பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 279

இத்தகையக்கற்பின் நான்கு தன்மவேலிக்குள் அடங்கி நிற்பீர்களாயின் உலகில் உங்களைப்போன்ற இஸ்திரீகள் யாவரும் உங்கள் பொய்யா விரதத்திற்குப் போற்றி செய்வார்கள். கொல்லா விரதத்தைக் கொண்டாடு வார்கள். களவா விரதத்தில் கண்களிப்பார்கள். மயங்காவிரதத்தில் மகிழ்ச்சியடைவார்கள். அன்னியர் முகம்பாரா விரதத்தில் ஆனந்தமடைவார்கள்.

இத்துடன் கணவன் சொற் கடவா காட்சியையும், மிருதுவார்த்தைகளின் மீட்சியையும், மனமொன்றாகக் கணவனுடன் ஒத்துவாழும் மாட்சியையுங் காண்பரேல் உலகத்தில் தோன்றியுள்ள இஸ்திரீகளில் இவர்களே உத்தமி களென்றும், இவர்களே சுகசீவிகளென்றும், இவர்களே பெண்மணிகளில் கண்மணிகளென்றும் போற்றி ஜெயபோற்றி செய்வார்கள்.

நீங்களும் உங்களுக்குள்ள கற்பின் விரதகாப்பிலும் சீலகாப்பிலுந் தலைவனுந் தலைவியும் மனமொத்து வாழும் ஒருமெயிலும் முத்தி மோட்சமென்னும் நிர்வாணசுகம் அடைவீர்களென்றார்.

அருகன் அருள்மொழியைக்கேட்ட மங்கை மடந்தை பேதை பெதும்பை என்னும் இஸ்திரீகள் யாவரும் பரமானந்தமுற்று, ஐயனே! என்றுமழியா மெய்யனே! உமது சத்தியதன்மம் மாட்சி பெற்றது. உமதீகையோ அளவு படாதது. உமதுருவோ ஓரன்பாயது. உமது மிருதுவாகிய வாக்கோ ஓரமுதாயது. உமது சாந்தமோ எம்போலியர்க்கு நிழலாயது. பரிசுத்தமாய புத்தரே! எம்முடைய ஆசான் ஒழுங்கற்றிருக்கும் நீதியை ஒழுங்கடையச்செய்கின்றார். மறைந்திருக்கும் ஒழுக்கங்களை வெளிப்படுத்துகின்றார். திகைதப்பிப்போன மிதப்பர்களுக்கு வழி காட்டுகின்றார். அஞ்ஞான இருளிலிருக்கும் அறிவீனர்களுக்கு மெய்ஞ் ஞான வெளிச்சத்தைக் காட்டுகின்றார்.

இத்தகைய அருளறமூட்டும் அருகனாம் புத்தரிடம் அடைக்கலம். அவர் தெரியச்செய்த சத்தியதன்மத்தில் அடைக்கலம். அவர் ஸ்தாபித்த சத்திய சங்கத்தில் அடைக்கலமென்று வணங்கி நாங்கள் சீவித்திருக்கும் வரையில் தங்கள் சிஷ்யர்களாக அங்கீகரிக்க வேண்டுமென்று வணங்கிக்கொண்டார்கள்.

இல்லறத்தைச்சேர்ந்த இஸ்திரீகளில் அவலோகிதராகும் புத்தபிரானிடங் கற்பினறங்கேட்டு பிக்குணி சங்கத்திற் சேர்ந்தவர்களில் ஆதியாகச் சிரமயிர் கழித்து காஷாயம் பெற்றுக்கொண்டவர்கள் யட்சனுடையத் தாயும் அவன் மனைவியுமேயாம்.

வாரணாசியில் மிக்க தனவந்தர் குடும்பங்களில் யட்சனுடைய சிநேகிதர் களாகும் விபலன், சுவாகு, புண்ணிய சித்தன், கவாம்பி என்னும் நால்வரிருந்தார்கள்.

அவர்கள் நால்வரும் யட்சனுடைய சங்கதிகளைக் கேள்வியுற்று மிக்க ஆனந்தமுடையவர்களாய் நமது யட்சன் விவேக விருத்தியிலும் வியாபார விருத்தியிலுந் தேர்ந்தவன். ஈதன்றி சாந்தத்திலும் பகுத்தறிவிலும் மிகுத்தவன்

இத்தகைய குணநிறைந்த யட்சன் சிரமயிர் கழித்து காஷாயம் பெற்று பிச்சா பாத்திரங் கையில் ஏந்திக்கொண்டு புத்த சங்கத்தில் சேர்ந்து விட்டானென்றால் அஃது சாமான்ய சங்கமாயிராது, சிரேஷ்ட சங்கமாகவே இருத்தல் வேண்டுமென்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு யட்சனிடஞ் சென்றார்கள்:

யட்சனும் பகவனை வணங்கி எங்களையனே! இந்நால்வரும் எனதன்பு மிகுத்த நேயர்கள். இவர்களுக்குத் தங்கள் அளவுபடா தன்மத்தைப் போதித்து புனிதர்களாக விளங்கச்செய்ய வேண்டுமென்று வருந்தினான்.

அவனன்பையும், அவனது நேயர்கள் நால்வரின் விசாரிணை மிகுத்த அவாவையும் உணர்ந்த அருகன் அவர்களை அருகில் உட்காரும்படிச் செய்து சிறுவர்களே! உங்கள் தாய்தந்தையர் போதுமான முதலளித்து வியாபாரத்தைப் பெருக்குங்கோள் என்று உத்திரவளித்திருக்க நீங்கள் அவைகளை விடுத்து என்னை வந்தடுத்தக் காரணம் யாதென்று உசாவினார்.

அதைக்கேட்ட சிறுவர்கள் தருமனை வணங்கி மெய்யனே! எங்கள் தந்தை அளித்துள்ள முதலை கள்ளர்களும் வஞ்சகரும் வழிப்போக்கரும் அபகரித்துக்கொள்ளுவதை அறிந்திருக்கின்றோம்.