பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மயக்கங்களால் உண்டாகும் பற்றுக்களேயாம். அக்காம வெகுளி மயக்கங்களின் செயல்கள் அவனவனுக்குள் தங்கி மாறாபிறவியிற் சுழன்று மீண்டும் அச்செயலைப் பற்றுவதை அவனவன் தூக்கத்திலும் விழிப்பிலும் உண்டாயதைக் காணலாம்.

நாயனார் திருக்குறள்

பற்றற்றக் கண்ணே பிறப்பறுக்கு, / மற்று நிலையாமெய்க் காட்டி விடும்.

இடைக்காட்டு சித்தர்

பற்றே பிறப்புண்டாக்குந் தாண்டவக்கோனே
அதை பற்றாதறுத்துவிடு தாண்டவக்கோனே.

மணிமேகலை

சீலந்தாங்கி ஆனந்த நிலைநின்று, மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத்,
தேவரு மக்களும் பிரமருமாகி, மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் னுகர்வர்.

ஒருச்செயலை செய்திருந்தவன் தூங்கி விழித்தவுடன் விட்டச்செயலை தொடர்ந்து செய்யத்தேடுவான். அதுபோல் மரணமடைந்தானென்பதும் தூங்கினான் என்பதும் ஒருபொருளாதலின் விட்டபற்றைத் தொடர்ந்து பற்றலுக்கு தேகத்தில் தோய்ந்த மனமும், மனதில் தோய்ந்த பற்றுதலும் பிறவிக்கு ஏதுவாதலின் பற்றுதலுக்கு ஈடாய் மனம் விரிந்து தேகந்தோன்றி விட்டபற்றைத் தொடர்ந்து செய்வது உள்ளத்தியல்பாம்.

என பகவன் போதித்துவருங்கால் நால்வருமெழுந்து காசிநாதனை வணங்கி கருணையெங்கடலே! கற்பகத்தருவே! கமலநாயகனே! அவாவின் மிகுதியால் தாவி நிற்கும் பற்றுக்களே பிறவிக்கு மூலமென்றும், மறுமெய்யைத் தோற்றவைக்கும் வித்தென்றும் விளங்கினோமாயினும் நித்தியானந்தமென்றும் சதா சுகமென்றுங் கூறும் அநுபவநிலையில் தேகம் உள்ளவரையிலும் அச்சுகத்தை அனுபவிப்பதா தேகமற்றபோதும் அச்சுகத்தை அனுபவிப்பதா அதனைத் தேற விளக்கவேண்டுமென்றார்கள். சங்க தருமனென்னுங் கணநாயகன் நால்வரையும் நோக்கி சிறுவர்களே! (ஆரோக்கிய) பரமலாபா, (சந்துட்டி) பரமானந்தா, (விசுவாச) பரம ஞாதி, (நிப்பானங்) பரமாங் சுகம் என்பவற்றுள் ஒரு மனிதன் நோயற்ற வாழ்க்கையிலிருப்பானாயின் அவனை என்னென்று கருதுவீர்கள். ஒருவன் எக்காலும் சந்தோஷத்திலிருப்பானாயின் அவனை என்னென்று கருதுவீர்கள். ஒருவன் தன்குடும்பத்தில் யாதாமொரு கவலையும் இல்லாமல் வாழ்வானாயின் அவனை என்னென்று கருதுவீர்கள். ஒருவன் தன்னதென்னும் பற்றற்று நானென்னும் அகம்பாவமற்று இஃது வேண்டும் வேண்டாமென்னும் விருப்பு வெறுப்பற்று தூங்கல் விழிப்பென்னும் இரவுபகலற்று சுழிப்பத்தி, ஜாக்கிரமென்னும் அசதியற்று இன்று நாளை என்னும் மறதியற்று பாலன் விருத்தனென்னும் பருவமற்று சதா விழிப்பிலும், சதானந்தத்திலும், சதா போதத்திலும், சதா நீதியிலும், சதா சாந்தத்திலும், சதா ஈகையிலும், சதா அன்பிலும் இருப்பானாயின் அவனை என்னென்று கருதுவீர்களென்றார்.

அதனை வினவிய சிறுவர்கள் ஆனந்தமுங் குதூகலமுங் கொண்டு ஆதிதேவனை வணங்கி ஒதாமல் உணர்ந்த தூயனே! ஒப்பிலா மெய்யனே! ஒரு மனிதன் உலகத்தில் வியாதியில்லாமல் வாழ்வதரிது. அவ்வகை வியாதியில்லாமல் வாழ்வானாயின் அழியும் லாபத்தைத் திரளாக அடைபவனைப்பார்க்கினும் அவனே அழியா லாபத்தை அடைந்தவனாவன்.

ஒரு மனிதன் எப்போதும் சந்தோஷமாயிருப்பதரிது. அவ்வகை சந்தோஷத்திலிருப்பானாயின் அவனே அழியா ஆனந்தமுடையவனாவான். ஒரு மனிதன் குடும்பத்தில் எக்காலம் விசுவாசம் வைப்பதரிது. அக்குடும்பத்தோருந் தானும் ஒருவருக்கொருவர் விசுவாசமுற்று வாழ்வார்களாயின் அவனே அக்குடும்பத்திற் சிரேஷ்டனும் ஞாதியுடைய வனுமாவன். ஒருமனிதன் தன்னதென்னும் பற்றறுத்தல் அரிது. நானென்னும் அகம்பாவமற்றல் அரிது. வேண்டும் வேண்டாமென்னும் விருப்பு, வெறுப்பற்றல் அரிது. தூங்கலற்றல் அரிது. சதா விழிப்பில் இருத்தலரிது.