பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 291

பகலில் சூரியனும், இரவில் சந்திரனும், கவசத்தால் போர்வீரனும், தியானத்தால் பிராஹ்மணனும் பிரகாசிப்பதுபோல் ததாகதர் இரவும் பகலும் சதா விழிப்புள்ளோ ரகத்து பிரகாசிக்கின்றார்.

பாபத்தினின்று விலகினபடியால் பிராஹ்மணனென்றும், சாந்த வாழ்க்கையில் நடப்பதால் சமணனென்றும், பாப குற்றங்களை விலக்கிவருகிற படியால் பிரவர்ஜிதாவென்று அழைக்கப்படுவான்.

மனோ வாக்கு காயத்தால் ஜீவர்களுக்கு யாதொரு துன்பமும் செய்யாதிருப்பவன் எவனோ அவனே பிராஹ்மணன்.

கடுகை ஊசியின் நுனியிலிருந்து விழச்செய்வதுபோல் எவனொருவன் கோபம், பொறாமெய், பெருமெய், பகை இவைகளை விட்டொழிக்கின்றானோ அவனே பிராஹ்மணன்.

யாவர்பேரிலும் குற்றங் குறை கூறாதும், கொலை செய்யாமலும், கொலைசெய்ய ஏதுவாகாதிருப்பவன் எவனோ அவனே பிராஹ்மணன்.

ஆவலோடு அலைபவர்களின் மத்தியில் ஆவலில்லாமலும், கோபமுள்ளவர்களின் மத்தியில் கோபமில்லாமலும், பொய்யர்கள் மத்தியில் மெய்யர்களாகவும் வாழ்கின்றவன் எவனோ அவனே பிராஹ்மணன்.

துன்பஞ் செய்வோர்களை துன்பஞ்செய்யாது துன்பமின்றியும், வஞ்சகமுற்றோர் மத்தியில் வஞ்சமின்றியும் வாழ்பவன் எவனோ அவனே பிராஹ்மணன்.

ஓ சகோதிரர்களே! எவனொருவன் இவ்வுலகில் நல்லவை, தீயவை இவைகளுக்கு அதீதப்பட்டவனும் துக்கம், துற்குணம், பாபம் என்னும் கட்டுகளினின்று விலகினவன் எவனோ அவனே பிராம்மணன்.

எவனொருவன் பரிசுத்தமும் மன அமைதியும் துராசையும் அற்றிருக் கின்றானோ அவனே பிராமணன்.

எவனொருவன் சேறுள்ள பாதையையும், கடக்கமுடியாத உலகத்தையும், இவ்வுலகத்தின் பெருந் துக்கத்தையுங் கடந்து அக்கரையைச் சேர்ந்து கபடமற்றவனும், திருப்தியும் யோசனையுமுடையவன் எவனோ அவனே பிராம்மணன்.

எவனொருவன் இவ்வுலகில் உலகபற்றற்றவனும், துறவியாகத்திரிபவனும், மோகமற்றவனுமாக விருப்பவனெவனோ அவனே பிராம்மணன்.

எவனொருவன் இன்பத்திற்கும், சுகத்திற்கும் இடங்கொடாதும், சாந்தரூபியாயும், பாப உலகத்தை வென்ற வீரனாகவும் இருக்கின்றானோ அவனே பிராம்மணன்.

பிறவிக்கு ஆளாக்குமார்க்கம் இது, பிறவியை வெல்லும் மார்க்கம் இது எனவும் தெரிந்து சகலபற்றும் அற்ற பகவனாம் புருஷ உத்தமன் பற்றிய பற்றைப் பற்றினவனெவனோ அவனே பிராம்மணன்.

உலக பற்றற்றவனும், ஏழையுமாய் இருப்பவன் எவனோ அவனே பிராம்மணன்.

முற்பிறப்புகளைத் தெரிந்தவனும், மோக்ஷம் இது நரகமிதுவென அறிந்தவனும், பிறப்பற்றவனும், பரிபூரண ஞானியும், பெருந் துறவியும், பரிசுத்தனுமானவன் எவனோ அவனே பிராம்மணன்.

தண்டவர்க்கம்

ஓ சகோதிரர்களே! இவ்வுலகில் மனுக்கள் தண்டனைக்கு நடுங்குகின்றனர். மரணத்திற்குப் பயப்படுகின்றனர். நீங்கள் எல்லோரும் அவர்களைப் போன்றவர்களன்றோ. ஆகையால் கொலைபுரியாதிருங்கள். கொலைக்குக் காரணக்கர்த்தர்களாக இராதிருங்கள்.

இவ்வுலகில் மனுக்கள் தண்டனைக்கு நடுங்குகின்றனர். பிராணனை காப்பாற்ற முயல்கின்றனர். நீங்கள் எல்லோரும் அவர்களைப்போன்றவர் களன்றோ. ஆகையால் கொலை புரியாதிருங்கள். கொலைக்குக் காரணகர்த்தர் களாக இராதிருங்கள்.