பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 231

முன்னிவ்விடம் வந்திருந்த சக்கிரவர்த்தித் திருமகனென்று உணர்ந்து அருகில் சென்று முன்கண்ட வடிவில் மிகுத்த அவர்முக வஜிகரத்தையும் கருணைமிகுத்த பார்வையையுங் கண்டவுடன் பாதம்பணிந்தெழுந்து வர்த்தமனங்களை விசாரித்துக்கொண்டே அரண்மனைக்குச் செல்லும் விஷயத்தை உணர்ந்த விமலன் அரசனைத் தடுத்து அரண்மனைக்கேகலை விடுத்து எதிரிலுள்ள ஓர் மலைமீதேறி நிழலில் உட்கார்ந்து மெய்யறமாகும் புத்ததன்மத்தை விளக்கிவருங்கால் அரசன் எக்காலுங் கேட்கா அமுதவாக்கியத்தால் ஆனந்தம் பெருகி ஐயனை வணங்கி மெய்யனே என்னால் ஆகவேண்டிய செயல்களுக்கு ஆக்கியாபித்தல் வேண்டுமென வாய்பொத்தி நின்றான்,

ஆதிநாதன் அரசனைநோக்கி உன்தேசமெங்கும் சத்திய தன்மம் பெருகி குடிகள் ஒழுக்கத்திலும் நீதிநெறியிலும் நிற்கவேண்டியதாதலின் வரிவடிவாம் அட்சரங்களைக் கற்றுக்கொண்டு தசபாரமாம் பாரதப்பத்தை இப்பாறையில் பதிவுசெய்து குடிகள் இதயத்தில் நிலைக்கச்செய்ய வேண்டுமென்று கூறினார்.

அருங்கலைச்செப்பு - சிகரப்பத்து
விம்ப அரசர்க்கு வரிவடிவம் ஈய்ந்து / வைம்மலை ஓர்ந்தானறன்.

அரசன் அவ்வாக்கியத்தை சிரமேற்கொண்டு வரிவடிவாம் வட அக்கரங்களையுந் தென்னக்கரங்களையுங் கற்று பாறையில் பதிக்குஞ் சீலத்தை வினவினான்.

அரசன் மனதில் வரிவடிவட்சரங்கள் பதியும்வரையில் அவ்விடமே புசித்து மலையில் தங்கி தன்மங்களைப் போதிக்குங்கால் திரண்ட கூட்டங்கள் மலைக்குவந்து தன்மத்தை வினவும் போக்குவருத்தில் இருந்தார்கள்.

அரசன் பாறைப்பதிவை வினவியகால் ஓர் பாறையைத் திருத்தி அடியில் குறித்துள்ள தசபாரங்களைப் பதியச்செய்தார்.

உங்களுக்குள்ள அன்பை மற்ற சீவராசிகளின் மீதருளி சீவர்களை
விருத்தி செய்வீர்களாக.
உங்களுக்குள்ள பாக்கியத்தை நடு நிலைமெயினின்று எழிய மக்களுக்கீய்ந்து
யீடேற்றுவீர்களாக
உங்கள் மனத்தைப் போகும் போக்கில் விடாமல் அடக்கத்தினின்று
ஆண்டு கொள்வீர்களாக
உங்களுக்குள்ள ஒழுக்கங்களை வழுவடையாது நற்பாதையில் நடத்து
வீர்களாக
உங்கள் மனைவியை மற்றவன் விரும்பாதிருக்க எண்ணுகிறவர்கள் அன்னியர்
மனையாளை யிச்சியாதிருப்பீர்களாக
உங்கள் பொருளை மற்றவர்கள் களவாடாதிருக்க விரும்புகிறவர்கள் அன்னியர்
பொருளை அபகரிக்காதிருப்பீர்களாக.
உங்களுடலுக்கு மற்ற சீவராசிகளால் கொலையும் தீங்கும் நேரிடாமல் இருக்க
விரும்புகிறவர்கள் மற்ற சீவராசிகளை கொலையும் தீங்கும்
செய்யாமலிருப்பீர்களாக.
உங்களறிவை விருத்தி செய்ய விரும்புவீர்களாகில் உங்களறிவை
மயக்கும் வஸ்துக்களை அருந்தாதிருப்பீர்களாக.
உங்களை ஒருவன் பொய் சொல்லி வஞ்சியாதிருக்க விரும்புகிறவர்கள்
நீங்கள் ஒருவரைப் பொய் சொல்லி வஞ்சியாதிருப்பீர்களாக.
உங்களிதயத்தில் எழும்பும் காம வெகுளி மயக்கங்களை எழவிடாமலும்
தங்கவிடாமலும் அகற்றுவீர்களாக.

என்று ஒழுக்கங்களையும் சீலங்களையும் பதிவு செய்ததை உணர்ந்த அரசன் மற்றுமுள்ள பாறைகளிலும் பதியச் செய்து குடிகளும் அரசனும் தினேதினே உண்மெய் விசாரிணையிலிருந்தார்கள்.

பாரதப்பத்து

அன்பை பெருக்கியாருயிர்க்கூட்டி இன்பை விருத்திச்செயல்,
அறத்தை விருத்தியாருயிரோம்பல் புறமெய் நடு நிலையாம்.
மனத்தை ஒடுக்கி தாழுடலடக்கல் கனத்த கடனென்றறி,
உள்ள ஒழுக்கமுயரத்தோன்றல் விள்ளுஞ் சுகவழியாம்.
அன்னியர் மனைவி ஆசையேற்றல் உன்னியல் பாழ்மனையாம்.
ஊர் பொருளாசையுள்ளத் தெழுவல் பேர்மனை தற்பொருள் பாழ்.
தன்னுடல் கார்க்குந் தனையர்தரணி மன்னுயிர் காத்தல் மனு.
அறிவை பெருக்கி ஆற்றலடைவோர் தெறிவை மயக்கமறல்.