பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சிலப்பதிகார முதலிய சமணமுனிவர்கள் நூலால் தெரிந்துக்கொள்ளலாம், தற்காலந் தோன்றியுள்ள இந்துமதச் செயல்களுக்கும் பூர்வபௌத்தமதச் செயல்களுக்கும் அனந்த பேதமுண்டு.

தற்காலந் தோன்றியுள்ள இந்துமதம் சிறப்புற்றும், பூர்வபௌத்ததன்மம் சிறப்புக்குன்றியும் இருக்கின்றபடியால் பூர்வசரித்திரங்களை ஆராய்ந்தறியா தவர்கள் எங்களது இந்துமதக் கிரியைகளைத்தான் வள்ளுவர்கள் செய்கின்றார் களென்று கூறுவதுமுண்டு. அத்தகையோர் கூற்று பௌத்ததன்ம கன்மங்களை அறியாதோர் வாய்மொழியேயாகும். பௌத்தர்களின் தன்மங்களை நன்காராய்ந்தும் உணர்ந்துமிருப்பார்களாயின் விவாககாலங்களில் அரச ஆணிக்கால் நடுவதும் சிந்தாவிளக்காம் குடவிளக்கேற்றுவதும், விவாகமண்டபத்தில் இந்திரத்தியான பலவர்ண நீலச்செப்புகள் வைப்பதுமாகியச் செயல்கள் பௌத்த தன்மச் செயல்களேயன்றி இந்துக்களின் செயல்களல்ல வென்று தெள்ளறத் தெளிந்துக்கொள்ளுவார்கள். பௌத்தர்களது கிரியைகளி னின்று சிலவற்றை தற்கால பிராமணர்களேற்றுக் கொண்டு அக்கிரியைகள் யாவும் எங்கள் இந்துமதத்தைச் சார்ந்ததென்றும் கூறுவது ஆதாரமற்ற மொழியேயாம்.

வள்ளுவர்கள் நடாத்தும் விவாகக் கிரியைகளை இந்துக்கள் விவாக சம்மந்தத்துடன் சேர்ப்பதற்கு எள்ளளவேனும் இடங்கிடையாது. பூர்வ வள்ளுவர்களின் கிரியைகளை தற்கால பிராமணர்கள் கிரியைகளுடன் பொருந்தவைக்கவுமாகாது.

தற்கால பிராமணர்களைக் கண்டவுடன் வள்ளுவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களுங்கூடி அடித்துத்துரத்தி சாணசட்டியை உடைப்பதும், வள்ளுவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும், தற்காலப் பிராமணர்கள் தங்கள் வீதிகளிற் கண்டவுடன் அவ்வழியே வரவிடாமல் அடித்துத் துரத்துவதுமாகிய விரோதச் செயல்கள் நாளது வரையில் அநுபவக்காட்சியாய் இருப்பதையுணர்ந்தும், வள்ளுவர்களால் நடாத்தும் விவாகக்கிரியைகளை இந்துக்களது விவாகக் கிரியைகளுடன் சேர்ப்பது முற்றும் பிசகேயாம். இந்துக்களென்னும் தற்கால பிராமணர் களுக்கும் வள்ளுவர்களென்னும் பூர்வகன்ம குருக்களுக்கும் அவர்களைச் சார்ந்த வர்களுக்குமுள்ளத் தீராப்பகை நாளது வரையிலுமிருக்க இருவர் விவாகமும் ஒன்றாகாதென்பது துணிபு.

- 4:37, பிப்ரவரி 22, 1911 –

71. சாமிலஞ்சம் குருலஞ்சமே சதாலஞ்சமாக முடிந்தது

ஓர் மனிதனுக்கு சுரரோகம் உண்டாகுமாயின் அதன் தோற்றத்திற்குக் காரணமெது. உஷ்ணமா சீதளமா வாதமா என ஆராய்ந்து அதற்குத்தக்க சிகிட்சை புரியின் ரோகம் நீங்கி சுகமடைவான். அதனினும் ஒவ்வோர் சுரங்களுக்குக் கால அளவுகளுமுண்டு, அவற்றை நோக்காது பொய்க்குருக்கள் போதனைகளைக் கொண்டு, அந்தசாமிக்கு உண்டிபணம் லஞ்சங்கொடுக்க வேண்டும், இந்தசாமிக்குக் கண்ணைப்போல் கண்ணும், மூக்கைப்போல் மூக்கும், வெள்ளியினாலேனும் பொன்னினாலேனுஞ் செய்து லஞ்சங்கொடுக்கவேண்டும். அவற்றைக் கொடுப்பது மல்லாமல் அதைப் பெற்றுக்கொள்ளும் குருதட்சணை யாகும் குருலஞ்சங் கூடவே கொடுக்க வேண்டும், அப்போது சுரம் நீங்கிவிடுமென்று மதக்கடை வியாபாரிகள் கூறவும் அவர்கள் பொய்ம்மதப்போத மறியாப் பேதைகள் நோய்க்கண்ட காரணகாரியங்களறியாது விக்கிரக சாமிகளுக்கு லஞ்சம், குருக்களுக்கு லஞ்சங் கொடுத்து அவர்களை சுகம்பெறச் செய்துவிட்டு லஞ்சங்கொடுப்போர் பஞ்சைகளாகி பரதபிக்கின்றார்கள்.

காற்று பெருக்குள்ளகாலத்தில் கப்பல்யாத்திரைச் செய்வதாயின் கனக் கஷ்டங்களுண்டாவது இயல்பேயாம். காற்று அடங்குநேரமடங்கி ஆறுதலடைவதும் இயல்பாம். காற்றடங்காது கொந்தளிப்பு மீறில் கப்பலுடன் சகலமும் நாசமாவது சகஜமாம். இதனை உணராத பேதைமக்கள் மதக்கடை