பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பரிபூரணநிலை பெற்ற இருபிறப்பாளர் களாம் யதார்த்த பிராமணர்களே அவ்வகையாக சகல தேசங்களுக்குஞ் சென்று பௌத்த தன்மங்களை பரவச்செய்திருக்கின்றார்கள். அவர்கள் வம்மிஷவரிசையோ சாக்கைய குல திராவிடர்களேயாவர்.

இத்தகைய சாக்கையகுல திராவிடர்கள் அமேரிக்கா முதலிய தேசங்களுக்குச் சென்று பௌத்ததன்மத்தைப் பரவச்செய்த சரித்திரம் அவ்விடத்திய சிலாசாசனத்தில் பதிந்துள்ளதன்றி அதன் குறிப்பு சீனர்களுடைய புராதனப் புத்தகத்திலும் பதிவு செய்திருக்கின்றார்கள். அவ்வகைச்சென்ற திராவிடர்களுக்குள் பிராமணநிலை அடைந்த ஒருவர் சீனதேசத்திலும் ஜப்பான் தேசத்திலும் சத்தியதன்மத்தைப் பரவச்செய்து அவ்விடத்திலேயே பரிநிருவாணம் அடைந்ததும் யதார்த்தம். நாளதுவரையில் அவரது அங்கலயபீடம் இருப்பதும் யதார்த்தமேயாம். - 4:19; அக்டோபர் 19, 1910 –


61. பௌத்த தன்ம சிலாவணக்கம்

வினா : நாம் சிலைகளை வைத்து பூஜிக்கும் இவ்வணக்கத்திற்கும், பிற சமயிகள் இந்து, கிறிஸ்தவர்கள் உருவங்களை வைத்து பூஜித்து வணங்குவதற்குமுள்ள அந்தரார்த்தமும் பேதமும் யாது. கே. பெருமாள், K.G.F


விடை : ஜகத் குருவாகிய புத்தபிரான் உலகெங்கும் சுற்றி அறக்கதிர் விரித்து சங்கங்களை நாட்டிவருங்கால் அந்தந்த சங்கவியாரங்களில் தன்னைச் சிந்தனைச் செய்யுங்கோள் என்றாயினும் தன்னைக் கனப்படுத்துங்கோ ளென்றாயினுங் கூறியது கிடையாது. அவர் பரிநிருவாணமடைந்த நெடுங்காலத்திற்குப் பின்பு தோன்றிய சங்கத்தலைவர்கள் குடிகளைநோக்கி சக்கிரவர்த்தித் திருமகன் நம்மெய்ப்போன்ற உருவினராகத் தோன்றி நமது முன்னின்று சத்தியதன்மத்தைப் போதித்ததுபோன்ற ஒருருவமும், அவர் ஞானசாதனம் சாதித்ததுபோன்ற ஓருருவமும் அவர் பரிநிருவாணமடைந்த யோகசயனத்தைப்போன்ற ஓருருவமும் வியாரங் கடோரும் செய்து வைத்துக் கொண்டு குருவைக்கண்டு மாணாக்கர் ஒடுங்கி நடந்துக்கொள்ளுவதுபோல் சங்கத்துள் வாழும் சமணமுநிவர்கள் அவரது போதனா உருவத்தைக்கண்டு ஞானசாதனங்களைச் செய்துவருவதும், அவரது யோகசயன உருவத்தைக்கண்டு அவரைப்போல் யோகசயனத்தில் முயற்சிப்பதுமாகியச் செயல்களை நடத்திவந்தது இயல்பாகும். அவற்றைக் கண்டுவரும் உபாசகர்களும் அவ்வாறே மடங்களுக்குச் சென்று சற்குரு நாதனுக்கும், அவரது தன்மத்திற்கும், அவரது சங்கத்திற்கும் வந்தனை புரிந்து தங்களது சத்திய தன்மத்தின்படி சீவப்பிராணிகளுக்குத் துன்பஞ் செய்யமாட்டோம், பொய் சொல்லமாட்டோம், பிறர் பொருளை அபகரிக்கமாட்டோம், அன்னியர் தாரத்தை இச்சிக்க மாட்டோம், எங்கள் மதியைக் கெடுக்கும் மதுபானத்தை அருந்தமாட்டோமென வாக்குறுதிக்கூறி வீடேகுவது வழக்கமாகும். மற்றப்படி அச்சிலைகளைக் கண்டு எங்கள் வியாதியை நீக்கவேண்டும், எங்களுக்கு தனம் பெருகவேண்டும். எங்களுக்கு மாடு கன்றுகள் பலுகவேண்டுமென்று கேட்கவும் மாட்டார்கள். அவ்வகை எண்ணங்கொள்ளவும் மாட்டார்கள். காரணமோவென்னில், அவரவர்கள் செய்த கருமங்களை அவரவர்களே அநுபவித்துத் தீரல் வேண்டு மென்பது பிரத்தியட்சம் ஆதலின் அத்தகைய வேண்டுகோளுங்கிடையாது, வேண்டுங் கைம்மாறுக்கு லஞ்சமுங் கொடுக்கமாட்டார்கள்.

அந்தந்த மடங்களில் வாசஞ்செய்யும் சமணமுநிவர்களும் தங்களுக்கு வேண்டிய ஒருவேளை புசிப்பின்றி பணங்களை ஏனும், நகைகளை ஏனும் தங்கள் கைகளை ஏந்தி வாங்கவேகூடாது. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இம்மூன்றி னையும் வெறுக்கவேண்டியதே அச்சங்கத்தோர் சரதனமாதலின் தாங்களே சகல பற்றுக்களையும் அறுக்கத்தக்க உபாயங்களைத் தேடுவதுடன் உலகமக்களும் பற்றுக்களில் அழுந்தி துக்கவிருத்தி