பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சதுர்முகன் அவர்களை நோக்கி நம்மெய்ச் சூழ்ந்து நிற்கும் சகலதேகிகளும் இன்னிலைமெய் அடைவார்களோ என்றார். ஆம் ஒவ்வோர் தேகமும் இவ்வகைத் தளர்வடையும் என்றார்கள்.

என் தேகமோ என்றார். அரசே, உமக்கும் அப்படியே என்றார்கள்.

வாலறிஞன் சித்தங்கலங்கி ரதமூர்ந்து மற்றோர் வீதியில் ஏகுங்கால் ஓர் மேடையின் மீது காசரோகங்கொண்டவன் உட்கார்ந்து கொண்டு மேல் சுவாச உபத்திரவத்தாலும், இருமலின் திணரலினாலும், கண்களில் நீரும் வாயிற் கோழையும் வடிய கைகளினால் மார்பை அழுத்திக் கொண்டிருப்பதைக் கண்டு இரதத்தை விட்டிரங்கி உமக்கென்ன கஷ்டமென்றார். அவனுக்குள்ள மாரடைப்பின் உபத்திரவத்தால் மாறுத்திரமளிக்க வேலாது தலைநிமிர்ந்துங் கவிழ்ந்து கொண்டான்.

அதைக்கண்ட சித்தார்த்தர் அருகிலுள்ளவர்களை நோக்கி இதன் காரண மென்ன என்றார். அதற்கு அவர்கள் அரசே, இவன் நெடு நாளாக சுவாச ரோகத்தால் பீடிக்கப்பட்டு நிலைகுலைந்திருக்கின்றான். அதினாற் தங்கள் கேள்விக்கு உத்திர வளிக்கக்கூடாமல் திக்கிட்டுக் கவிழ்ந்து கொண்டான் என்றார்கள்.

ஆனால் மநுடசீவர்கள் எல்லோருக்கும் இத்தகைய உபத்திரவம் உண்டாகுமோ என்றார். ஒவ்வோர் மநுடசீவர்களுக்கும் பற்பல வியாதிகள் தோன்றி உபத்திரவம் அடைவதுண்டு எனக் கூறினார்கள்.

எனக்கும் உங்களுக்கும் இவ்வகை உபத்திரவந் தோன்றுமோ என்றார். அரசே, ஒவ்வோர் உடலிலும் வியாதி உட்பிறந்து வாதிப்பது உள்ள சுபாவமாதலின் உமக்கும் எமக்கும் வியாதி தோன்றாமற்போகாதென்றார்கள்.

அவற்றை வினவிய சதுர்முகன் சற்று திகைத்து மறுபடியும் இரதமூர்ந்து மற்றோர் வீதியிற் செல்லுங்கால் பெருவெளி வழியே பாடையில் ஓர் பிரேதத்தைப் படுக்கிட்டு நான்குபேர் சுமந்து செல்லவும், அவர்களுக்குப் பின் சிலக் கூட்டத்தார் அழுதுகொண்டு செல்லவுங் கண்டு சாரதியை நோக்கி நமது ரதத்தை வீதிவழி செலுத்தாது வெளிவழி செலுத்தி அதோ செல்லுங் கூட்டத்தாரைப் பின்பற்றும் என்றார்.

உடனே சாரதி தனது ரதத்தை பிரேதத்தை எடுத்துச் செல்லுங் கூட்டத்தாரிடம் நெறிக்கியவுடன் அவர்களும் பிரேதத்தை வைத்துக் கொண்டு நின்றுவிட்டார்கள். திருமகன் ரதத்தை விட்டிரங்கி பாடையின் அருகில் சென்று அவ்விடமுள்ளவர்களை நோக்கி இஃதென்ன கோரம் என்றார்.

அரசே, இவன் இறந்துவிட்டான் அடக்கஞ் செய்யப்போகிறோம் என்றார்கள்.

மனிதனே இவ்வகை நிலமெய்க்கு வந்திருக்கின்றானா அன்றேல் வேறு சீவனோ என்றார். மனிதனே, பேச்சும் மூச்சும் அடங்கி மரணமடைந்தானென்றார்கள்.

மரணமடைந்தால் மறுபடியும் எழுந்து பேசமாட்டானோ என்றார்.

அவனுக்கு பேச்சும் மூச்சும் இருக்குமானால் இடுகாட்டுக்கு எடுக்க மாட்டோம் என்றார்கள். இவன் வீடுவாசல் பெண்சாதி பிள்ளைகளை மறந்து விட்டானோ என்றார்.

அவ்வகை மறந்ததினால் இவனை இறந்தானென்று சொல்லுகிறோம் என்றார்கள்.

இறந்தவனென்றால் விழித்துப் பார்க்கானோ என்றார்.

பார்க்குங் கண்ணும், கேட்குஞ் செவியும், முகறும் மூக்கும், பேசும் வாயும், ஊருந் தேகமும் ஓய்ந்து விட்டபடியால் ஊரைவிட்டெடுத்துப்போய் இடுகாட்டில் இடப்போகின்றோம் என்றார்கள்.

இவனொருவனே இன்னிலமெய் அடைந்தானா அன்றேல் மநுட சீவர்கள் யாவரும் இன்னிலமெய் அடைவார்களோ என்றார்.

ஒவ்வோர் மநுட சீவர்களும் இறந்தே தீரல் வேண்டும் என்றார்கள்.
ஆகையால் யானும் அவ்வகை இறப்பேனோ என்றார்.