பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 309

உட்காருவதுபோல் யாதொரு மனக்களங்கமுமின்றி தமது மடியில் வந்து உட்கார்ந்து கொண்டார்கள். தாங்களோ தேவியின் களங்கமற்ற எண்ணத்தையும் எங்கள் பேதை குணத்தால் எழுவிய களங்கத்தையும் உணர்ந்து மகளைத் தந்தையானவர் உச்சமுருகி யாதொரு களங்கமுமின்றி பயிரங்க மடியில் உட்கார வைத்துக் கொண்டீர்.

ஆதலின் தமது அடியார்களின் பேதைகுணத்தால் எழுவிய களங்கை க்ஷமித்து ஆட்கொள்ளவேண்டும் என்றடி பணிந்தார்கள்.

அவர்கள் பேதை குணங்களை அறிந்த பெம்மான் சங்கத்தவர்களை நோக்கி அன்பர்களே! உங்கள் களங்கம் அகலட்டும். அம்மனுக்குள்ள சுகதுக்கம் இரண்டுமற்ற நிலையை அறிந்து கொண்டீர்களோ என்றார்.

சீவக சிந்தாமணி

நிலவிலகி யுயிரோம்பி நிமிந்தொளிர்த்து பசிபகைநோ
யுலகமிருள் கெடவிழிக்கு மொண்மணி யறவாழி
யலகையிலாக் குணக்கடலை யகல் ஞானவரம்பனை
விலையிலா மணிமுடி யான் விண்வியப்ப லிறைஞ்சினான்.

சங்கத்தோர்கள் சங்க அறனைநோக்கி ஐயனே! தாம் ஊட்டியுள்ள ஞான அமுதில் நாமரூபம் இரண்டற்றபோது நான் நீ என்னும் பின்னபாவம் இரண்டும் அறுமென்றும், வேண்டுதல் வேண்டாமெ இரண்டும் அறுமென்றும், சுகதுக்கம் இரண்டும் அறுமென்றும் ஊட்டியிருக்கின்றீர்.

தங்களடியார்கள் அவற்றை உட்கொள்ளாது உலக சிற்றின்பமாம் விஷத்தை உண்டுவருகிறபடியால் சுகதுக்கமற்ற இடம் விளங்காமல் போனோம். ஆதலின் இனியேனும் யாங்கள் விஷத்தை உண்டு கண்டங்கறுத்துக் காலனுக்கு ஆளாகாமல் ஞானவாருதியைக் கடைந்து அமுதளிக்கவேண்டுமென்றார்கள்.

அன்பர்களே! உங்கள் உள்ளம் விரிந்தவிடத்து உலகும், உள்ளம் களங்கமற்று அடங்கியவிடத்து நிருவாணமுந் தோற்றுமென்பதை விளக்கியிருக்கின்றோம்.

அத்தகைய விளக்கத்தால் உங்கள் உள்ளமே ஞானவாருதியாகவும், வலயிட சுவாசமே கயிறாகவும், புருவமத்திய சுழினியை மத்தாகவுமூன்றி சதாவிழிப்பாற் கடையவேண்டியவர்களும் நீங்களே. அக்காலத்தில் எழும் காமவெகுளி மயக்கங்களாம் விஷயங்கள் அணுகாவண்ணம் அகற்றி அன்பு, ஈகை, சாந்தமென்னும் அமுதத்தைத் திரட்டவேண்டியவர்களும் நீங்களே. அவ்வகைத் திரட்டிய அமுதுண்டு திரிகாலமுமுணர்ந்து மரணத்தை ஜெயித்து பிறப்பை அறுத்துக்கொள்ள வேண்டியவர்களும் நீங்களே ஆதலின் உங்கள் உள்ள ஞான வாருதியை நீங்களே கடைந்து அமுதுண்ண வேண்டுமென்று போதித்து அந்தந்த சங்கத்தோர்களை அங்கங்கு தங்கி சாதனங்களைப் பூர்த்திச் செய்யுங்கோள் என்று விடுத்து ஆரணத்திற்சென்று;

காக்கைபாடியம்

பாலகக் கடலைபழுகக் கலக்கி / மேலைச்சுழினை கயிறை இழுத்து,
சீலவமுதைச் சேர்த்து நிறப்பி / ஆலமர்ந்தோனல் லடி தொழுவீரே.

நிகழ்காலத்திரங்கல்

உள்ளக்கடலை கடைந்தே யுறமகற்றி / தெள்ளமுதமீய்ந்த தேற்றல் அதிசயமே.

அறநெறிச்சாரம்

தானே தனக்குப் பகைவனு நட்டானும் / தானே தனக்கு மறுமெயு மிம்மெயும்,
தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால் / தானே தனக்குக் கரி.

மூன்றாமுறை விம்பாசாரன் தெரிசனமும் நூதன வியாரம் ஏற்படலும்

ஓர் மரத்தடியில் வீற்றிருப்பதை வேவுகர்களாலும், மற்றுமுள்ளவர் களாலும், விம்பாசார அரசனறிந்து குலகுரு வந்திருக்கின்றாரென்னும் குதூகலத்தில் எழுந்து தனது பரிவாரங்களுடன் வந்து தற்பரனை வணங்கி ததாகதா புசிப்புக்கெழுந்தருள வேண்டுமென்று கோறினான். பிஞ்சகன் விம்பாசாரன் கோறிக்கைக்கிணங்கி எழுந்து வருங்கால் ஐயன் சத்தியதன்மத்தையும் அதன் பலனையும் முன்பே அறிந்துள்ளவனாதலின் பிம்பாசாரன் தன்னைச் சூழ்ந்துள்ள மக்களை நோக்கி;