பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 161

தேவதையாகக் கொண்டாடி வருகின்றார்கள். வடதேசத்தோர் மிக்க சிறப்புடன் கொண்டாடுங் காளியம்மாள் தென்தேசத்தோர் சுடுகாட்டின் கதவைத் திரக்கவருவாளோ, அரிச்சந்திரன் கதையில் சுடுகாட்டிலிருந்து மறுபடியும் அரசாளப் போய்விட்டானென்று வரைந்திருக்க இவர்கள் இன்னும் சுடுகாட்டைக் கார்த்திருக்கின்றானென்று எண்ணில் அக்கதையை எழுதினவன் ஒப்புக்கொள்ளுவனோ. அக்கதையிலேனும் அரிச்சந்திரன் நாளதுவரையிற் சுடுகாடு கார்க்கின்றானென்று வரைந்திருக்கின்றதோ, இல்லை. அரிச்சந்திரன் கதையே அடியோடு பொய்யாயிருக்க அக்கதையுட் கூறாது நாளதுவரையில் அரிச்சந்திரன் சுடுகாட்டிற்கு வழிவிட்டுக் கொண்டிருக்கின்றான் என்பது அதனினும் பொய்யாதலின் தாங்கள் அவற்றைப் பொருட்படுத்தாது ஏனையோருக்கும் இப்பொய்யை விளக்கி மெய்நெறியினை நிலைக்கச்செய்வதுடன் சுடலைக்குப் பிரேதங் கொண்டுபோம்போது அரிச்சந்திரன் கல்லிடம் நிறுத்தாமலும், வெட்டியான் பாட்டிற்கு இசையாமலுஞ் சென்று பிரேதத்தைத் தகனஞ்செய்வதே அழகாம். செத்தவன் கால் கிழக்கிருந்துமென்ன மேற்கிருந்தும் என்னவென்னும் பழமொழியை உணர்ந்துக்கொள்ளுவீராக. - 4:26; டிசம்பர் 7, 1910 –

66. தருமராஜ துரோபதை கோவில்கள்

வினா : ஐயா நமது தேசத்தில் தருமராஜா கோவில் என்றும், துரோபதைக் கோவிலென்றுங் கொண்டாடி வருகின்றார்களே அவ்விருவரும் பாரதக் கதையைச்சார்ந்தவர்களா அன்று வேறா என்பதை விளக்கி நூலாதாரத்துடனும், அவர்களைக் கொண்டாடக்கூடிய சிறப்பின் காரணத்துடனும் கண்டெழுதி அடியேனின் சங்கையைத் தெளிவிக்கும்படி வேண்டுகிறேன்.

த.கோபாலன், சித்தூர்.

விடை : பாரதத்திற் கூறியுள்ள தருமராஜனாயின் மக்கள் அவரை தெய்வமாகத் தொழவேண்டிய காரணமில்லை. அத்தகைய தெய்வ நிலையை அவர் அடைந்த வருமன்று. துரோபதையை சபையில் மானபங்கஞ் செய்யுங்கால் சகல சோதிரர்களும் கோபக்குறிப்பைக் காட்டியதாகவும், தருமராஜன் அக்கோபக் குறிப்பை வெளிக்குக் காட்டாது உள்ளுக்கு அடக்கியபோது நெல்லை அவர் முதுகின்மீது கொட்டப் பொரியாயிற்றென்று கதையுட் கூறியுள்ளபடியால் அத்தகையக் கோபாக்கினி நிறைந்துள்ள புருடன் சாந்ததேவதையாவனோ.

ஈதன்றி தனக்குள்ள பூமி ஆளவேண்டுமென்னும் அவாவின் மிகுதியால் தன்பிள்ளை வேறு தனது தம்பி அர்ச்சுனன் பிள்ளை வேறென்று எண்ணி அர்ச்சுனன் பிள்ளை அரவானென்பவனைக் கொலைச்செய்து எதிரிகளை வென்று அத்தேசத்தை ஆண்டதாக பாரதங் கூறுகின்றது. இவ்வகைப் பிள்ளையைக் கொன்று பூமி ஆண்ட பாதகனும், பூமியின் ஆசை மிக்கோனுமாய தருமராஜனைத் தெய்வமாகக் கொள்வரோ ஒருக்காலுங் கொள்ளமாட்டார்கள்.

அப்பாரதக்கதையைச் சார்ந்தவளே துரோபதையுமாதலின் அவளையுந் தேவதையாகக் கொண்டாடுவதற்கு ஏதுவுமில்லை.

மற்றும் யாவரை புருஷதேவதையாகவும், இஸ்திரீ தேவதையாகவும் இத்தேசமெங்கும் இத்தேசத்தோர் கொண்டாடி வந்தார்கள் என்னில், கல்லாலமென்னும் அரசமரத்தடியில் வீற்று நித்தியானந்த ஞானமாம் நிருவாணம்பெற்ற புத்தபிரானையே மன்னர் சுவாமி என்றும், தருமதேவனென்றுங் கொண்டாடி வந்தார்கள். புத்தபிரான் உருவினை என்றும் சிரசிற்றாங்கி பூகமரமென்னும் வேம்பு மரத்தடியில் வீற்று மேலாய ஞானமாம் நிருவாணம் பெற்ற அம்பிகாதேவியையே அறச்செல்வி என்றும், பச்சையம்மனென்றும், சிந்தா விளக்கென்றும், சிந்தாதேவி என்றும், அம்மனென்றும், சாந்ததேவதை என்றுங் கொண்டாடிவந்தார்கள். அதற்குப்