பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அவ்வக்கினி கீழிழிந்து மலமூத்திராதிகளைக் கவர்ந்து தேகம் முழுவதும் பரந்து சிற்சில வியாதிகளை உற்பத்தி செய்து மாளா உபத்திரவத்தை உண்டு செய்யும். கோபாக்கினியானது உம்மிடத்து எழுந்து பரந்து எதிரிக்கும் அவ்வக்கினியை எழுப்பிப் போர்புரிந்து பற்பல இடங்களில் காயங்கள் உண்டாய் உபாதைப்படுத்துவதுடன் அதிகாரிகளிடத்துந் துன்பத்தை அனுபவிக்கச்செய்யும்.

காமாக்கினியானது உம்மிடத்து எழும்புவதையும் அடங்குவதையும் அநுபவத்தில் அறிந்து வருகின்றீர். அவ்வக்கினியை தவிற்காது மேலும் மேலும் பெருக்கிக்கொள்ளுவதால் காமாக்கினியின் பெயரற்று மேகாக்கினி என்றும் பெயர் பெற்று சப்த தாதுக்களுங் கொதிப்புற்று பற்பல வியாதிகளால் துன்பத்தை அநுபவிக்கச்செய்யும். ஆதலின் உம்மிடத்துண்டாகும் மூவக்கனியின் கொதிப்பையும் அதினால் உண்டாகும் ஊன்களின் உருக்கையும், உபாதைகளின் பெருக்கையும் கண்டுணராது உமக்கு அப்புறப்பட்ட மழுவின் கொதிப்பை மட்டிலும் அறிந்திருப்பதால் யாது பயன்.

சீவக சிந்தாமணி

தன்னுயிர் தான் பரிந்தோம்புமாறு போன் மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமே,
லின்னுயிர்க்கிறைவனாய் இன்ப மூர்த்தியாய் பொன்னுயிராய் பிறந்து உயர்ந்து போகுமே.
நெருப்புயிர்க் காக்கிநோய் செய்யினிச்சமு முருப்புயிரின் இருவினை உதைப்ப வீழ்ந்தபின்,
புரிப்பரிக் கொண்டு போய்ப் பொதிந்துக் கட்டிட விருப்புயிராகிவெந்தெரியுள் வீழுமே.
 

உம்மிடத்தெழூவும் மூவக்கினியின் கொதிப்பை அடக்குவதினால் சகல மதிப்பும் உண்டாய் சீவகாருண்யனென்னும் பெயர் பெற்று மக்கள் நிலைகடந்து தேவர் பிரமரென்னுஞ் சுகநிலைப்பெற்று வாழ்வீர். அங்ஙனமின்றி இப்பேதை ஜெந்துவாகிய மானைக்கண்டவுடன் உமது காருண்யத்தைக் காட்டாது துவேஷமுறுவதால் உம்மிடத்துண்டாகும் இராகத்துவேஷமோகோற்பவமாம், காம வெகுளி மயக்கங்கள் கொதிப்பேறி பிணி, மூப்பு, சாக்காடுண்டாகி மாறாப் பிறவியில் சுழன்று தீரா துக்கத்திற்கு ஆளாக்கும். இத்தகைய துக்கத்தை நீக்கிக்கொள்ளவேண்டிய நீவிர் சீவராசிகளுக்குண்டாகுந் துன்பங்களை உமக்குண்டாய துன்பம் போல் கருதி அவைகளை ஆதரித்துவருவீராயின் மேற் பிறவியை நோக்கிவாழும் ஒவ்வோர் சீவப்பிராணிகளும் பெருகி பலுகி சுகமடையும் வாழ்க்கையைத் தாங்களும் அறிந்து அன்பின் பெருக்கத்தால் உண்டாகுங் கருணையின் பலனை ஆராய்ந்து கதிபெருகுவீரென்றார்.

கன்னான் கலைநாயகனை வணங்கி ஐயனே, இங்கு காய்ந்து மழுவாய் உருகிய இரும்பு பட்டவிடமெங்குஞ் சுடுவதாயிருக்க தமது கரத்தை சுடாததின் காரணமென்னோ விளக்கல் வேண்டுமென்றான்.

கரமழுவேந்தி கன்னானை நோக்கி அன்பரே, நீர் தண்மெய் அடைவீராயின் சகலமுந் தண்ணுறும். நீர் சுடுமெய் அடைவீராயின் சகலமும் உம்மெச்சுடுமென்றார்.

தண்மெய் என்பதும் சுடுமெய் என்பதும் விளங்கவில்லையே என்றான்.

அன்பரே! உமக்குள் சாந்தமென்னுங் குளிர்ந்த நிலை கோடலே தண்மெய் என்றும், காமங் கோபமென்னுங் கொடுநிலைக் கோடலே சுடுமெயென்றுங் கூறப்படும்.

வாக்கால் ஒருவரை மனனோகப்பேசுதலும் சுடுமெய்க்காதாரமாம். தேகத்தால் மற்றோரை நோக வடித்தலுஞ் சுடுமெய்க்கு ஆதாரமாம். மற்றோரைக் கெடுக்க வஞ்சநெஞ்சங் கொள்ளுவதுஞ் சுடுமெய்க்கு ஆதாரமாம்.

மிருதுவான வாக்கும், அன்பான மொழியும், பிரயோசனமான வார்த்தைகளும் நாவினால் கூறுதல் தண்மெய்க்கு ஆதாரமாம்.

மற்றோர் தேகத்திற்குண்டான தீங்கை தன் தேகத்தால் கார்த்தலுந் தன் தேகத்தை வருத்தி சம்பாதித்து மற்ற தேகங்களைப் போஷித்தலும் தண்மெய்க்கு ஆதாரமாம்.

மற்றோர் செய்த தீங்குகளை நினையாமலும் அதை மனதில் தங்கவிடாமல் செய்தலும், மற்றொருவர் செய்த நன்றியை நினைத்தலும், அந்நன்றியை என்றும் மறவாமலிருத்தலுந் தண்மெய்க்கு ஆதாரமாம்.