பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 263

இவ்வகை நோக்கத்தின் மிகுதியும் நுண்ணறிவும் உண்டாகும் ஏதுக்கள் யாதெனில், தன்னையுந் தன் செயலையும் ஆராயும் பற்றற்ற நிலையேயாம்.

இத்தகைய ஆராய்ச்சியின் ஆழ்ந்த விழிப்பே எண்ணங்களின் தியானம் எனப்படும்.

4வது காம்பீர தம்ம (சத்தி பதானா) சம்யக் ஸ்மிருதியை விளக்குகின்றேன். அதாவது, அந்தரங்கத் தோற்றங்களின் விகாரங்களைப் பற்றிய அறியுஞ் சிந்தனை என்னும் தியானமேயாம்.

இக்காம்பீர தன்மம் ஐந்து வகை உள்ளடக்கத்தை உடையது.
1. பஞ்சநீவர்னீய. 2. பஞ்சஸ்கந்த. 3. ஆயதன. 4. சத்த சம்போஜங்கய. 5. சதுர்சத்ய வென்பவைகளாம்.

1வது பஞ்சநீவர்னியத்தில் 1. காமச்சந்த. 2. வியாபாத. 3. தீனமித்த. 4. உத்தச்சக்குக்கச்ச. 5. விஸிகிச்சா என்னும் ஐந்து பிரிவுகளுண்டு.

1. இதிற் (காமசந்தா) யாதெனில் ஒருவன் காமாக்கினியில் வெதும்புங்கால் காமயிச்சைப் பெருக்கத்திலிருக்கின்றான் என்றும் இக்காமாக்கினி மறுபடியும் எவ்விடமிருந்து எழும்புகிறதென்றும் எவ்விடத்தில் இல்லாமல் அடங்குகிற தென்றும் அவ்வகை எழும்புங் காமாக்கினியால் உண்டாகும் இன்பம் தன் தேகத்தில் ஜெநிக்கின்றதா அந்நிய தேகத்தில் ஜெநிக்கின்தாவென்று உணர்ந்து காமத்தில் எரிவுக்குங் காம எரிவின் இன்பத்திற்குந் தன் தேகமே காரணமாதலின் இச்சிற்றின்பத்தின் வீணவாவால் தேகத்தைப் பிணிக்குள்ளாக்கி கேடுண்டாக்கிக் கொள்ளுவது தகாதென்றறிந்து காமாக்கினியை அவித்து அதனின்று தப்பித்து அவ்விச்சையில் விடுபட்டவனாகின்றான்.

2. (வியாபாத) வென்னுங்கோபக்கினியானது தன்னையொருவன் மனனோகப் பேசியவிடத்திலும் தன் தேகத்தை நோக புடைத்தவிடத்திலும் தன் பொருளை யபகரித்த விடத்திலும் பிறத்தலால் இக்கோபாக்கினியின் தோற்றத்திற்கு பேரவாவின் பீடமே நிலையென்று உணர்ந்து கோபத்தையும் அவாவையுஞ் சீர் தூக்கி உணர்ந்து தன்னுடையது பிறனுடையதென்னும் அவாவின் மூலாக்கினியே கோபாக்கினியாயதால் அவாவை யடக்கிக் கோபத்தைத் தணிக்க முயலுகின்றான். அம்முயற்சியே அவாவையறுத்து கோபாக்கினியை யவித்து அவ்வக்கினிக்குத் தப்பித்து கோபத்தினின்று விடுபட்டவனாகின்றான்.

3. (தீன்மீத்த) வென்னும் சோம்பலானது மிதமின்றி புசிக்கும் பொசிப்பினிடத்துஞ் சதா மதோன்மத்தத்திடத்து முதிப்பதென்றுணர்ந்து மிதாகாரம் புசித்து மதோன்மத்தம் போக்கி சோம்பலை நோக்குவான். அச்சோம்பலும் அசதியும் நீக்கியவிடத்து தனக்குள் எழுஞ் சுருசுருப்பையும் ஆனந்தத்தையும் உணருவான். அன்றுமுதல் சோம்பலுக்கும் அசதிக்கும் மூலமாகும் மிதபுசிப்பையும் மதோன்மத்தத்தையும் அகற்றி சோம்பலும் அசதியுந் தன்னை யணுகாமல் அகற்றி அதனின்று விடுப்பட்டவனாவான்.

4. (உத்தச்சக்குக்குச்ச) வென்னும் பெருமகிழ்ச்சியும் அதனிறை வியாகூலமும் உண்டாவதற்கு மூலம் தனக்குள்ள பூநிதியும் தன நிதியும் பசுநிதியுங் குரைவில்லாமல் இருக்குங்கால் பெருமகிழ்ச்சியடைவான். அவைகள் மாண்டவிடத்து மாளா வியாகூலமடைவான். இவ்வகை மகிழ்ச்சிக்கும் வியாகூலத்திற்கும் பொருள் சேர்க்கையின் பெருந் தோற்றமும் பொருளழிவின் சிறுந்தோற்றமுங் காரணமென்றுணர்ந்து திரண்ட திரவியஞ்சேரினும் பெருமகிழ்ச்சி அடையாமல் பெருந்திரவியம் அழியினும் வியாகூலமடையாமல் உலகப் பொருட்கள் தோற்றுவதும் மடிவதும் உள்ள சுவாபமென்று உணர்ந்து மகிழ்ச்சிக்கும் வியாகூலத்திற்கும் மத்தியில் நின்று பெரு மகிழ்ச்சியையும் வியாகூலத்தையும் வெல்லுவான், தற்புகழ்ச்சியாம் மகிழ்ச்சியையும் வியாகூலத்தையும் வென்றவன் அவைகளினின்று சதா விடுபட்டவனாகின்றான்.

5. (விசிகிச்சா) வென்னும் சந்தேகமென்பது ஒருவன் மரணமடைந்தபின் சுகமுண்டென்னும் இடத்திலும், மற்றொருவன் மரணமடைவதற்குமுன் சுகமடைய வேண்டுமென்னும் இடத்தில் உதிப்பதை உணர்வான்.