பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 305

உண்டென்பதை அறிந்துக்கொள்ளல் வேண்டும். அவ்வகை அறிந்தவிடத்து இளமெயும், முதுமெயும் தேகதோற்றக் கெடுதியின் தொடர்பென்று உணர்ந்து அதனவாவை அறுத்தவிடத்து துக்கம் நீங்கும்.

தேகத்துக்குரிய பிணி மூப்புச் சாக்காடென்னும் துக்கத்தையும், அதனுற்பவத்தையுங் காணாது சதா அவாவையும், சதா இன்பத்தையும் பெருக்கி நிற்றலால் சதா துக்கத்தில் வருந்துகின்றீர்.

துக்கந் தோன்றியவிடத்து அதன் உற்பவத்தை நோக்குவீரேல் அங்கு பற்றிய அவாவிடுத்து அதனால் உண்டாய துக்கம் நீங்கும். அதுபோல் மற்றுந் துக்கோற்பவங்களை உணர்ந்து அதனதன் பற்றுக்களை அறுத்துக்கொண்டே வருவீராயின் சதா துக்கம் நீங்கி சதா சுகமடைவீரென்றார்.

மைந்தன் அமுதவாக்கில் பிறந்த ஞானபோதத்தைக் கேட்ட சுத்தோதயச் சக்கிரவர்த்தி அகமகிழ்ந்து பகவன் முன் எழுந்துநின்று புத்தராம் மெய்யனை யான் புத்திரனாகப் பெற்ற பாக்கியமே பாக்கியமென்று ஆனந்தக்கண்ணீர் பெருக இருகரங்கூப்பி என்னை துக்கசாகரத்தினின்று கரையேற்றிய ஞானவள்ளலே! துக்கவிருளில் திகைத்துநின்ற எனக்கு ஞானசுடர்விளக்கேற்றிய சுந்திரனே! உம்மெ முன்பு பார்த்தபோது காவி ஆடையாலும், கரபோலாலும் கலங்கினேன். தற்போது உமது அமுதவாக்கின் மிகுதியால் பொன்னா டையையும், திருவோட்டையும் புகழ்ந்தேன்.

இப்பொன்னாடையே புவனாதாரமென்றும், திருவோடே சித்த சுத்தி என்றும் தெரிந்துக்கொண்டேன். உமது உறவினால் உண்டாய அன்பின் மிகுதியையும், அளவுபடா ஞானத்தையும் கண்டேன். உலகுய்யும் உமது சத்திய தன்மத்தை விளக்கி என்னை ஆட்கொள்ள வேண்டும் என்றான். புத்தபிரான் தனது தந்தையாகிய சுத்தோதயச் சக்கிரவர்த்திக்கு குருவாக விளங்கினதுகொண்டு “தகப்பன்சுவாமி" என்றும், “பிதாவிதாதா” என்றும் அழைக்கலானார்கள்.

பின்கலை நிகண்டு

பிரமன்மேதினி சிறந்தோன் பிதாமகன் பிதாவிதாதா
நிரந்தரன் கமலயோகி நீநிலம் அளந்த பாதன்
திரமிக உடைய பூதன் தேவர்கள் முதல்வன் சாது
வரனறன் முதநூலாசான் மாதவன் நரசிம்மன்.

ததாகதர் தனது தந்தைக்கு ஞானோபதேசஞ்செய்துவிட்டு அசோதரை வாசஞ்செய்யும் இடத்தை நாடி வாயற்படியில் நின்று ததாகதன் வரலாமோ என்றார். தேவிகாலோத்திரம் தடையின்றி வரலாமென்னும் மிருதுவாக்கு எழும்பிற்று. அதனை வினவிய பகவன் அறைக்குள் சென்று அசோதரையை நோக்கி அம்மே! சுகமோ என்றார். அசோதரையோ நமதையன் பாதத்தை இருகப் பற்றிக்கொண்டு ஐயனே! உமது கருணா நோக்கத்தால் இம்மட்டும் சுகமே என்றாள்.

அம்மே! யாதொரு துக்கமும் இல்லையோ என்றார்.

ஐயே! உம்மெப் பிரிந்ததுக்கம் ஒன்றேயன்றி வேறு துக்கம் யாதும் அறியேனென்றாள்.

ததாகதர் சகலருக்குந் தோற்றி நமக்குத் தோற்றாமல் இருக்கின்றாரே என்று துக்கித்தாயா அன்றேல் ததாகதர் தோற்றமே மறைந்துவிட்டதென்று துக்கித்தாயா என்றார்,

உலகெங்கும் சத்தியதருமமாம் அமுதத்தை ஊட்டி வரும் ஐயன் உடலுயிர் பொருந்தி வாழ்ந்த அடியாளுக்கு அப்பேரின்ப அமுதை ஊட்டாது பிறிந்துநின்ற குறையே பெருந்துக்கத்தில் ஆழ்த்தியது என்றாள்.

அம்மே! நீவிர் தோன்றி கெடும் சிற்றின்பமாம் உலக இச்சையை ஆசிக்கின்றாயா அன்றேல் என்றுங் கெடாமல் நித்தியமாம் பேரின்ப சதாசுகத்தைத் தெரிந்துக்கொள்ள ஆசிக்கின்றாயா என்றார்.

ஐயனே! சதாசுக நித்திய தன்மமாம் பேரின்பத்தையே தெரிந்துகொள்ள ஆசிக்கின்றேனென்றாள்.