பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பரதகண்டத்தைச்சார்ந்த மகதநாட்டில் கபிலவஸ்து என்னும் பட்டினத்தை அரசாண்டு வந்த இட்சுவாகு, வீரவாகு, என்னும் சக்கிரவர்த்திகளின் வம்மிச வரிசையைச்சார்ந்த சுத்தோதயனென்றும் மண்முகனென்றும் வழங்கும்படியான ஓர் சாக்கையகுல அரசனுக்கும் பரிசுத்த குணத்தை ஆபரணமாகப் பூண்டிருந்த மாயாதேவி என்னும் இராக்கினிக்கும் கலியுகம் 1616 தசுயசு சித்தார்த்தி வருடம் வைகாசி மாதம் 13-நாள் ஆதிவாரம் பௌர்ணமி திதி, கேட்டை நட்சத்திரம் மீன லக்கினத்தில் ஓர் ஆண்குழந்தை பிறந்தது.

குழந்தை பிறக்கும்போது, விடியர் காலத்து சூரியன் உதிப்பதுபோல் ஓர் விம்பமும் சம்பூரணமுமாகப் பிறந்தது.
உலகம் முழுமைக்கும் ஓர் வகை ஒளிதோன்றி சீவராசிகளை நிலைக்கச் செய்தது.
வரப்போகிற சற்குருவின் மகிமையைக் காணும்பொருட்டு குருடர்களும் ஊமைகளும் செவிடர்களும் சற்குருநாதன் பிறப்பின் சகுனங்களைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள்.
கூனர்கள் நிமிர்ந்து நடந்தார்கள், சப்பாணிகள் குழந்தையை தரிசிக்கும்படி நடந்து போனார்கள்.
ஆகாயவிரிவில் மேகங்களில்லாமல் சுத்தமாகவும் நீரோடைகள் தெளிவுற்றும் இருந்தன.
பூவுலகின் சீவராசிகள் என்றுங் கேட்டிராத நாதொலியானது விண்ணு லகத்தினின்று சப்தித்தது.
உலகமுழுமையும் சமாதானமும் ஆறுதலும் உண்டாக அன்பின் பெருக்கமுற்றது.
அருளாழி என்னும் தருமச்சக்கரம் உலகெங்கும் உருளுவதற்கு சாட்சியாக சூரிய சந்திரன் இரண்டுங் களங்கமற்றுப் பிரகாசித்தன.
வான்மீன்கள் தங்கள் தங்கள் நிலைபிசகாமல் உலாவிக் காலமழைப் பெய்து தேசமெங்கும் செழிப்புற்றது.
சீவராசிகள் யாவற்றும் பசியின் துயரந்தோன்றாமல் ஆனந்தித்திருந்தன.
பசுக்கள் யாவற்றும் கலங்கள் நிறம்பப் பால்சொரிந்தன.
பட்சிகள் யாவற்றும் தூரதேசங்களுக்குச் சென்று இறை தேடும் படியானக் கஷ்டங்கள் நீங்கி இருந்த நிலங்களில் தங்களுக்கு வேண்டிய ஆகாரங்களைப் புசித்தோங்கின.
மனிதர்களைப்பற்றி வருத்திக்கொண்டிருந்த அசுத்த ஆவிகளும் புத்திமாறாட்டங்களும் நீங்கி அறிவு தெளிவுற்றார்கள்.
மாரனென்று சொல்லுங்காமனும் காலனென்று சொல்லும் இமயனும் துக்கசாகரத்தில் அழுந்தினார்கள்.
இவ்வகையான நற்சகுனங்களை கண்ணுற்ற “அசித்தா” என்னும் ஓர் பெரியவர் ஆனந்தங்கொண்டு அரசனுக்குக் குழந்தை பிறந்தவுடன் தேசத்தில் நற்காட்சிகள் தோன்றினபடியால் அக்குழந்தை வளர்ந்தபின் உலகத்திற்கு என்ன நன்மை உண்டாகுமோ என்னும் ஆசைகொண்டு குழந்தையை தரிசிக்கும்படி அரண்மனைக்குச் சென்றார்.
அசித்தா என்னும் பெரியவர் வருவதை அரசன் அறிந்து அவரை ஓர் ஆசனத்தில் உட்காரவைத்து தன் குழந்தையைக் கொண்டுவந்து அவர் பாதத்தில் வளர்த்தினான்.
அப்பெரியவர் சாக்கைய சிரேஷ்டராகையால் குழந்தையின் அங்கப்பாகக் கணிதங்களை நன்குணர்ந்து அதன் பாதங்களிலுள்ள தாமரை ரேகைகளைக்கண்டு தன் சிரசில் வைத்துக்கொண்டு ஆனந்தக்கண்ணீர் ததும்ப தேம்பித்தேம்பி அழுதார்.
அதைக்கண்ட அரசன் பயந்து தன் குழந்தை அற்பாயுளையுடையதோ! அல்லது வேறு கெடுதி பிறக்குமோ என்று பெரியவரை நோக்கி ஐயா யாதுகாரணத்திற்கு அழுகிறீர்கள்? என்றான்.
அதைக்கேட்ட பெரியவர் "அரசனே, நீர் யாதுக்கும் அஞ்சவேண்டாம். உன்மனைவி மாயாதேவியானவள் இக்குழந்தையை கருப்பந்தரிக்குங்காலத்தில்