பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஓளவைக் குறள்
செல்லல் நிகழல் வருங்கால் மூன்றினையுஞ் / சொல்லுமௌனத் தொழில்

இவைகள் யாவும் தேகவிசாரிணையால் இதயத்தை சுத்தீகரித்தவிடத்தில் தோன்றும் காட்சிகளாம்.

2-வது வேதனா (சத்திபதானா) சம்யக் ஸ்மிருதி, அதாவது, நுகர்வுகளிலிருந்து உண்டாகுங் கேடுகளை விவரிக்கின்றேன்.

ஓ! சகோதிரர்களே! நுகர்வுகளை தியானிக்கத்தக்க மனிதன் பின்வருமாறு சிந்திப்பான். நுகர்வுகளென்னும் உணர்ச்சியை ஆராயும் விருப்புள்ளவன் நுகர்வுக ளின்னதென்றும், வெறுப்புள்ள நுகர்வுக ளின்னதென்றும், நடுநிலையுள்ள நுகர்வுகளின்னதென்றும் சத்திய தருமத்தின்படித் தெளிவான்.

இலௌகீகத்திற்கடுத்த விருப்புள்ள நுகர்வுகளின்னதென்றும் வெறுப்புள்ள நுகர்வுகளின்னதென்றும் இலௌகீகத்திற்கு அடுத்த நடுநிலையுள்ள நுகர்வுக ளின்னதென்றும் சத்தியதன்மப்படி தெளிகின்றான்.

இவ்விதமாகத் தன்னிடத் துண்டாகும் நுகர்ச்சிகளாம் உணர்ச்சிகளைப் பற்றி சிந்திப்பான். அந்நியனிடத் துண்டாகும் நுகர்ச்சிகளென்னும் உணர்ச்சி களைப்பற்றி சிந்திப்பான்.

இவ்விதமாகத் தன்னிடத்துண்டாகும் நுகர்ச்சிகள் எவ்வகையிலுதிக் கின்றனவென்றும், அன்னியனிடத் துண்டாகும் நுகர்ச்சிகள் எவ்வகையால் உதிக்கின்றனவென்றும், தனக்குள் மறையும் நுகர்ச்சிகளைப்பற்றியும் பிறனுக்குள் மறையும் நுகர்ச்சிகளைப் பற்றியும் நடுநிலையில் மறையும் நுகர்ச்சிகளைப் பற்றியும் சிந்திப்பான்.

நுகர்ச்சிகளின் உதிப்புகள் யாவையும் உற்று நோக்குவான்.

இவ்வகையில் உற்றுநோக்கும் உணர்ச்சிகள் உற்றுநோக்குமிடத்தில் உதிப்பதென்றும் உணர்வான்.

இத்தகைய நுகர்வின் நுண்ணறிவு தோன்றிய காரணம் யாதெனில் தன்னையுந் தன் செயலையும் விசாரித்து உணர்ந்த சத்தியதன்மத்தின் பற்றற்ற நிலையேயாம்.

உலகில் நான் உணர்கின்றேன் என்ற பதத்தை சுத்த சிந்தனையிலிருந்து ஒருவன் சாதாரண பேச்சு முறையன்றென்றும் இஸ்திரமானதல்லவென்றும் உற்றுநோக்குமிடத்துத் தானே உணர்பவனென்று தெளிகின்றான்

இவ்வகை ஆழ்ந்த அறிவுடன் உணர்ச்சிகளைப்பற்றி சிந்திக்குஞ் சிந்த னையே நுகர்வாகும் வேதனா தியானம் எனப்படும்.

3வது சித்த (சத்திபதானா) சம்யக் ஸ்மிருதி. அதாவது, எண்ணங்களின் நிலையில்லா செய்கைகளைப்பற்றிய தியானத்தை விளக்குகின்றேன். அதாவது உதிக்கும் எண்ணத்தை நோக்குகின்றவன் எண்ணங்களின் தோற்றுதலை கிறகிக்கின்றான்.

1. பேராசையின் யெண்ணங்களையும், பேராசையற்ற எண்ணங்களையும். 2. கோபத்தை எழுப்பும் எண்ணங்களையும், கோபத்தினின்று மீண்ட எண்ணங்களையும், 3. பொய்க்காட்சிகளது எண்ணங்களையும், பொய்க் காட்சிகளினின்று மீண்ட எண்ணங்களையும். 4. மனதை ஒன்றிலே செலுத்திய எண்ணங்களையும், மனதைப் பலவகையில் சிதரவிட்ட எண்ணங்களையும். 5. தாழ்ந்த எண்ணங்களையும், மகத்துவமுள்ள எண்ணங்களையும், 6. நீச்ச எண்ணங்களையும், புகழத்தக்க எண்ணங்களையும், 7. மனங்குவியும் எண்ணங்களையும், மனத்தின் நிலையற்ற எண்ணங்களையும். 8. சிக்கற்ற சுயக்கியான நேரான எண்ணங்களையும், விலங்கி லகப்பட்ட எண்ணங்களையும் ஆழ்ந்து சிந்திப்பவனாகின்றான்.

இவ்வகை ஆழ்ந்த சிந்தனையில் தன்னிடத்துதிக்கும் எண்ணங்களையும், அன்னியரிடத்துதிக்கும் எண்ணங்களையும், எண்ணங்கள் உதிக்கத்தக்க பீடங்களையும், அவைகள் ஒடுங்கும் இடங்களையும் ஆராய்வான். எண்ணங்கள் தோற்றுதற்கும் மறைவதற்கும் உள்ள காலவரைகளை சிந்திப்பான் தோற்றுதற்கும் மறைவதற்கும் உள்ள யேதுக்களை நோக்குவான்.