பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 137

அடங்காதவர்களை சிறிய சாதியென்று பாழ்படுத்திவந்தார்கள். தற்காலம் தங்கள் சுயப்பிரயோசனம் மாறுபடுகிறபடியால் சகலசாதியோரையும் ஒன்று சேர்த்துக்கொள்ளப் பார்க்கின்றார்கள்.

ஆதலின் குருகுல வம்மிஷவரிசையோர்களாம் சாதிபேதமற்ற திராவிடர்களே, கேண்மின். தங்களுக்கு வேண்டிய சுயகாரியங்கள் கைகூடுமளவும் சாதிபேதம் உண்டென்று சாதிப்பதும் தங்கள் சுயகாரியங்கள் தவறுமாயின் சாதிபேதமில்லையென்று சேர்த்துக்கொள்ளுவதுமாகியச் செயல்களைக்கொண்டே இச்சாதிபேதக் கட்டுக்கதைகள் யாவும் பட்டப்பகல் வேஷப்பொய்யென்று திட்டமாக அறிந்து சத்துருக்கள் போதனைக்கு இணங்காமலும் பிரிட்டிஷ் ராஜவிசுவாசத்தினின்று மெய்யறத்தைப் 'பின்பற்றுங்கள். புத்த தன்மத்தையும் ஆரியமதத்தையும் ஒன்றென்று எண்ணாதீர்கள். காலம் நேர்ந்துழில் இரண்டின் பேதாபேதங்களையும் விளக்குவாம்.

- 3:44; ஏப்ரல் 13, 1910 –

47. விதியும் மதியும்

வினா : விதி என்பது ஒன்று உண்டென்றும், அதன்படியே சகலமும் நடக்குமென்னு, மதியினால் ஒன்றும் ஆகாதென்றுஞ் சிலர் கூறுகின்றவை, "தானே தனக்குக்கரி" என்னும் நீதிவாக்கியத்திற்கு முறண்படுகின்றபடியால் அதனந்தரார்த்தம் அடியேனுக்கு விளங்கவில்லை ஆதலின் தமிழன் பத்திராதிபர் கிருபை கூர்ந்து விதி எனும் வாக்கியோர்ப்பவத்தையும் அதனந்தரார்த்தத்தையும் விளக்கி ஆட்கொள்ளும்படி வேண்டுகிறேன். வே.கி. மாணிக்கவேலு. செக்கண்டிறாபாத் விடை ; விதி என்பதின் பொருள், கட்டளை என்று கூறப்படும். அக் கட்டளையாகிய விதியின் முறையை ஆதிபகவனாகிய புத்தபிரான் முதனூலென்னும் பிடகத்தை வகுத்து விதிவழாதொழுகும் ஒழுக்கத்தில் விடுத்திருக்கின்றார். விதியாங் கட்டளையோவென்னில்:
"பாபஞ்செய்யாதிருங்கள் பாவஞ் செய்வீரேல், பலவகைத் துன்பங்களுக்கு ஆளாவீர்கள்.

"நன்மெய்க் கடைபிடியுங்கள் " நன்மெய்க் கடைபிடியாது நிற்பீரேல், தின்மெயாகி அதி தீவினைக்குள்ளாவீர்கள்.

"இதயத்தை சுத்தி செய்யுங்கள்" இதயத்தை சுத்திசெய்யாது துற்களங்கை நிறப்புவீரேல், ஓயா துக்கம் பெருகி மாயா பிறவியிற் சுழன்று திரிவீர்களென்று வகுத்துள்ளார்.

அவ்விதிகளின் பயனையே என் தலைவிதி என்றும், முன்வினை என்றும், ஊழ்வினை என்றும், முன் ஜெநநபலனென்றும், பூர்வ தீவினை என்றும் வழங்கி வருகின்றார்கள்.

அதனந்தரார்த்தமோவென்னில் தனது பேராசையால் ஒருவனைக்கெடுத்து துன்பப்படுத்திய தீவினையானது இவனை விடாது துன்பப்படுத்துவதற்கு பின்தொடர்ந்தே நிற்குமென்று கூறியுள்ளக் கட்டளையாம் விதியை உணராது செய்த தீவினையின் பயனை அனுபவிக்குங்கால் என் தலைவிதி, நான் முன்செய்த தீவினை என்று கட்டளையாம் விதிக்கு மீரிநடந்த செயலை ஓதி துக்கின்றான்.

துக்கவிருத்தி அடையுங்கால், இது என் தலைவிதி, இது நான் முன்செய்த தீவினை என உணர்ந்துக் கொண்டவன் தலைவிதியாம், ஆதிகட்டளையை மீராமலும், தீவினைகளுக்கு உட்படாமலும் இருப்பானாயின், அதன் சுகவிருத்தியால், என் தலைவிதி என்னும் சொல்நீங்கி, பூர்வபுண்ணியமென்று கொண்டாடுவான்.

ஆதலின் ஆதிபகவனது கட்டளையாம் விதியை மீரி நடந்து துக்கத்தை அநுபவிப்பவன், என் தலைவிதி, முன்செய்த தீவினை பயனென்று புலம்பித் திரிகின்றான்.