பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நினைக்கின்றாய். ஒருவித உணர்ச்சியை நீர் சாதித்துவருகையில் மற்றும் இருவகை உணர்ச்சிகளை அதேகாலத்தில் அதே சாதனத்தில் இல்லாததைக் காண்கின்றீர். இவ்வகை ஒருகாலத்திலுள்ள உணர்ச்சியும் நுகரலும் மறுகாலத்தில் மடிந்துவிடுகிறபடியால் இம்மூன்றையும் அநித்தியமென்று கூறப்படும். இத்தகைய ஒருகாலத்திலுள்ள உணர்ச்சியும் நுகரலும் மறுகாலத்தில் மடிந்துவிடுகிறபடியால் இம்மூன்றையும் அநித்தியமென்று கூறப்படும். இத்தகைய காரணங்களால் தோன்றிய காரியங்கள் அழிவுக்குக் கீழ்படிதல் வேண்டும், மரணத்திற்குக் கீழ்படிதல் வேண்டும். அவைகளின் இருப்பே பிறிதலிலும் மறைதலிலும் அடக்கப்பட்டுள்ளன. இவ்வகை உணர்ச்சிகளில் ஒன்றை எவன் கண்டுக்கொள்ளுகின்றானோ அவன் பின்வருமாறு கூற ஆரம்பிப்பான். இது என் ஆன்மா என்று முன்புகூறி பின்பு இந்த உணர்ச்சியின் மறைவால் என் ஆன்மா அழிந்ததென்பான். இவ்வகை சிந்தித்த அதே காலத்தில் இந்நிலையற்ற வாழ்க்கையாம் உணர்ச்சியால் என் ஆன்மா அநித்தியமென்று சம்மதித்துக்கொள்ளுவான்.

ஓ! சகோதிரர்களே! இன்னொரு சகோதிரன் உணர்ச்சியையே என் சுத்த ஆன்மமல்ல, என் சுத்த ஆன்மம் உணர்ச்சிக்கு உட்படாத தாயிருக்கின்ற தென்பான். அவனுக்குப் பின்வருமாறு விடையளிப்பீர்களாக.

ஓ! சகோதிரனே! உமக்கு உணர்ச்சியில்லாவிட்டால் நான் வருகின்றேன், போகின்றேன், கூறுகின்றேன் என்னும் வாக்கியந் தோற்றுமாவென வினவி உணர்ச்சியின்றி இவ்வாக்கியங்கள் தோன்றாதென விளக்கி அப்பிரயோசன வார்த்தைகளை விலக்கல் வேண்டும். –

மற்றும் இன்னோர் சகோதிரன் உணர்ச்சியே என் ஆன்மாவல்ல உணர்ச்சி ஆன்மாவுக்கு அப்புறப்பட்டதென்று கூறுவதும் பிசகு. ஆனால் என் சுத்த ஆன்மாவே உணர்ச்சியை அறிந்துகொள்ளுகின்றது. என் ஆன்மாவுக்கு அவ்வகை அறியுஞ் சக்தி உண்டென்றுங் கூறுவான். அவ்வகையால் கூறுஞ் சகோதிரனுக்குப் பின்வருமாறு விடையளிப்பீர்களாக. உணர்ச்சியற்று அதன் தொடர்ச்சி யாதொன்றுமில்லாமல் உணர்ச்சியே நிர்மூலமானபின்பு உணர்ச்சியற்ற சூன்யத்தில் நான் இருக்கின்றேன், நான் போகின்றேன், நான் கூறுகின்றேனென்னும் வாக்கியம் எழ முடியாதல்லவா. ஆதலின் இத்தகைய அப்பிரயோசன வார்த்தைகளையும் அகற்றல் வேண்டும்.

இன்னொரு சகோதிரன் எண்ணங்களை சுத்த ஆன்மா என்பான். அதுவும் சூன்ய அஸ்திபாரமேயாம். ஏனெனில் எண்ணும் எண்ணங்கள் எழுவதும் மடிவதும் தோன்றுவதும் கெடுவதும் அநுபவக் காட்சியாயிருக்க ஆன்மாவும் தோன்றுவதுங் கெடுவதுமாக முடியும். ஆதலின் எண்ணமே ஆன்மாவென்பதும் அப்பிரயோசன வார்த்தையாகும்.

மற்றுமோர் சகோதிரன் எண்ணத்தை அறியும் உணர்ச்சியாகும் அறிவே சுத்த ஆன்மமென்பான். அவ்வாக்கும் சூன்ய அஸ்திபாரமாகும் எவ்வகையில் என்றால் எண்ணத்தாலாய அறிவு தோன்றுவதையுங் கெடுவதையும் அறிகிறோம். அறிவு கெட்டவன் என்னும் மொழியையுங் கேட்கின்றோம். ஆதலின் எண்ணத்தாலாய அறிவே ஆன்மா என்பதும் அப்பிரயோசன வார்த்தையாம்.

இன்னொரு சகோதிரன் மனமே சுத்த ஆன்மா என்பான். அதுவும் சூன்ய அஸ்திபாரமேயாம். இயாதெனில், மனமானது தோன்றுவதுங் கெடுவதுமாகக் காண்கின்றோம். அதுபோல் ஆன்மா கெடுவதுந் தோன்றுவது மாயின் சுத்த ஆன்மாவாகா. ஆதலின் அதுவும் அப்பிரயோசன வாக்கியமாம்.

ஓ! சகோதிரர்களே! மனம், எண்ணம், உணர்ச்சி என்னும் பெயர்களை ஆன்மாவென்று கூறுவதினும் நான்கு பூத சேர்க்கையால் தோன்றுந் தேகமென்னும் ரூபமே ஆன்மாவென்று கூறியிருப்பது பிசகன்று. ஏனென்பீரேல், நான்கு பூதத்தின் சேர்க்கையாலாய தேகம் ஒருவருஷம் பத்து வருஷம் நூறு வருஷம் நிலைத் தேனுமிருக்கும். ஆனால் மனம் உணர்வு அறிவு இவைகள் இரவும் பகலும் க்ஷணத்திற்கு க்ஷணம் தோன்றுவதும் மறைவதுமாய் இருக்கின்றது. ஆதலின் தேகம் சடபதார்த்தத்தைச்