பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 173

இத்தகையப் புறக்கருவி ஆராய்ச்சியோர் தேகதத்துவ ஆராய்ச்சி செய்யுங்கால் பிணத்தை அறுத்து ஆராய்வார்களன்றி குணத்தை ஆராய மாட்டார்கள். குணத்தை ஆராய வேண்டியவர்கள் தன்னைத்தானே ஆராயவேண்டுமேயன்றி தனக்கப்புறப்பட்டப் பிணத்தை ஆராய்வதால் பயனில்லை. சத்துவகுணம், ரசோகுணம், தமோகுணமென்னும் முக்குணங்களால் எழூஉம் காம, வெகுளி, மயக்கங்களில் காமாக்கினி எவ்விடத்தினின்றெழும்பி எவ்விடத்து அடங்குகிறதென்றும், கோபாக்கினி எவ்விடத்தினின்று எழும்பி எவ்விடத்து அடங்குகிறதென்றும், பசியாக்கினி எவ்விடத்தினின்றெழும்பி எவ்விடத்து அடங்குகிறதென்றும் கண்டறிந்தவனும், அறிவு மனத்தின்கண் ஒடுக்கமா, மனம் அறிவின் கண் ஒடுக்கமாவென்று ஆராய்ந்தொடுங்கினவனும் பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசையாம் பாசபந்தக் கயிறுகளை அறுத்து நிருவாணநிலைப் பெற்றவனும் எவனோ அவனே உண்மெய்ப்பொருள் உணர்ந்த மெய்யனாவன். தன்னிற்றானே இத்தியாதி விஷயங்களையுங் கண்டுணரா கடைச்சோம்பேறிகளால் கண்ட காட்சிகளைக்கொண்டு மனிதன் இறப்பதே முடிவு. இறந்தபின் யாதொரு சுகதுக்கங்களுங் கிடையாதென்பது பெரும்பொய் பொய்யேயாம்.

காரணம் பாசபந்தப் பற்றுக்கள் யாவையும் அறுத்து நிருவாணமுற்ற மெய்கண்ட தேவனை விவேகமிகுத்தோர் புத்தரென வரைந்திருக்கின்றார்கள். அத்தகைய பாசபந்த பற்றுக்கள் அறாதவர்களையும் மெய்கண்டறியாதவர் களையும் அந்நிலையில் உணர்ச்சியேனும் இல்லாதவர்களையும் புத்தருக்கு சமதையாகக் கூறுவது கஸ்தூரியுடன் கசிமலத்தை ஒப்பிடுவதொக்கும் எம்.ஏ. எல்.எல்.டி. கற்றவர்களாயினும் அதற்கு மேற்பட்ட பிரபஸர்களாயினும் கருவிகளைக்கொண்டு காணும் பொருட்களை சோதிப்பவர்களே அன்றி கருத்தைக்கொண்டு காணாப்பொருளைக் கண்டறிய மாட்டார்கள். அவ்வகையால் தன்னைத்தானே கண்டறியா மாந்தர்கட் போதனைகளால் உலக மக்கள் அகங்கரித்துப் பாழடைவார்களென்பது சத்தியம். எங்ஙன மென்பீரேல், தன்னைத்தானே கண்டறிந்த விவேக மிகுத்தோராம் மேன்மக்கள் உலகமக்களை நோக்கி மக்களே! நீங்கள் இம்மெயில் துற்கருமங்களாம் கொடியச் செய்கைகளைச் செய்துவரில் மறுமெயில் மாளாதுன்பத்தை அனுபவிப்பீர்கள். இம்மெயில் நற்கருமங்களாம் நல்லசெய்கைகளைச் செய்துவரில் மறுமெயில் நல்லசுகத்தை அடைவீர்களென்று கூன், குருடு, சாப்பாணிகளாகத் தோற்றும் உருவங்களையும், பிணியன், வரியன் என உழலும் பாடுகளையுந் தங்களனுபவக் காட்சியால் உணர்ந்து பயமுறுத்தியிருக்கும் போதே மக்களும் மொழிகளை ஏற்காது தங்கள் தங்கள் துற்கன்மங்களையே பெருக்கித் துக்கவிருத்தியை அதிகரித்துக் கொண்டு தாங்கள் கெடுவதுடன் தங்களை அடுத்தோர்களையுங் கெடுத்துப் பாழ்படுத்தி வருகின்றார்கள். மனிதன் இறப்பதே முடிவு, இறந்த பின் யாதொரு சுகதுக்கமுங் கிடையாதெனக் கூறும் அபுத்தப்பிரசங்கிகள் இன்னும் பத்துபேர் தோன்றுவார் களாயின் இப்போதே கேட்டிற்குப் போகும் வழியை உண்டு செய்து வருகின்றவர்கள் மனிதனுக்கு முடிவு மரணந்தான் மற்றப்படி வேறு சுகதுக்கங் கிடையாதென்னும் மனோதிடத்தால் கேட்டுக்குப் போகும் வழிகளை விசாலப்படுத்தி மனம்போனப்படி தன்னுடைய சுகத்தை அநுபவிக்கக் கருதி அன்னியர் தாரத்தை இச்சிப்பதும், அன்னியர் பொருளை அபகரிப்பதும், மதுமாமிஷம் புசிப்பதுமாகிய துற்செயல்களில் புக்கி வீணே கெட்டழிவதுமன்றி தன்னை அடுத்தோனுக்கும் இம்மதியைக் கொடுத்துக் கெடுத்துப் பாழ்படுத்திவிடுவான். ஆதலின் மனிதனுக்கு மரணந்தான் முடிவு வேறு சுகதுக்கங் கிடையாதென்று கூறுங் கூட்டத்தோர் கூட்டுரவிலும் அவர்கள் முகத்திலும் விழிக்காமலிருப்பதே நீதியின்பாதைக்கழகாம். மற்றப்படி புலிகள் பசுவின் தோலைப் போர்த்துலாவுவதுபோல் சில சூன்ய மதஸ்தர்கள் தங்களை பெளத்தர்களென நடித்து சீர்பெற்றுவரும் யதார்த்த பௌத்தர்களைக் கெடுத்து சீரழிக்கப்பார்க்கின்றார்கள். அத்தகையக் கேட்டிற்குக் கொண்டு போகும் வழக்கு மனவுற்சாகத்தையுந் திடத்தையுங் கொடுக்கும் சூன்யமதஸ்த்தர்கள்