பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வென்றான், என்பொருளைத் திருடினானென்றுகூறும் ஒருவனுடைய எண்ணங்கள் யாதால் வந்ததென்று மேற்கண்ட அறிவுடையோன் தெரிந்துக் கொள்ளுவதுடன் அவ்வகையான மனதையுடையவன் கொடூரத்தினின்று மீளமாட்டான் என்று அறிவான். ஏனெனில், கோபத்தைக் கோபத்தால் வெல்ல முடியாது. கோபத்தை சாந்தத்தால் வெல்லக்கூடும் என்பதை உணர்ந்திருப்பதினாலேயாம்.

ஒருவன் தான் செய்யுந் தருமத்தைப் பேசிக் கொடுத்தலினும் முக மலர்ந்து இனிய வார்த்தைகளைப் பேசுதல் அதி தன்மமாம், தன்மத்தினொளியானது அன்புடன் முகமலர்ந்தீயுந் கொடையினிற்கும் என்பதாம். அன்பும் உபசரிப்பும் முகமலர்ச்சியும் உடைய இனிய சொற்களாலீயுந் தருமத்தை உடையவனைத் துன்பம் அணுகா திருப்பதுடன் வறுமையும் அகலும் என்பதாம்.

ஒவ்வொரு மனிதனையும் பிரகாசிக்கச்செய்யும் ஆபரணங்கள் யாதெனில், பெரியோர்களை வணங்குதலும், முகமலர்ச்சியும், இனிய வார்த்தைகளுமேயாம்.

ஓ! சகோதிரர்களே! இத்தகைய ஒழுக்கமும், முகமலர்ச்சியும், இனிய வார்த்தையையும் அநுஷ்டிக்கின்றவன் எவனோ அவன் புத்ததேவனுலகை அறிந்தவனாகின்றான்.

இவ்வநுஷ்டானத்தை உடையவன் திருடர்களையேனுங் கொலையாளி களையேனுங் கண்டபோது கலக்கமில்லாமல் இருப்பான். மனதில் கெட்ட எண்ணங்கள் இருந்தால் வாக்குக் கொடூரத்தில் எழும்பும் மனதில் அன்பும் சமாதானமும் பெருகிநிற்கில் முகத்தில் மலர்ச்சியும், வாக்கில் இனிய வாக்கும் எழும்.

கோபத்திற்கும் பொறாமெய்க்கும் வேரில்லாமலும், எல்லையில்லாமலும், ஆழமில்லாமலும் அடியோடும் எறிந்துவிட்ட புருஷனின் பற்றிருக்கவேண்டும்.

4. (விண்வார்த்தை) அதாவது பயனில் சொல்லாமெய். ஓ! சகோதிரர்களே! ஒரு மனிதன் வீண்வார்த்தைப் பேசுவதைவிட்டு நீங்குவானாயின் அவன் மறுபடியும் பேசவேண்டிய காரியங்களைப் பேசி பேசவேண்டாத காரியங்களை அகற்றிவிடுவான். எப்போதுந் தனக்கும் எதிரிக்கும் பிரயோசனம் உண்டாகுந் தன்மத்தைப் பற்றியுஞ் சங்கத்தைப் பற்றியும் பேசுவான். தான் சொல்லும் வார்த்தைகளால் எதிரிகளுக்கு யாதாமொருப் பிரயோசனமும் இல்லையென்று தெரிந்து கொண்டவன் நாணமுற்று மறுபடியும் பயனிலா சொற்களைப் பேசாதிருத்தல் வேண்டும்.

தனது பந்துக்களிடத்தும், நேயர்களிடத்தும் பயனிலா சொற்களைப் பேசுதல் தீதென்றறிந்து கொண்டவன் கனவிலும் பயனற்ற சொற்களை கருதலாகாது. பயனற்ற வார்த்தைகளைப் பேசித் திரிதலின் பயன் யாதெனில், உள்ள நீதியும் நெறியும் அகன்று சற்குணநிலை பெயன்று போமென்பதாம். பயனற்ற சொற்களைப் பன்னிப்பன்னிப் பேசுபவனை பெரியோர்கள் பதரென்று கூறுவார்களென்று உணர்ந்து மறந்தும் பயனற்ற வார்த்தைகளைப் பேசலாகாது. சத்திய தன்மத்தை உணர்ந்தவர்கள் மிருதுவான வார்த்தைகளைப் பேசாவிடினும் பயனற்ற வார்த்தைகளைப் பேசாதிருத்தல் வேண்டும்.

இத்தகைய வாக்குநிலை பெற்றவன் செயல் சுகத்தைக் கொடுக்கக் கூடியதாகும். இரண்டுவிதமான விஷயத்தில் பற்றுள்ளவனாகின்றான். அதாவது, பயனுள்ள தருமத்தை சம்பாஷிக்கவேண்டும் என்பதோர்பற்று.அவ்வகை தருமநிலையினின்று சாந்தத்தை நிறப்பவேண்டும் என்பதோர் பற்று. இப்பற்றாகும் பயன் தரும்பொருளே பற்றற்றான் பற்றாகும் நல்வசனம் எனப்படும்.

சம்மா கம்மந்தா - நற்செய்கை

1வது கொலை ஓ! சகோதிரர்களே! நற்செய்கையைப்பற்றி தகாகதன் விளக்குகின்றேன். ஒரு மனிதன் கொலைத்தொழிலை விட்டு இனி அக்கொலைத் தொழிலை செய்வதில்லையென்று நோன்புகொண்டு தனது கைகளிற் கத்திகளை யேனுந் தடிகளையேனுந் தொடாமல் சருவசீவர்களின் பேரிலும் அன்பு பாராட்டலாலும் சீவர்கள் இம்சைக்குப் பரிதாபப்படுதலினாலும் உயிர்களை ஆதரிக்கத் தக்கவனாகின்றான். தனக்குக் கிடைத்துள்ள ஆகாரத்தை சருவ