளங்கியது கொண்டு சபாநாயகரென்றும், கணநாயகரென்றும், சபாபதி யென்றும் கணபதியென்றும் வழங்கி வந்ததுமன்றி சங்கத்தோர்களாகும் சமணமுனிவர்களுக்கு சத்திய தன்மத்தையே பெரும்பாலும் போதித்தவராதலின் சங்கதருமர், சங்கறர் என வழங்கிவந்த அவர் பரிநிருவாணமடைந்த அந்தியகாலத்தை சங்கறர் அந்திய புண்ணியகாலமென்றும், சங்கறாந்தி புண்ணிய காலமென்றும், விடுத்தபூத விழாக்கோலென்றும், இந்திர விழாவென்றும், தீபசாந்தி நாளென்றும், சுவர்க்கவானம் ஏறியநாளை சொக்கபானைக் கொளுத்துவதென்றும் வழங்கி வருகின்றார்கள்.

இவ்விந்திரர் தேயமுழுவதும் இந்திரர்மார்க்கம் நிறைந்திருந்த காலத்தில் இந்திய அரசர்கள் சமயகணக்கர்களாகிய சமண முனிவர்களைத் தருவித்து அவர்கள் அடிபணிந்து சக்கிரவர்த்தித் திருமகன் வைகாசிமீ பூரணையில் பிறந்த நாள் விழாக்கோலும், மாசிமீ பூரணியில் இல்லந்துறந்து பிச்சாண்டியான