பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இத்தகைய சிறந்த நம்பிக்கையற்று தங்கள் தங்கட் கொடூரச்செயலால் கொலை, களவு, குடிகேடு, வஞ்சினம், விபசாரம், பொய், கடுஞ்சொல் முதலியத் தீவினைகளைச் செய்துவிட்டு ஏனையவொருவர் அத்தீவினைகளை நீக்கிவிடுவாரென்னும் பொய் நம்பிக்கை அதிகரித்துவிட்டபடியால் நாளுக்கு நாள் பொய்யும், திருடும், குடியும், விபச்சாரமும், கொலையும் அதிகரித்து வாழ்க்கைத்துணை நயமின்றி ஒருவருக்கொருவர் நம்பிக்கையற்று சீர்கெடுவதுடன் வித்தையும் புத்தியுமற்று, யாதொரு தொழிலுமற்று சாமி கொடுப்பார், சாமிகொடுப்பாரென்னுஞ் சோம்பலேறி உள்ளதுங் கெட்டுப் பாழடையும் நம்பிக்கைகளே பலமாகிவிட்டது.

இத்தகைய சீர்கேட்டிற்கு மூலமாம் பாழ் நம்பிக்கைகளை விட்டு முயற்சி திருவினையாக்குமென்னும் நல்முயற்சி, நல்லூக்கம், நற்கடைபிடி என்னும் பௌத்தர்களது நம்பிக்கையைப் பின்பற்றி அதன் பயனைக் கண்டடைவார்களென்று நம்புகிறோம்.

“அவர்கள் அளந்ததையே அவர்களுக்களக்கப்படும்”. “தினையை விளைத்தவன் தினையையே அறுப்பன்” அவனவன் செய்வினைக்கு இதுவே அநுபவமுங் காட்சியுமாகும். 1 - 4:31; சனவரி 11, 1911


69. உபநிடதங்களிலிருந்து பௌத்த தன்மந் தோன்றியதோ

இல்லை, இல்லை. பௌத்ததன்ம ஆராய்ச்சியைக் கனம் மாக்ஸ் முல்லரவர்களும் ரையிஸ் டேவிஸ் அவர்களும் தெள்ளற விசாரிணைச் செய்யாதகாலத்தில் உபநிடதங்களிலிருந்து புத்தன்மந்தோன்றியதாகத் தங்கள் புத்தகங்களிலெழுதி விட்டார்கள். நாளுக்குநாள் புத்ததன்ம ஆராய்ச்சியையும், பூர்வசாசனங்களையும் கண்டுணர்ந்ததின் பேரில் இப்போதவர்களெழுதியுள்ள புத்தகங்களில் புத்த தன்மத்தினின்றே சகல உபநிஷத்து சாராம்சங்களுந் தோன்றியுள்ளதென்று வரைந்துள்ளதன்றியும், தாங்கள் பிறந்து வளர்ந்த கிறீஸ்துவின் மதத்தையும் விட்டகன்று புத்ததன்மத்திற் சேர்ந்து லண்டனில் தற்காலம் புத்தசங்கங்களையும் நாட்டி சத்தியதன்மத்தைப் பரவச்செய்து வருகின்றார்கள். இதன் சங்கதியைத் தெளிவாகத் தெரிந்துக்கொள்ள வேண்டியவர்கள் லண்டனில் மூன்றுமாதத்திற் கொருமுறை வெளிவரும் “Buddhist Review” என்னும் பத்திரிகையால் தெள்ளறத்தெரிந்துக் கொள்ளலாம். ஈதன்றி வேதமின்னது, நூலின்னது, பிடகமின்னது, ஆகமமின்னது, சுருதியின்னது, உபநிடத மின்னதென் றறியாதவர்களுக்கு அதினந்தரார்த்தம் விளங்கவே மாட்டாது.

பௌத்தர்களின் முன் கலை நூலாம் திவாகரத்தால் தெள்ளறத் தெளிந்துக் கொள்ளலாம்: உபநிடதத்தின் பெயர் - உபநிடதம் வேதத்தினுட்பொருள் நுட்டம். - வேதத்தின் பெயர் – ஆதி நூலென்பது வேதநூற்பெயரே. நூலின் பெயர் - பிடகந்தந்திரம் நூலின் பெயரே. மற்றும் நூலின் பெயர் - ஆகமம் பனுவல் ஆரிடம் சமயம் சூத்திரமைந்தும் நூலினைத் துலக்கும்.

இந்நூல் எவ்வகையாய்த் தோன்றியதென்னில்,

அருங்கலைச்செப்பு

என்று முண்டாகி இறையால் வெளிப்பட்டு / நின்றநூலென் றுணர்.

அந்நூலுள் முதல் நூல் எவையெனில்:

யாப்பருங்கலை

விளையினீங்கி விளங்கிய வறிவன் / முனைவன் கண்டது முதலாகும்.

இந்நூலாதாரங்களால் முதனூல் தோன்றியது புத்தபிரானாலென்றே தெளிவாக விளங்கியபோதினும் முதனூலென்னும் வேதத்தை போதித்தவர் யாரென்று விசாரிக்குங்கால்;

சீவகசிந்தாமணியில்

ஆதிவேதம் பயந்தோய் நீ / அலர் மும்மாரி பொழிந்தோய்நீ