பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 147

சார்ந்ததாமோ. அவ்வகைச் சார்ந்ததாயின் புத்ததன்மம் அகிம்சை தன்மத்திற்கு விரோதமன்றோ. பிராணாதி பாதாவேறமணி என்னும் சீலமுந் தவருகிறதன்றோ. பா. முநிசாமி ராஜு, பிரம்பூர்.


விடை : தாம் வினவிய யாக சங்கை பூர்வ பௌத்த சங்கத்தோர்களால் அக்கினி குண்டமாம் வேள்வித் தீ வளர்த்து ஏதேது காரியங்களைச் செய்து வந்தார்களோ அவைகளுக்கு எல்லாம் யாகமென்று கூறிவந்தது வழக்கமாகும்.

முன்கலை திவாகரம்

ஓமம், கிருது, வெச்சம், யாக, மிட்டி, யூபமகமிவை வேள்வி

குண்டம்வெட்டி அக்கினி வளர்த்து மருந்து புடமிடுவதும், ஈட்டிகளுக்குத் துவையலேற்றுவதும், ஈட்டியால் உண்டாம் மூர்ச்சையை இறக்குவதும், வானம் வருஷிக்கச்செய்வதும், மழையை விலகச்செய்வதும், ஒடதி சுக வஸ்துக்களைச் காச்சுதலும், தாமரை புட்ப சுன்னங்களை முடித்தலும், அரசர்களுக்கு தேக பலமும் மனோ உற்சாகமும் பெறச் செய்தலும், நரருக்கு கதிபெறச் செய்தலும், மக்களுக்கு சுகபுகை யூட்டி ஞான நெறிகளைக் காட்டி தேவகதியாம் பிரமநிலைப் பெறச் செய்தலுமாகிய சோதிட்டோமயாகம், அக்கினிட்டோமயாகம், மத்தியாகினிட்டோ மயாகம், வாசபேய யாகம், மத்திராத்திர யாகம், சேமயாகம், காடகயாகம், சாதுரமாகி யாகம், சவித்திராமணியாகம், புண்டரீக யாகம், சிவகாம யாகம், மயேந்திரயாகம், மங்கிக்கனே யாகம், இராசசுக யாகம், அச்சுவமேதையாகம், விச்சுவதித்து யாகம், நரமிதயாகம், பிரமமித யாகமென 18 யாகங்களைச் செய்துவந்தார்கள். இவற்றுள் முக்கியமாக சகல மக்களும் தெரிவரச் செய்துவந்த யாகங்கள் சில துண்டு. அதாவது:- இட்டியாகம், எச்சயாகம், ஓமயாகம், கிருதயாகம் இவைகளேயாம். இவற்றுள் இட்டியாகமாவது யாதெனில், அரசர்கள் யுத்தகாலங்களிலும், வேட்டை காலங்களிலும் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களாகும் பட்டா, ஈட்டி, பல்லயம், அம்பு முதலியவைகளைக் கொண்டுவந்து மடங்களிலுள்ள சமண முநிவர்களிற் சித்திப் பெற்ற சித்தர்களிடங் கொடுத்து இவ்வாயுதங்கள் மிருகங்களின் மீது பட்டபோதினும் மநுக்களின்மீது பட்டபோதினும் பிராண உபாயமின்றி மூர்ச்சையாகி விடும்படியானத் துவையலேற்றிக் கொடுக்கும்படிக் கேட்கும்போது யாககுண்டம் வெட்டி அவைகளுக்கான சில மூலிகைகளைக் குழியிலிட்டுத் தீமூட்டி எறியுங்கால் பசுவின் நெய் விட்டு விறகுகள் முழுவதும் பற்றி மெழுகுபதந்திரளுங்கால் ஆயுதங்களை ஒவ்வொன்றாக அதிற்சொருகி மணலைக்கொட்டி யாககுண்டத்தை மூடி மூன்றாநாள் திறந்து ஆயுதங்களை எடுத்து பிரமமூலி சாற்றிற் கழுவி யுத்தகளத்தில் உபயோகித்தால் காயமடைந்த ஒவ்வொருவருக்கும் மூர்ச்சையுண்டாகச் செய்விக்குமாம். இந்த யாகத்திற்கு வடமொழியில் கோமித யாகமென்றும், தென்மொழியில் இட்டியாகமென்றும் வழங்கிவந்தார்கள்.

அத்தகைய ஆயுதம் எய்யப்பெற்றோர் மூர்ச்சைத் தெளியாமல் பிரேதம்போற் கிடப்பார்களாயின் இன்னொரு யாககுண்டம் வெட்டி நிகும்பிலை அதாவது சஞ்சீவிப் பூண்டின் சமூலங் கொண்டுவந்து குழியிலிட்டு அக்கினி வளர்த்து பசுவின் கோமியத்தைக் கொஞ்சங்கொஞ்சமாகத் துளிர்த்துக் கொண்டுவந்து சாம்பல் பூர்த்தவுடன் எடுத்து சுத்தநீரில் கரைத்து யுத்தகளத்தில் வீழ்ந்துள்ளவர்களின் முகத்தில் தெளித்தவுடன் நித்திறை தெளிந்தெழுந்திருப் பவர்களைப்போல் எழுவார்களாம். இவ்வியாகத்தற்கு வடமொழியில் நிகும்பிலை யாகமென்றும், தென்மொழியில் எச்சயாகமென்றும் வழங்கி வந்தார்கள்.

இவ்வாயுதம் பட்ட காயங்கள் ஆறாமலிருக்குமாயின் இன்னொரு யாககுண்டம் வெட்டி ஆலம் விறகு, பருத்தி விறகு, அத்தி விறகு மூன்றையும் சமமாகக் குழியிலிட்டு வெண்குங்கிலியத்தைக்கொட்டி அக்கினி மூட்டி குதிரை நெய்யைக் கொஞ்சங் கொஞ்சமாக கொடுத்து விறகுகள் முற்றும் எரிந்து குமிழ்க்கண் விடுங்கால் அவித்துக் களிம்பை எடுத்து பட்டக் காயங்களுக்குத்