பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பூமிசை நடந்து உலகெங்கும் சுற்றிவந்தபடியால் உலகளந்தோனென்றும், உலகத்தில் அருமையான சற்குருவாக வந்தபடியால் அருகனென்றும், அரசனுடைய பிள்ளையாகையால் கோபாலனென்றும், அரசருக்குள் விந்தையான துறவடைந்த படியால் கோவிந்தனென்றும்.

காமத்தை செயித்துக்கொண்டபடியால் காமதகனனென்றும், மரணத்தை செயித்துக்கொண்டபடியால் கால காலனென்றும், பெருத்தக்கூட்டங்களிலுள்ள ஒவ்வொருவர்களுடைய எண்ணங்களையும் அறிந்து அவரவர்களுக்குள்ள சந்தேகங்களை நிவர்த்திச்செய்துக்கொண்டு வந்தபடியால் ஆயிரங்கண்ண னென்றும், உலகத்தைக்காணும் ஊனக்கண்கள் இரண்டும், உண்மெய்காணும் ஞானக்கண் ஒன்றும் கூடிய முக்கட்பகவனென்றும்.

மோட்ச வீட்டிற்கு முதன்மையான வழிகாட்டியாயிருந்த படியால் அண்டர் கோன், வானவர்க்கு அரசன் என்றும், ஒவ்வோர் அரசர்களையும் தருமக்கொடி நாட்டும்படி செய்து வந்தபடியால் தருமராசன் என்றும், அங்கங்கு சங்கங்களை ஏற்படுத்தி தருமநீதிகளை போதித்து வந்தபடியால் சங்கறரென்றும், உலகெங்கும் அவருடைய போதனா நீதி விளங்கினபடியால் ஜகந்நாதனென்றும், நீலங் கருப்பென்று சொல்லும்படியான தேகநிறத்தைப் பெற்றிருந்தபடியால் முத்தனென்றும், அரசைத்துறந்தபடியால் முநியென்றும், உலகத்தில் சென்ற இடமெல்லாம் சிறப்புற்றபடியால் செல்வனென்றும், அறம் பொருள், இன்பம் வீடென்னும் நான்கு வாய்மையை தெளிவித்தபடியால் நான்முகன் என்றும், புருடரில் உத்தமகுணத்தைப் பெற்றிருந்தபடியால் புருடோத்தம னென்றும், மேன்மையான தவத்தை பெற்ற படியால் மாதவனென்றும், இன்னுமுள்ள ஆயிர நாமங்கள் அவருக்களித்திருப்பதாக கமலச் சூத்திரத்தில் சகஸ்த்திர நாம-பகவனென்றும், மணிமேகலையில் ஆயிர நாமத்தாழியன் திருவடி என்றும் கூறியிருக்கின்றார்கள்.

பஞ்சேந்திரிய தாரையை ஐந்து வருண சோதிமயமாகக் கழட்டிக் காண்பித்தபடியால் பஞ்சேந்திரிய தாரை விட்டோனென்றும், முநீந்திர னென்றும், இந்திரனென்றும், அவர் மனைவியை இந்திராணி என்றும், அவர் வாழ்ந்த கூடத்தை இந்திர கூடமென்றும், அவர் நந்தவனத்தை இந்திர வனம் என்றும், அவர் நெடுங்காலந் தங்கி பிரசங்கித்திருந்த சதுரகிரி என்னும் மலைக்கு இந்திரகிரி என்றும், உலகம் இவ்வகையான மாய்கையாயிருக்கிறதென்று அவரால் காண்பித்த ஓர் வகை ஜாலத்திற்கு இந்திர ஜாலமென்றும், ஐந்து வருணமாக வானத்தில் தோன்றும் ஓர்வகை (ஜலபிம்ப) வில்லுக்கு இந்திரவில் என்றும், அவர் சோதிமயமாக சுவர்க்கவான மேறிய பெயரை மட்டிலும் விசேஷமாகக் கொண்டாடி வந்தபடியால் அவருடைய காலத்திற்குப் பின்பு தோன்றிய ஒவ்வோர் அரசர்களின் சிறப்பைக் கொண்டாடுவதற்கு சற்குருவின் மகிமை தங்கிய பெயரை ஆனந்தமாக வைத்து இந்திரருக்கு ஒப்பானவனென்றும், இந்திர வனத்திற்கு ஒப்பானதென்றும், இந்திர கூடத்திற்கு ஒப்பானது என்றும், இந்திர விமானத்திற்கு ஒப்பானதென்றும், ஒவ்வோர் வித்துவான்களின் செய்யுட்களிலும் சிறப்பித்து வந்தார்கள். அவ்வகை சிறப்பானது எங்கும் பறவி வடபரத கண்டம் தென்பரத கண்டமென்று வழங்கி வந்த இத்தேசத்திற்கு வட இந்தியம் தென்னிந்தியம் என்றும் குடிகளுக்கு இந்தியர்களென்றும் இந்து மதத்தரென்றும் வழங்கி வருகிறார்கள். மற்றுமுள்ள, சீனம், ஜப்பான், சையாம், தீபெத், நேபால், பர்மா, சிலோன், ஆசாம் முதலிய தேசங்களில் அவர் ஞானத்தின் மகிமைக்குரிய புத்தரென்றும் பெயரை விசேஷமாக வழங்கி வந்தபடியால் புத்தமதத்தரென்று வழங்கி வருகிறார்கள். அவர் உலகத்தில் சற்குருவாக வந்து சகல ஞானங்களையும் விளக்கிவைத்தபடியால், நாளது வரையில் நாம் வாசித்து வரும்படியான ஒவ்வோர் ஓலைச் சுவடிகளின் முகப்பிலும் அறி -ஓம், நன்றாக குருவாழ்க, குருவேத் துணை என சிந்தித்து வருகிறோம்.

பந்தமெல்லாந் தீரபரஞ் சோதி நீகுருவாய்
வந்த வடிவை மரவேன் பராபரமே

என்று தாயுமானவரும்