பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 / அயோத்திதாசர் சிந்தனைகள்


லேனும் மற்றும் இடங்களிலேனும் விவேகமிகுத்தக் கூட்டத்தார்கள் இருப்பார் களானால் அவர்களை வரவழைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

உடனே மண்முகவாகு தேசமெங்கும் பறையறைவித்து முதற் சங்கத்தைச் சார்ந்த விவேகிகளில் சிலரை அழைத்து மைந்தனிடம் அனுப்பினான்.

அவர்களுஞ் சித்திரக்கூடஞ்சேர்ந்து சிற்றரசரைக்கண்டு சபாமண்டபத்தில் உட்கார்ந்து நகரவிசாரிணை முடிந்தவுடன் தம்மராசன் முன் சங்கத்தோரை நோக்கி பெரியோர்களே, தங்கள் சங்கத்தின் நோக்கமென்ன, அதன் பயன் யாதென உசாவினார்.

எங்கள் சங்கத்தின் நோக்கம்

இறப்பும், பிறப்பும், உயர்வும், தாழ்வும், நன்மெயும், தீமெயும், பஞ்சபூதங்களால் உண்டானபடியால் பஞ்சபூதங்களையே வணங்கவேண்டும் என்பதே யாம் என்றார்கள்.

அருங்கலைச்செப்பு - முதற்சங்கவியல்

இறப்பும் பிறப்பு மினியவை தீதுங் / குறிய வைம்பூதத்தியல்.
ஒங்க லொடுங்க லுயர்வு தாழ்த / லாங்கவைம் பூதத்தளர்.
தோற்றும் பூதமைந்தும் வணங்க / லாற்றலென்றே யுணர்.

அங்ஙனம் வணங்குவதில் பயன் யாதென்றார். வணங்கிய பயன் யாதும் அறியோமென்றார்கள். பஞ்சபூதங்களென்றால் அஃதெவைகள் என்றார். நிலம், நீர், தீ, காற்று, வெளி என்றார்கள். வெளியும் ஓர் பூதமாமோ என்றார். மாறுத்திரங் கூறாமல் திகைத்து நின்றார்கள்.

பெரியோர்களே, பூதவிசாரிணை இருக்கட்டும். சீவர்களுக்குப் பிணியணுகா மருந்தும், மூப்பணுகா நிலையும், மரணமடையா வழியும் ஏதேனும் உண்டோ என்றார். அரசே, அவ்வகை ஏதுக்களை நாங்கள் கண்டதுமில்லை கேட்டதுமில்லை என்றார்கள்.

ஆனால் தங்கள் போகலாமென்று அனுப்பிவிட்டு இரண்டாவது சங்கத்தோர்களைத் தருவித்தார்.

அவர்களும் சித்திரகூடம் அணுகி சிற்றரசரைக்கண்டு சபாமண்டபத்தில் உட்கார்ந்து அரசே, எங்களை வரவழைத்தக் காரணம் யாதென உசாவினார்கள். பெரியோர்களே, உங்கள் சங்கத்தின் நோக்கமும் அதன் பயனும் யாதென்றார்.

அரசே, இறந்தபின் மனிதன் மிருகமாகவும், மிருகம் மனிதனாகவும் பிறக்கமாட்டான். மனிதன் மனிதனாகவும், மிருகம் மிருகமாகவும் பிறக்கும். ஆதலின் ஒன்றை வணங்குவதால் பலனுமில்லை, வணங்காமலிருப்பதினால் கெடுதியுமில்லை என்பதே எங்கள் சங்கத்தின் நோக்கம் என்றார்கள்.

அருங்கலைச்செப்பு - இரண்டாஞ்சங்கவியல்

மாண்ட மக்கள் விலங்குகளாகி / யீண்டும் பிறப்பதிலர்.
மரித்த விலங்கு மக்களாகி / விரித்துத் தோன்றா விழல்.
வணக்க மதினால் வருபயனில்லை / இணங்காததுவே நிலை.

பெரியோர்களே, மனிதன் மிருகமாகப் பிறக்கான் என்பதையும், மிருகம் மனிதனாகப் பிறக்காதென்பதையும் எவ்வகையால் அறிந்து கொண்டீர்களென்றார்.

அதனதன் உருவங்களே போதுமான சாட்சி என்றார்கள்.

ஆனால் மனிததேகத்தில் மாமிஷமும் எலும்பும் மிருகதேகத்தில் மண்ணும் மரமும் பொருந்தியிருக்குமோ என்றார்.

உருவ பேதமே காரணமென்றார்கள்.

உருவபேதத்தால் பிறவிபேதத்தை எவ்வகையிற் கண்டறிந்தீர்கள் என்றார்.

கண்டறிந்த காரணங் கூறாமல் திகைத்து நின்றார்கள்.

பெரியோர்களே பிறவிபேதமிருக்கட்டும், பிறந்தபின் உண்டாகும் பிணியின் பேதங்களையும், மூப்பின் பேதங்களையும், மரணபேதங்களையும் கண்டதுண்டோ என்றார்.

அரசே, தற்காலந் தங்களால் இயற்றியுள்ள வைத்தியசாலைகளின் சிகிட்சைகளைக் கண்டோமன்றி வேறு சிகிட்சை அறியோமென்றார்கள்.