பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 281

நிலைக்கு மகட பாஷையில் ஈசனென்றும், சகடபாஷையில் தன்மமென்றும், திராவிட பாஷையில் ஈகையென்றுங் கூறப்படுமென்று விளக்கினார்.

இதைக்கேட்ட சிறுவர்கள் பகவனை வணங்கி தேவரீர் தாம் கூற வந்த பிரமமென்னுந் தண்மெயும், சிவமென்னும் அன்பும், ஈசனென்னும் ஈகையும் சருவ மக்களிடத்தில் உண்டோவென்றார்கள். சிறுவர்களின் புன்மொழிக் கேட்ட பகவன் ஆனந்தித்து சாந்தம், ஈகை, அன்பு என்னும் முச்செயல்களும் சருவமக்களிடம் மட்டிலும் உள்ளதல்ல. உலகத்தில் தோன்றியுள்ள சருவசீவராசிகளிடத்திலும் நிறைந்திருக்கின்றது. அன்பென்னும் ஓர் செயல் சருவசீவராசிகளிடத்தும் நிறைந்துள்ள படியால் பட்சிகள் தன்குஞ்சுகளையும், மிருகங்கள் தன்குட்டிகளையும் வேளைக்குவேளை புசிப்பூட்டி பாதுகாத்து விருத்தி செய்துவருகின்றது. சருவசீவராசிகளிடத்தும் அன்பென்னுஞ் செயல் அகன்றிருக்குமாயின் பட்சிகளின் குஞ்சுகள் பாதுகாப்பற்றுப்போம். மிருகங்களின் குட்டிகள் மாண்டு மறைந்துபோம் மக்களின் மகவும் மயாணபூமிக்கிறையாவர்.

அங்ஙனம் அகலாது சருவசீவராசிகளுக்குள்ளுஞ் சிவமென்னும் அன்பும், பிரமமென்னுஞ் சாந்தமும், ஈசனென்னும் ஈகையும் நிறைந்துள்ளபடியால் அதனதன் கூட்டத்தை பாதுகாத்து ஒன்றுகூடி விருத்திசெய்து வருகின்றது. ஆனால் பட்சிகள் அதனதன் குஞ்சுகளை மட்டுலும் பாதுகாத்து விருத்தி செய்யும். மக்களென்னும் மநுக்களோ பட்சிகளைப்போலுந் தலைகுனிந்து தன்னினத்தில் அன்பு செலுத்துவதுபோலிராது தலை நிமிர்ந்து சருவசீவர் களிடத்தும் அன்புபாராட்டி ஆதரிக்கவேண்டியவர்களாயிருக்கின்றார்கள்.

இவ்வகைத் தலை நிமிர்ந்து மக்களாகத் தோன்றினோர் சருவசீவர்களின் மீதும் அன்பு பாராட்டாது தன்மனைவி மகவுமீதுமட்டும் அன்பு பாராட்டு வரேல் தலைநிமிர்ந்த மக்களென்று கருதாது தலைநிமிர்ந்த நரகரென்று கூறுவர். நீங்கள் நால்வரோ தலைகுனிந்த வானரரினின்று நிமிர்ந்து நரரென்னும் தோற்றமுண்டாகி விவேகமிகுதியால் மக்களென்னும் பெயர் பெற்றுள்ளபடியால் விசாரிணையினின்று உங்களுக்குள்ள அன்பையும், சாந்தத்தையும், ஈகையையும் பெருக்கிக்கொள்ளுவீர்களாயின் இரவு பகலற்ற தேவர்களென்னும் ஏழாவது தோற்றமுண்டாகி சதா சுகமும் நித்தியானந்தமும் பெற்று வாழ்வீர்கள். அங்ஙனமின்றி இராகத்துவேஷ மோகங்களென்னுங் காம வெகுளி மயக்கங்களைப் பெருக்கிக்கொண்டு நரகர் நிலைகளை அடைவீரேல், சதா துக்கத்தில் மூழ்கி மாறாப்பிறவியில் சுழன்று திரிகுவீர்களென்றார்.

சிறுவர்கள் நால்வரும் எழுந்து நின்று பகவனைநோக்கி போதிசத்துவா! புண்ணியநாதா! பொய்தீரொழுக்கா! தாமோதிய அருள்வாக்யங்களில் அன்பு, ஈகை, சாந்தம் இம்மூன்றும் நிறைந்தநிலையில் சுகமுண்டென்று உணர்ந்தோம். காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றும் நிறைந்த நிலையில் துக்கம் உண்டென்று உணர்ந்தோம். ஆயினும் இத்தேகம் உள்ளளவும் அத்துக்கத்தை அனுபவிப்பது நிட்சயமாகும். இத்தேகம் மறைந்தபின் இம்மெய்யில் செய்த தீவினைகளை மறுமெயில் அனுபவிப்பதற்கு மாறாப்பிறவியில் சுழன்று திரிவானென்பதில் மனங் காரணமா தேகங்கணமா என்பது விளங்காததினால் அதை விளக்கி ஆதரிக்க வேண்டுமென்றடிபணிந்தார்கள்.

கருணாகரக்கடவுள் நால்வரையும் நோக்கி சிறுவர்களே! தேகமில்லாமல் மனமும் மனமில்லாமல் புருஷனென்னும் ஆன்மாவும் இருப்பதைக் கண்டீர்களோ என்றார். சிறுவர்கள் செல்வனை வணங்கி, மெய்யனே ! தேகமில்லாவிடத்து மனதை அறியோம். மனமும் தேகமும் பொருந்திய செயலில்லாவிடத்து புருஷனென்னும் ஆன்மாவையும் அறியோமென்றார்கள்.

அநாத்மனாகும் அறிவன் நால்வரைநோக்கி சிறுவர்களே! சருவ தோற்றங்களும் அநித்தியம், சருவ ஆன்மாக்களும் அநாத்மம் என்பதே மோட்சமென்னும் நிருவாணத்திற்கு ஏதுவாகும் சருவ தோற்றங்களும் நித்தியம், சருவ ஆன்மாக்களும் நித்தியமென்பதே நரகமென்னும் பிறவிக்கேதுவாகும். எழு நரகமென்னும் எழுபிறவிகளுக்கு ஏதுக்கள் யாதென்பீரேல் காம, வெகுளி,