பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பெரியோர்களே, தாபரங்களுக்கும் ஓர் சங்கமுண்டு, பட்சிகளுக்கும் ஓர் சங்கமுண்டு, மிருகங்களுக்கும் ஓர் சங்கமுண்டு, மக்களுக்கும் ஓர் சங்கமுண்டு. இவைகளுள் தாபரசங்கமமாகுந் தோப்புகளினால் பட்சிகளுக்கும், மிருகங்களுக்கும், மக்களுக்கும் நிழலளிப்பதன்றி காய் கனி கிழங்குகள் ஈய்ந்துத் தாங்களும் விருத்தியடைகின்றது.

பட்சிகளின் சங்கங்களோ ஒன்றுகூடிக் கூச்சலிட்டுத் தங்களினங்களைக் கார்த்துக்கொள்ளுகின்றது. மிருகங்களோ அதனதன் வகுப்பில் ஒன்றுகூடித் தங்களைக் கார்த்துக்கொள்ளுகின்றது. மக்கள் சங்கமென்று கூடி யாதொரு பயனுமடையவில்லை என்பது பரிதாபமே.

ஆயினும் பெரியோர்கள் பயனற்ற சங்கத்தை நாட்டிப் பாழடைந்ததைப்போல் சிறுவர்களையும் பாழடையவிடாமல் பயனடையுஞ் சங்கத்தில் சேருங்கோள் என்றோதி அவர்களையும் அவர்களில்லங்களுக்கு அனுப்பிவிட்டார்.

வீணைகோபாலன் ஐந்து சங்கத்தோர்களையுந் தருவித்து விசாரிணைச் செய்தவற்றில் யாதும் விளங்காததால் தந்தைக்கு வேவுவிடுத்து மற்றும் விதரண சங்கத்தோர் வேறுளரோ என்று உசாவினார்.

அவற்றிற்கு சக்கிரவர்த்தியார் சற்று நிதானித்து தனது மூதாதை கலிவாகுச் சக்கிரவர்த்தியின் வம்மிஷவரிசையோர்களாகிய சாக்கையர்களே ஆறாவது கடைச்சங்கத்தோர்களாக நின்று கணிதாதிகளை விளக்கிவருகின்றபடியால் அவர்களில் சில பெரியோர்களைத் தருவிக்க வேண்டும் என்றெண்ணி மிக்கோர்களை வரவழைத்து சாக்காய் நமது குழந்தை ஊர்வலஞ்சென்ற நாள் முதல் தனக்கேதோ ஓர் சங்கை தோன்றி தேசங்களிலுள்ள ஐந்து சங்கத்தோர்களையுந் தருவித்து உசாவியும் தனது சங்கை நிவர்த்தியாகாமல் மற்றுமுளரோ என்றேவினார். அதுகண்டு தங்களை வரவழைத்தேன். நீவிரும் அவ்விடஞ்சென்று குழந்தைக்குற்ற சங்கையை விளக்குவதுடன் சித்திரமாளிகையை விட்டு வெளியேறாதிருக்கும் விதரணைகளை ஊட்டி இளவரசை நிலைபெறச் செய்யுங்கோள் என்றனுப்பினான்.

சாக்காக்களும் சக்கிரவர்த்தியினாக்ஞைப்படி சித்திரமாளிகைச் சென்று சித்தார்த்தரைத் தெரிசித்து ஆசனத்திருந்து அரசே, எங்களைத் தருவித்தக் காரணம் யாதென வினாவினார்கள்.

பெரியோர்களே, தங்கள் சங்கத்தின் நோக்கங்களையும் அதன் பயன்களையும் அறியவேண்டியவனாயிருக்கின்றேன் விளக்குங்கோளென்றார்.

அரசே, எங்கள் சங்கத்தின் நோக்கமும் அதன் பயனும் யாதென்பீரேல் :
ஒன்பது கிரகங்கள் கூடி நடத்துஞ் செயல்களே உலகத்தில் பொருந்தும் நிகழ்ச்சி என்றும் ஒவ்வோர் காயங்களின் நிகழ்ச்சியும் நன்மெய் தின்மெயும் தோற்ற ஒடுக்கங்கள் யாவும் நவக்கோட்களின் ஆட்டங்கள் என்றறிந்து அதன்மேறை நடந்து வருகிறோமென்றார்கள்.

கௌதம சிறுவர் பெரியோர்களை நோக்கி ஐயமின் உலக பொருத்தமும் காயங்களும் நன்மெய் தின்மெய்களும் தோற்ற ஒடுக்கங்களுமாகிய நிகழ்ச்சிகள் யாவும் நவக்கோட்களின் ஆட்டமென்றால் அச்செயல்கள் ஏதுக்குத்தக்க நிகழ்ச்சியா, நிகழ்ச்சிக்குத்தக்க ஏதுவாவென்றார்.

அரசே, சருவசெயலும் நவக்கோட்களின் நிகழ்ச்சியென்றார்கள்.

பெரியோர்களே, சருவ நிகழ்ச்சிகளுக்கும் நவக்கோட்களே ஏதுவென்பீர்களோ என்றார்.

அரசே, சருவ நிகழ்ச்சிகளுக்கும் நவக்கோள்கள் தான் ஏதுவென்றார்கள்.

பெரியோர்களே, நன்மெய் தின்மெய்கள் இரண்டிற்கும் நவக்கோட்களே ஏதுவென்பீர்களோ என்றார்.

அரசே, தீக்கோட்கள் நோக்கமுருங்கால் தீயபலனையும், நற்கோட்கள் நோக்கமுறுங்கால் நல்ல பலனையுந் தருமென்றார்கள்.

பெரியோர்களே, நற்கோள் பார்வைக்கோர் ஏதுவும், தீக்கோள் பார்வைக்கோர் ஏதுவும் இருக்குமல்லவோ என்றார்.