பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276 / அயோத்திதாசர் சிந்தனைகள்

னின்று விடுபடுவான். பிணியினின்று அகலுவான். ஆறுதலில் நிலைப்பா னென்றார்.

அதைக்கேட்ட யட்சனெழுந்து அருகனை சரணாகதி அடைந்து ஐயனே! இவ்வாரணாசியிலுள்ள ஒரு மநுக்களிடத்தேனும் அம்மணத்தைக் காணேன். எல்லாமுணர்ந்த உம்மிடத்தே அம்மண மிருக்கக் கண்டேன். என் மனக்கூற்றுக்கள் யாவையும் விண்டேன். சதாதுக்கத்தை அகற்றி ஆனந்தங் கொண்டேன். உமது அளவுபடா சத்தியதன்ம அமுதத்தை உண்டேன் என்று கூறி உலகத்தின்மீது கொண்டுள்ள விருப்பைத் தவிர்த்து மெய்யுணர்வுற்று பரிசுத்த ஞானமாங் குளிர்ந்த நிலையினின்று தன் தேகத்திலில்லா மணம் அணைந்துள்ள பட்டாடைகளிலும் இரத்தினாபரணங்களிலும் உண்டோ வென்று நோக்கினான்.

அவ்வாடைகளிலும் ஆபரணங்களிலும் சேர்க்கைமணம் உள்ளதேயன்றி இயற்கை மணமில்லாததைக் கண்டான். டம்பமென்று விண்டான். நாணத்தைக் கொண்டான்.

இத்தகைய நாணங்கொண்ட யட்சன் பகவனைநோக்கி ஐயன்மின் தமது தேகத்தில் சிறப்புற்ற ஆடைகளில்லாமலும், விலையுயர்ந்த ஆபரணங் களில்லாமலும் இருந்தபோதினும் தாமரைப் புட்பம் மலர்ந்திருப்பதுபோல் உமது முகம் மலர்ந்திருப்பதும், புட்ப தேஜசு விளங்குவதுபோல் உமது விழி யினால் தோன்றும் அன்பின் மிகுதியும், புட்டத்தின் வாசம் வீசுவது போல் உமது நாவினின்றெழும் அமுத வாக்கும் என்னைக் கவர்ந்து முன்னிருந்த பயத்தையும் அளவுபடா துக்கத்தையும் போக்கி என்னை ஆறுதலில் நிலைக்கச்செய்ததென்று கூறி நீதியாகும் ஆடையையும், நெறியாகும் ஆபரணங்களையும் விட்டு பொன்சுமக்கும் பூதமானோமென்று எண்ணி ஏக்கமுற்றான்.

அவனுக்குள்ள நாணத்தை உணர்ந்த காசி விசுவேசன் சிறுவனை நோக்கிக் குழந்தாய்! ஒருவனுடையதேகம் ஆபரணாதிகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தபோதினும் அவன் ஐம்புலன்கள் அடக்கப்பட்டிருக்கலாம். வெளித்தோற்றமானது அவனுடைய மனதையாயினும் அவன் செயலையாயினும் பாதிக்காது ஒரு சிரமணன் துவராடை அணைந்துக்கொண்டாலும் அவன் மனம் சமுசாரப் பற்றுக்களில் மூழ்கியிருக்கும்.

ஒருவன் ஆடையாபரணங்களைத் தவிர்த்து காட்டுக்குச் சென்று உலக இன்பத்தைத் தாவுவானாயின் அவன் உலகப் பற்றுடையவனேயாவான். மற்றொருவன் ஆடையாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தபோதினும் அவன் உலக இன்பங்களைத் தாவாமலிருப்பானாயின் அவனே உலகப் பற்றுக்களை ஒழித்தவனாவான்.

உலகிலுள்ளோர் நானென்னும் அகங்காரத்தை ஒழிப்பார்களாயின் இல்வாழ்பவர்களுக்குந் துறவிகளுக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லையென்று கூறி சங்கத்தினின்று சாதிக்குஞ் சாதனங்களின் தெளிவையும் இல்லத்தினின்று சாதிக்கும் சாதனங்களின் வழுவையும் விளக்கியபோது யட்சன் சங்கத்தைச் சார்ந்தே சாதனம் பெறவேண்டுமென்று அவாக்கொண்டான்.

அதனை உணர்ந்த பகவன் யட்சனுக்குச் சங்க நிபந்தனைகளை யூட்டி சிரமுடிகழித்து காஷாயமீய்ந்து கரவோடளித்து திரிமணிகளில் நிலைக்கச் செய்தார்.

அதன்பின் யட்சனுக்கு மெய்யறத்தை மேலுமேலும் விளக்கிவருங்கால் யட்சனுடைய பிதா வெளியில் வந்து நின்று ஐயனே! எனது மைந்தன் இவ்விடம் வந்ததுண்டோ என்றான்.

அதை வினவிய பகவன் யட்சன் பிதாவை நோக்கி தாம் உள்ளே வாரும் உமது மைந்தனைப் பாருமென்று கூறினார். யட்சன் பிதா உள்ளே சென்று தமது மைந்தன் அருகில் உட்கார்ந்தும் இவனே தனது மைந்தன் என்றறியக் கூடாமலிருந்தான்.

ஆதிபகவன் அவ்வேளையில் மெய்யறத்தின் மார்க்கத்தையும் மெய்ப் பொருளின் விளக்கத்தையும் மெய்யின்ப சுகத்தையும் போதித்துவருவதைக் கேட்டுணர்ந்த யட்சனுடைய பிதா பின்வருமாறு சொல்லத்தொடங்கினான்.