பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 157

கொண்டேனும் மிக்க விருத்தி செய்து தானியத்தையோ கனியையோ ஓரிடத்திற் சேர்த்து சகலமக்களையுந் தருவித்துப் புசித்து ஏழைகளுக்கும் ஈய்ந்து அக்கனிவகையைக் கண்டுபிடித்த முதல் நாளெனக் கொண்டாடி அதை விடாமுயற்சியில் விருத்தி செய்வதற்காய் அதனை கண்டுபிடித்து புசித்தநாளை வருஷந்தோருங் கொண்டாடுவது வழக்கமாம். அத்தகைய நடவடிக்கை நாளதுவரையில் அவ்விடத்தில் நடைபெற்று வருகின்றது.

அதுபோலவே நமது தேச பௌத்த சங்கத்தோர் எள்ளினது நெய்யை கண்டுபிடித்து அதைத் தலைமுழுகு தைலமாகவும் பதார்த்தங்களை வறுக்கும் நெய்யாகவும் உபயோகித்து சுகங்கண்டதின்பேரில் அதனை தங்கள் அரசனுக்குத் தெரிவிக்க அவன் அதனை அதிக விளைவித்து எள்ளி நெய்யெடுத்து தேசக்குடிகளைத் தருவித்து சகலருக்கும் போதுமான நெய்யீந்து அத்தேசத்திலோடும் தீபவதி நதியில் ஸ்நானஞ் செய்தும் பலகாரங்களைச்சுட்டும் உபயோகித்து சுகபலன் காண்பீர்களாயின் எள்ளை மேலும் மேலும் விருத்திசெய்து நெய்யெடுத்து உபயோகித்துக் கொள்ளுங்கோளென்று உத்திரவளித்ததின் பேரில் சகல குடிகளும் எள்ளி நெய்யாம் எண்ணெய்யை சிரசில் தேய்த்து தீபவதி நதியில் முழுகியதுமன்றி அந்நெய்யில் பலகாரங்களும் சுட்டுப் புசித்து சுகங்கண்ட நாளை வருஷந்தோருந் தீபவதி ஸ்நானமெனக் கொண்டாடி பலகாரஞ்சுட்டு அன்பர்கள் வீட்டிற்கு இவர் களனுப்புவதும், இவர்கள் வீட்டிற்கு அவர்களனுப்புவதுமாகிய வழக்கத்தைப் பெருக்கி எள்ளிநெய்யை விருத்தி செய்துக்கொண்டு வந்தார்கள்.

தீபவதிஸ்நானமென்பதை தீபவொளி, தீபாவெளி ஸ்நானமென மாற்றிவிட்டார்கள். காரணமோவென்னில், மாவலிமன்னன் பேரொளியால் தீபவொளியெனக் கொண்டாடிய வார்த்தையைத் தீபவதி ஸ்நானத்தில் மாற்றி எள்ளிநெய்யின் இஸ்நானத்தை மறைத்து தீபாவெளி பண்டிகையென வழங்கிவருகின்றார்கள்.

கார்த்திகைத் தீபமோவென்னில் சமணமுநிவர்காளல் ஆமணக்கு நெய் கண்டுபிடித்து அத்தேசத்து அரசனிடமளிக்க அவ்வரசன் இவ்வாமணக்கு நெய்யின் தீபத்தால் குடிகளுக்கும் மற்றும் சீவராசிகளுக்கும் ஏதேனும் துன்பம் விளையுமோவெனக் கருதி, அத்தேசத்திலுள்ள அண்ணாந்து மலையினுச்சியில் பள்ளத்தை வெட்டி அதில் ஆமணக்கு நெய்யைவிட்டு பெரும் வத்திகள் போட்டு தீபமேற்றி இரவும் பகலும் மூன்றுநாள் எறியவிட்டு அவ்விடம் பார்த்தபோது அங்கு சூழ்ந்திருக்கும் ஆடுமாடுகளுக்கும் மற்ற பட்சிவகைகளுக்கும் மனுக்களுக்கும் யாதொரு கெடுதியும் நேரிடாதிருப்பதைக் கண்ட அரசன் ஆமணக்குப்பயிர் அதிகவிளைவித்து அதன் நெய்யெடுத்து குடிகளெல்லோருக்குங் கொடுத்து வீடுகடோருந் தீபமேற்றி இருளை விளக்கி ஒளியில் வாழ்க்கைபுரியுங் கார்த்துலதீபம் ஏற்றுங்கோளென்று ஆக்கியாபித்தான். குடிகள் யாவரும் ஆமணக்கு நெய்யைக் கொண்டுபோய் தங்கள் வீடுகளுக்குள் அத்தீபத்தை ஏற்றுவதற்கு பயந்து வெளியிலே மூன்றுநாள் எரியவிட்டு யாதொரு துன்பமூங் காணாது சுகங்கண்டபடியால் வீட்டுக்குள் தீபமேற்றும் வழக்கத்தை அநுஷ்டித்ததுமன்றி தேசத்தோர் ஆமணக்குநெய்யை மாறாது விருத்தி செய்வதற்காக வருஷந்தோரும் கார்த்துலதீபமெனக் கொண்டாடிவந்தார்கள். அப்பெயர் தற்காலம் மாறி கார்த்திகைத்தீபமென்று வழங்கியதற்குக் காரணமியாதெனில்: கார்த்திகை மாதத்தில் ஆமணக்குத் தீபமேற்றியதாதலின் இருளை விலக்கும் கார்த்துலதீபப் பெயரை மாற்றிக் கார்த்திகைத் தீபமென வழங்கி வருகின்றார்கள்.

பௌத்தர்களின் உலகவிருத்திச்செயல்களை வேஷப்பிராமணர்கள் மாற்றி தங்கள் சுயவிருத்திக்கான ஏதுக்களைத் தேடிக்கொண்டபடியால் எள்ளிநெய் விருத்தியும், ஆமணக்கு நெய் விருத்தியும் கெட்டு நாளுக்குநாள் நசிந்து வருகின்றது. - 4:22; நவம்பர் 9, 1910 -