பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 229

சித்துக்களுந் தானே விளங்கும். அதைக் காணாமல் நீங்களே சித்தினெண்ணங்கொண்டு செய்வீர் களானால் டம்பம் அதிகரித்து மெய்ப்பொருள் மறையும் என்று கூறினார்.

அதை அவர்களுணராது ஆசிரியருக்கே சித்தினிலை தெரியாதென்றகங் கரித்த எண்ணத்தை அறிந்த அறிவன் விருட்சத்தடியிலிருந்து மறைந்து தான் வரும்வழியில் தனது பொற்குண்டலங்களை கழட்டிக் கொண்டு செப்புக் குண்டலத்தை செவியிலிட்ட வைந்தரக்கர்கள் முன் தோற்றினார்.

ஆதிவேதமென்னும் மூன்று பேதவாக்கியங்களை ஓதியவரும் அதில் மறைந்துள்ள நான்கு மறைப்பொருட்களாம் உபநிடதங்களை விளக்கியவரு மாகிய வேதியன் மரத்தடியிலிருந்து மறைந்தவுடன் அவ்விடம் நிறைந்துள்ள சகல மக்களுந் திகைத்து நின்றார்கள். அவர் ஆசனத்தைத் தாங்கினின்ற யானை, ரிஷபம், சிம்மம் இவைகள் அவரைத்தேடவும், அவர் தோளிலும் தாளிலும் புறண்டு விளையாடிக் கொண்டிருந்த சர்ப்பங்கள் ஓடிவந்து அவர் உட்கார்ந்து இருந்த மரத்தடியில் வந்து படமெடுத்து ஆடுகிறதும் வந்திருக்கும் மக்களைப் பார்த்துக் கவிழ்ந்து கொள்ளுவதுமாகியச் செய்கையிலிருந்ததுகள். அரசனை மரத்தடியில் காணாத மக்கள் சர்ப்பங்களை தரிசித்துக்கொண்டு போனார்கள். அவரை ஏந்தி செல்லும் ரிஷபமும் அவராசனத்தின் முன் வந்து சயனித்துக்கொள்ளுதலே தொழிலாயிற்று.

சீவக சிந்தாமணி

ஆதிவேதம்பயந்தோய் நீ யலர்பெய்மாரி யமர்ந்தோய் நீ
நீதி நெறியை உணர்ந்தோய் நீ நிகரில் காட்சிக் கிறையோய் நீ
நாதனென்னப்படு வோய் நீ நவை செய்பிறவிக் கடலகத்துன்
பாதகமலந் தொழ வெங்கள் பசையாப்பவிழப் பணியாயே.

அருங்கலைச்செப்பு

வேதங்கடன்னை விளித்தான் மெய்யுரைத்தான் / போதிசேர் வேந்தன் புகழ்.

சூளாமணி

ஆதியங்கடவுளை யருமறை பயந்தனை, / போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை.
போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கிய, / சேதியஞ்செல்வ நின்றிருவடி வணங்கினம்.

சீவகசிந்தாமணி

குழலுடைச்சி கழிகைக் குமரன் தோளினை
கழலுடையிளையவர் கச்சின் வீக்கலி
னழலுடைக் கடவுளை யரவு சேர்ந்தென
விழவுடைமுது நகர் விலாவிக்கின்றதே

யாப்பருங்கலைக்காரிகை

வாளார்ந்த மழைத் தடங்கள் வனமுலைமேல் வம்பநுங்கக்
கோளார்ந்த பூணாகங்குழைபுறள கோட்டெருத்தின்
மாலைதாழ் கூந்தலார் வரன் முறையான் வந்தேத்த
சோலைதாழ் பிண்டிக்கீழ் சூழ்ந்தவர்தன் சொன் முறையான்

ஐந்து பேரும் அரவங்காட்டாது அடித்துப்பரிக்கும் அரக்கர்களாதலின் திகைத்துக்கண்டபகவனின் தோற்றத்தால் தியங்கி தங்களால் செப்புக்குண்டலம் அளித்த தேசிகனென்று மயங்கி ஒருவருக்கொருவர் தங்கள் தங்கள் முகங்களைப் பார்த்துக்கொண்டு வாய் பேசாமல் நின்றார்கள்.

அதை உணர்ந்த பகவன் அரக்கர் ஐவர்களையும் நோக்கி அன்பர்களே! தங்கள் இருப்பிடங்கள் எங்கு, செய்யுந் தொழில்கள் என்னை, மனைவி மக்கள் எவ்விடம் என உசாவினார்.

அரவம் அடங்கியக்கால் அடித்து பரித்து ஏதோரிடமுமின்றி எதேச்சையாய்த் தின்று திரிபவர்களாதலின் பகவன் முகமலர்ச்சியையும், அவரது தேஜசையும், அன்பு மிகுத்த பார்வையும், மிருதுவான வார்த்தையையுங் கண்ட ஐந்தரக்கர்களுந் தங்களுக்குள் சதா குடிக்கொண்டிருந்த கள்ள விஷங்களாகும் அரவத்தை அகற்றி ஐயன் பாதத்தில் வீழ்ந்து எங்கள் அக்கிரமங்களைப் பொருக்க வேண்டுமென்று வணங்கினார்கள்.

அதை அறிந்த பகவன் ஐவரையும் எழுந்திரியுங்கோள் என்று கூறி ஓர் மரத்தடியில் உட்கார வைத்துக்கொண்டு அன்பர்களே தாங்கள் செய்துவந்த அக்கிரமங்கள் எவை யான் பொருக்க வேண்டியவைகள் யாதென உசாவினார்,