பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 / அயோத்திதாசர் சிந்தனைகள்

புத்தரவர்கள் நிருவாணமடைந்த நாளை பூர்வ அரசர்கள், இந்திர விழாக்கோலென்றும், போதிபண்டகை என்றும், மங்கலத் திருநாளென்றும், தீபசாந்தி, என்றும் புத்தர் சுவர்க்கவானம் ஏறிய நாளென்றும் மார்கழி மாதத்தில் இருபத்தியெட்டு நாள் திருவிழாக் கொண்டாடி வந்ததாக மணிமேகலை, அசோதரை காவியம், மற்றுமுள்ள புத்தசரித்திரங்களில் எழுதியிருக்கின்றார்கள்.

அதற்காதரவாக மார்கழி மாதம் முழுவதும் வீடுவாசல் முதலியவைகளை சுத்தப்படுத்தி மாதகடையில் அவர் சோதிமயமாக, சுவர்க்கவானமேறியநாளை - சொக்கபானை கொளுத்துகிறதென்றும் போதி பண்டிகையை போகி பண்டிகை என்றும் மறுநாள் புத்தராகிய இந்திரரை பூசிக்கும் நாளை பெரும் பொங்கலென்றும் பெரியாண்டவன் பூசை என்றும் இவர்களுடைய கிராமங்களில் நாளது வரையில் கொண்டாடி வருகிறார்கள்.

சிந்தாமணி

தேனுலா மதுச் செய்கோதை தேம்புகை கமழ்வூட்டி
வானுலாச் சுடர்கண் மூடி மாநகரிரவுச் செய்யப்
பானிலாச் சொரிந்து நல்லராணிகலம் பகலைச்செய்ய
வேனிலான் விழைந்த (சேரி) மேலுலகனைய தொன்றே
வேரியின் மெழுக்கார்ந்த மென்பூநிலத் -(து)
ஆரியாகவஞ் சாந்தத்தளித்தபின்
வாரி நித்திலம் வைப்ப பொற் பூவொடு

சேரிதோறிது செல்வத்தியற்கையே.

என்று சீவகசிந்தாமணி என்னும் புத்த நூலில் கூறியுள்ளபடிக்கு பூர்வ புத்தமத அரசர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சேரி என்று வழங்கி வந்த வார்த்தையை விடாமல், நாளது வரையில் இவர்கள் வாசஞ்செய்யுங் கிராமங்களுக்கு சேரி என்று வழங்கி வருகிறார்கள்.

சூளாமணி

மற்றமா நகருடை மன்னன்றன்னுய / ரொற்றை வெண்குடை நிழலுலகிற் கோருயிர்ப்

பெற்றியான் பயாபதி யென்னும் பேருடை / வெற்றிவேன் மணிமுடி வேந்தர் வேந்தனே.

சிந்தாமணி

கோதை நிலத்திலஞ் . சூழ்குளிர் வெண்குடை / ஒத நீருல கொப்ப நிழற்றலால் தாதையே யவன்றா நிழற்றங்கிய / காதலாற் களிக்கின்ற திவ்வையமே.

ஞானவெட்டி

பூணூல் தரித்துக் கோள்வோம் ஐம்பொறியும் புலனையும் அடக்கிக் கொள்வோம்,
வேண விருதுகளும் விசிதமாய் வெண்குடை சாமரையும் பிடித்துக் கொள்வோம்.
வானவர் முனிவர் தொழும் பொன் விசிறி மரகத குண்டலத்தின் கவசங்களும்,

ஞானப்பிரகாச ஒளி திவ்யகுண நாதனினர்ச்சனையில் நிதமிருப்போம்.

என்று ஞானவெட்டி - சூளாமணி - சீவகசிந்தாமணி முதலிய புத்த நூற்களில் - புத்த அரசர்களுக்கும் - புத்த சன்னியாசிகளுக்கும் வெள்ளை யானை வெள்ளைக்குதிரை வெள்ளைக்குடை முதலிய பதினெட்டு விருதுகள் உண்டென்று கூறியிருப்பதற்கு ஆதரவாக நாளது வரையில் இவர்களுடைய விவாக காலங்களில் வெள்ளைக் குதிரை வெள்ளைக்குடை முதலிய பதினெட்டு விருதுகளுடன் ஊர்வலம் வந்து முகூர்த்தம் நடத்தி வருகிறார்கள்.

சாக்கைய முநிவராகிய புத்தர் அரசமரத்தடியில் உட்கார்ந்து ஞான நீதிகளைப் போதித்து மார்கழிமாதம் நிருவாணதிசையடைந்ததுபோல அவருடைய போதனையை அநுசரித்து வந்த அம்பிகை என்றும் சிந்தாதேவி என்றும் வழங்கிவந்த ஓர் பெண்ணானவள் வேம்புமரத்தடியில் உட்கார்ந்து நீதி நூற்களையும் ஞான நூற்களையும் போதித்து திரிகால சங்கதிகளையும் உணர்த்தி ஆடிமாதம் நிருவாணதிசையடைந்ததாக அம்பிகாதருமம், மணிமேகலை முதலிய புத்த நூற்களில் கூறியிருப்பதற்கு ஆதரவாக சீனதேசபுத்தர்கள் - சாம்பா - என்றும் - நேப்பால தேசபுத்தர்கள்: மாரி: என்றும் சிலோன் தேசபுத்தர்கள் - மாயி - என்றும் - அதே பெண்தேவதியை சிந்தித்து வருகிறார்கள்.