பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அவனைக் காற்றானது மலையை அசைக்காததுபோல மாரனுடைய மாறுபடுச் செய்கைகளால் அவனை மயக்கலாகாது.

சீலங்களைக் கவனியாதும், பாவத்தை ஒழிக்காதும், சத்தியதரிசனமாம் நான்குவாய்மெய்களை அறியாதும் ஒருவன் இருப்பனேல் அவன் காஷாயமாம் சீவரத்தை தறிக்கத்தகுந்தவனல்லன்.

சீலங்களைப் பெற்று பாபத்தை ஒழித்து நீதியில் நின்று சத்திய தரிசனமாம் நான்கு வாய்மெய்களை அறியும் சக்தியுள்ள ஒருவன் இருப்பனேல் அவன் காஷாயமாம் சீவரத்தை தறிக்க உத்தமனாவான்.

எவனொருவன் சத்தியத்தை அசத்தியமாகவும், அசத்தியத்தை சத்தியமாகவும் கருதுகின்றோனோ அவனுக்கு சத்தியம் விளங்காது வீண் அவாவையே பின்பற்றி விரோதியாக நிற்பான்.

எவனொருவன் சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் கருதுகின்றானோ அவனுக்கு சத்தியம் விளங்கி பற்றற்ற நிலையை பற்றி சகலருக்கும் அன்பனாக விளங்குவான்.

செவ்வனே திருத்திக் கட்டப்படாத கூறைவீட்டுள் மழைத்துளிகள் ஒழுகுதல்போல் ஞான விழிப்பும், விசாரிணையுமற்ற மனத்தின் வழியாய் காமக்குரோதாதிகள் நுழையும்.

செவ்வனே திருத்தி கட்டப்பட்ட கூறைவீட்டுள் மழைதுளி நுழையாதது போல் ஞானத்தில் சதா விழிப்பும், ஜாக்கிரதையுமுள்ள மனத்தின் வழியாய் காமக்குரோதாதிகள் நுழையமாட்டாது.

சீலமற்றவன் துக்கத்தில் ஆழ்ந்திகிடப்பான். அவன் செய்துவந்த பாபங்களை நினைத்து மிக்க வியாகூலமடைவான். அவன் பாபவழியை அநுசரிக்கும்போது அதிக துக்கமடைகிறான்.

சீலத்தை அநுஷ்டிப்பவன் ஆனந்தத்திலிருப்பான். அவன் செய்துவந்த நற்கன்மங்களை நினைத்து மிக்க ஆனந்தமடைவான். அவன் நல்ல வழியை அநுஷ்டிக்கும்போது சொல்லவொண்ணா ஆனந்தமடைகின்றான்.

சிந்தனையற்ற ஒருவன் பெருத்த நீதிவசனங்களை பிறருக்கு ஓதியும் தான் அந்நீதிகளின்படி நடவாது காமம், வெகுளி, பொறாமை இவற்றில் இருப்பானாயின் அவன் ஏனையோரது மாடுகளை கணக்கெடுக்கும் இடையனாவான். விவேகி ஒருவன் ஒரு சிறு நீதி வசனத்தைப் பிறருக்கு போதித்து காமம், பகை, குடிகெடுப்பு, வஞ்சினம் இவைகளற்று நீதியில் நின்று மன அமைதி பெற்று, உலக பற்றற்றுவருவனேல் அவனே சிரமண நிலைக்கு சமமாவான்.

பண்டிதவர்க்கம்

சகோதிரர்களே! அறிவுடையோன் ஒருவன் நித்தியவழியைக் காட்டி அநித்தியவழிகளைப் போக்கும்படி போதிப்பானேல் அவன் வழியைப் பின்தொடருங்கள்.

புத்திமதி கூறவும், நன்மார்க்கத்தை போதிக்கவும் அவனுக்கிடங் கொடுங்கள், கெட்டவை இவை என தெளிவரக் காட்டப்படும். அவன் நல்லோரால் புகழப்பட்டு தீயோரால் இகழப்படுவான். தீயோருடன் நேசம் பாராட்டாதீர்கள். கீழோராம் அவிவேகிகளை அணுகாதீர்கள். மேலோராம் விவேகிகளின் நேசம் பாராட்ட பன்முறை அணுகுங்கள்.

அறிவுடையோர் புகழ்ச்சியாலும் இகழ்ச்சியாலும் நிலைகுலையார்கள். அவர்களோ சதா நீதியுணர்வினின்று அலையற்ற தடாகம் போல் ஆறுதலுற்றிருப் பார்கள்.

பிராஹ்மணவர்க்கம்

சகோதிரர்களே! எவனொருவன் அவாவை அறுத்து துக்கசாகரமென்னும் பெருங்கடலை நீந்தி கரைசேர்ந்து அமிர்தமாம் நிருவாணத்தை அடைந்தானோ அவனே பிராஹ்மணன்.

எவனொருவன் அறிவுடையோனாகவும் குற்றமற்றவனாகவும் ஒரே நிலையானவனாகவும் காமமற்றவனாகவும் மேலான பதவியை அடைந்தவனு மாயிருக்கின்றானோ அவனே பிராஹ்மணன்.